அலைஞனின் அலைகள்: புலம்

Thursday, April 28, 2005

ஒரு விவரணம்: உடற்கூறும் பிரேதப்பரிசோதனையும்

கறுப்பி, நற்கீரன், வெங்கட், ஸ்ரீரங்கன் ஆகியோரின் பதிவுகளிலே வாசித்த கருத்துகளின் தொடர்ச்சியான் எனது அவதானிப்பு.

இங்கே எனது நோக்கம், இராஜனி திரணகமவின் வாழ்க்கை பற்றிப் பேசுதலோ அல்லது அவரைப்போல பாதிப்பட்டும் குரல் வெளியாக வசதியற்றவர்களின் வாழ்க்கை ஏன் பேசுபொருளாக எடுக்கப்படவில்லை என்பது குறித்துப் பேசுவதில்லை; ஆனால், அவருடைய வாழ்க்கை விவரணமான இப்படத்திலே (அதை நான் பார்க்கவில்லை) எத்தனையோ முக்கியமான விடயங்கள் பற்றிப் பேசப்பட இருக்க, நாங்கள் தொடர்ந்து ஏன் யாரால் என்று சரியாக நிறுவப்படமுடியாத அவரது கொலை குறித்து மட்டும் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி குறித்தது.

விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்று ஆதாரமில்லாமல் நம்புங்கள் என்று நிற்கும் சிலரைப்போல, விடுதலைப்புலிகள்தான் கொன்றார்கள் என்று ஆதாரமில்லாமல் சிலரும் பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள் எனத் தோன்றுகின்றது. இணையத்திலே ராஜினி திரணகம என்று போட்டுத் தேடுங்கள்; அவர் கொலைக்குக் காரணம், புலிகள் என்பதிலே புலி எதிர்ப்பாளர்களிலே பெரும்பாலானோர் (அவரின் யாழ் பல்கலைக்கழக ஆசிரிய முறிந்த பனை நண்பர்கள்,சிங்கள ஊடகங்கள், நந்திகேசன், அவர் மனைவி வாசுகி நேசையா, அகிலன் கதிர்காமர் & Lines, டி. பி. எஸ். ஜெயராஜ் என்று நீளும் பட்டியல்) நிற்கின்றார்கள்; புலிகள் இல்லை என்பதிலே, புலி ஆதரவாளர்கள் பலர் நிற்கின்றார்கள். ஆனால், உண்மையாக நடந்தது என்ன என்பதை விவாதிக்கும் நாங்கள் எவருமே மூன்றாம் ஆட்களாகக்கூட அறிந்ததில்லை; அறியவும் போவதில்லை என்பதும் கவலைக்குரியதே. வெறுமனே, நான்காம் ஐந்தாம் ஆட்களுக்குமப்பால் நின்றுகொண்டு இரைச்சல் சேர்ந்த தரவுகளைப் பிரித்துப் பகுத்து ஆய்வு நிகழ்த்துகிறோம்.

அற்புதனின் வார்த்தையைமட்டும் நம்பிக்கொண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் கொன்றிருக்கலாமென்று எப்படி முழுக்க நம்பமுடியாதோ (அற்புதனைக் கொன்றவர்கள் யாரென்பதுகூட இன்னும் சரியாகத் தெரியவில்லை), அதேபோல, உறவினர்களைமட்டும் வைத்துக்கொண்டு, புலிகள்தான் என்று அடித்துச் சொல்லிவிடமுடியுமா? சாண்ட்ரா லிவி தொடக்கம் பல கொலைகள் இப்படியான உறவினர்களின் முழுநம்பிக்கைகளுக்கு மாற்றாக உண்மையான நிகழ்வுகள் இருந்திருக்கின்றன. வெளிநாட்டு விவரணங்கள் முழுக்க முழுக்க சார்பற்றிருக்குமென்று நம்ப முடியாது; அதையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் ஓர் எல்லைவரைக்குமே உய்த்தறியலாம். குறிப்பாக, வழக்கமாக நான் இயன்றவரை நடுநிலை என்று நம்பும் PBS இன் இலங்கை தொடர்பான விவரணம், Sri Lanka - Living with Terror இன் கோணல் என்னைத் திகைக்கவைத்தது. கலாநிதி. இராஜன் கூல், கலாநிதி ரொஹான் குணவர்த்தனா, கொழும்பிலே கண்ட ஒரு குண்டுவெடிப்பு இத்தனையையும் வைத்துக்கொண்டு தமிழ்ப்பயங்கரவாதத்தினை வரையறுத்து, இவ்வளவுதான் இலங்கைப்பிரச்சனை என்ற விதத்திலே சுருக்கி அமெரிக்கர்களுக்கு, அதுவும் செப்ரெம்பர் 11 இன் பின்னான தாம் கேட்டும் கண்டும் அறியாத எதற்கும் பயங்கரவாதமென்று சாயங்காட்டடினால் அஞ்சும் அமெரிக்க மனோபாவத்துக்கு, தந்திருந்தது அந்த விவரணம். இதேபோல, ராஜனி திரணகமவின் விவரணத்தினை Helene Klodawsky ஈழத்தின் போர் அவலத்தினைக் குறிக்க எடுத்திருந்தாரென்றால், அதுவும் இதேபோன்ற ஒரு ஜின்னியைச் சீசாவுக்குள்ளே அடக்கிக்காட்டும் சித்துவித்தையே. ஓர் ஒளிக்கீற்றீனைச் சுட்டி, மின்னலின் வலுவை உணர்த்தமுடியாது. ஏப்ரல், 27 அன்று NPR வானொலியிலே ஒரு விவரணம்; Scholars at Risk. கேட்ட அமெரிக்கர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியாது; ஆனால், எனக்குள்ளே இதிலே எத்துணையானது, தமக்குத் தேவையானதை உருப்பெருப்பித்து, தமக்கு எதிரானதை உருச்சிறுத்து அல்லது மறைத்துக்காட்டும் தன்மை என்ற கேள்வி எழுந்துகொண்டேயிருந்தது. இதேபோல, இந்த மே 8, ஈரானின் நோபல் பரிசு பெற்ற, Shirin Ebadi ஹாவார்டிலே பேசப்போகிறார்; அவரின் அபிப்பிராயம் எந்த விதத்திலே தமது புரவலர் குறித்தும் அவர்களின் நாடு குறித்தும் மனித உரிமை அளவிலே இருக்கின்றதென்பதை அறிய நேரே சென்று கேட்கும் எண்ணமிருக்கின்றது. நோபல் பரிசு பெற்றபின்னால், அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையைச் சாடியிருந்தார். ஆனல், இங்கே பேசும்போது, அதையும் சுட்டுகின்றாரா என்று பார்க்கவேண்டும்.

இதேபோலத்தான், க்ளோடாவ்ஸ்கியினையும் அவரின் படங்களையும் நான் அணுக விழைகின்றேன். ஹிட்லரின் மனிதவதைமுகாமிலிருந்தவரின் மகளான Klodawsky பலஸ்தீனியர்களைப் பற்றி எடுத்த படம், Shoot and Cry இனை நான் பார்க்கவில்லை அதிலே இஸ்ரேல்-பலஸ்தீனிய உறவுகளைப் பற்றிச் சொல்லும்போது, நடுநிலை தவறாதிருக்கின்றாரா என்று பார்க்க விரும்புகிறேன்.

ராஜினியின் சேவையை எவரும் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடமுடியாது. வெளிநாடொன்றிலே இயன்றவரை பத்திரமாக இருந்துகொண்டு, தான் வெளியே வசதியாக வாழ வழியிருந்தும் தன்நாட்டுக்குத் திரும்பிச் சேவை செய்ய விரும்பிய ஒருவர் குறித்து நாம் குறைவாக எந்தக்காரணம் கொண்டும் மதிப்பிட அருகதையற்றவர்கள். (ராஜனி இலண்டனிலிருந்து திரும்பிப்போகமுன்னால், தன்னோடு பேசியவை குறித்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எங்கோ - (உயிர்நிழல்/எக்ஸில்/இருள்வெளி??)- ஒரு கட்டுரை எழுதி வாசித்திருந்தேன்). கூடவே, புலிகளை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஈழப்போராட்டத்தைமட்டுமே முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தும் தேவையும் எமக்கு இருக்கக்கூடாது; ஆனால், நான் அவதானித்த அளவிலே, மனித உரிமைமீறலென்றால், பிடி விடுதலைப்புலிகளை என்று விரலைச்சுட்டும் முழங்காலடிக்கு மூன்றடி துள்ளும் மனப்பாங்கு தம்மை மனித உரிமையின் காவலர்களென்று நிறுவிக்கொள்ள முயல்கின்ற புலம்பெயர் தமிழர்களிலே குறிப்பிட்ட சாராரிடம் இருக்கின்றது. இப்படியான பொதுமைப்படுத்துதல் சரியான போக்கென்று எனக்குத் தோன்றவில்லை; இது நீங்கி, ஒதுங்கிநின்று ஒவ்வொரு சம்பவத்தினையும் தனித்தனியே பார்த்து மெய்யுணரும் உளநிலை எங்களுக்கு வரவேண்டும்.

இந்த விவரணம், No More Tears, Sister: Anatomy of Hope and Betrayal இனைச் சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது பார்க்க விருப்பமுண்டு. ஆனால், இந்த விவரணத்தின்மூலம் நான் அறிந்து கொள்ளவிரும்புவதிலே, கடைசியான நோக்கமாகக்கூட, ராஜனியினைக் கொன்றவர் யார் என்பதாக இருக்காது; என்னளவிலே, இதன் நோக்கு, குறைந்த பட்சம், ஈழத்தமிழர்களிடையேயான தம் விழுமியங்கள் குறித்த மீள்பார்வைக்கேனும் இஃது உதவும் என்பதாகவும் ஈழப்போராட்டம்சாராத ஒரு மேலைத்தேயரின் பார்வை என்று கூறப்படுவது எப்படியாக இருக்கின்றது என்பதை அறிவதாகவும் மட்டுமே இப்போதைய எதிர்பார்ப்பிருக்கின்றது.

2005, ஏப்ரில் 28 13:39 கிநிநே.

0 Comments:

Post a Comment

<< Home