அலைஞனின் அலைகள்: புலம்

Tuesday, December 28, 2004

எதேச்சையாய் எண்ணங்களும் அலையும்

ஊழியலை திருகோணமலையைத் தாக்கியது தமிழ்நெற்றில் அறிந்தது தொட்டு, குடும்பத்தினரின் நிலை அறியும்வரையுமான உள, களநிலையை விரித்தால், ஒரு புதினம் தேறும்; அதனாலே, அதைப் புதினமாகவே எழுத வைத்துக்கொள்கிறேன்.

இந்தப்பேரலை-அழிவின் பின்னாலே படும் செய்திகளின் அடிப்படையிலே இப்போதைக்குச் சில எண்ணங்கள்

1. இந்த அநர்த்தத்தினை முழுவதுமாகத் தவிர்த்திருக்கக்கூடுமென்று எனக்குத் தோன்றவில்லை; இந்தப்பூமிக்கீழ் நிலநடுக்கம் காரணமாக, இந்து மாகடல் இதுவரை பாதிக்கப்பட்டதில்லை; பொதுவாக, இந்நிலை பசிபிக் மாகடலுக்கான - அதன் கீழான பூமியமை பிறழ்வுகளின் உராய்வுகளின் விளைவான- அவநிலை. அதனாலே, இந்துமாகடலிலைச் சுற்றி வரலாற்றுத்தரவுகளினடிப்படையிலே இந்த அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதொன்றல்ல; அந்நிலையிலே நாளாந்த வாழ்நிலைக்கே அல்லாடும் மக்களைக் கொண்ட அபிவிருத்தி அடைந்துவரும் இந்துமாகடல்நாடுகள் இது குறித்த முன்னெச்சரிக்கைத்திட்டங்களை வைத்திருந்திருக்கவேண்டுமென்று குற்றம் சாட்டுவது பொருத்தமாக இருக்காது. ஆனால், குறைந்தபட்சம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலே ஓரளவுக்கேனும் இறந்தார் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம். மணிக்கு 870 மைல் என்ற கதியிலே ஊழியலைகள் பயணம் செய்ய வல்லன என்பதைக் கருத்திலே கொண்டு பார்த்தாற்கூட, இலங்கை + இந்தியா போன்ற நாடுகளை சுமத்திரா எல்லையிலிருந்து வந்தடைய ஏறக்குறைய இரு மணிநேரங்கள் ஆகியிருக்கும். இந்நிலையிலே ஒரு மணிநேரத்தின் பின்னாகவேனும் அறிய வசதியிருந்திருக்க வேண்டும் (இத்தனை செயற்கைக்கோள்கள், நிலநடுக்கத்தரவெடு நிலையங்கள் உலகம் சூழ இருக்கின்ற நிலையிலே); அப்படியான கூட்டுதவிகள் செய்யப்பட்டிருப்பின், உயிரழிவு பேரளவிலே குறைக்கப்பட்டிருக்கலாம். குறைந்தபட்சம், எதிர்காலத்திலேனும் இப்படியான பேரழிவுகளை ஓரளவுக்கு எதிர்வுகூறும் அறிவியல் வசதிகளை இந்துமாகடல்நாடுகள் அமைத்துக்கொள்ளவேண்டும்.

2. இன ரீதியான அரசியலும் இப்போதைய இழவுநிலைக்கான நிவாரணமும்; 'வடக்கு-கிழக்கு தாழ்கிறது; தெற்கு-மேற்கு வாழ்கிறது' என்ற குரல் எழுந்திருக்கின்றது; வடகிழக்கின் பெரும்பகுதி புலிகளின் கையிலே இருந்தபோதும், புவியியல்சார் அமைவிலே வடகிழக்கிலேயே பாதிப்பின் அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தபோதுங்கூட, நிவாரணம் இலங்கை அரசின் கைகளினூடாகச் செல்லும்போது எதற்கு, எங்குப் போகப்போகின்றதென்பதிலே பெரும் கேள்வி எழாமலில்லை; ஏற்கனவே, திருகோணமலைக்குச் சென்ற நிவாரண உதவி ஹபரண இலே வைத்து சில சிங்களசமூகத்தினராலே காலியிற்குக் கொண்டுபோகப்படவேண்டுமென்று அடாவடித்தனத்துடன் இடைமறிக்கப்பட்டிருக்கின்றது; வைத்திய உதவியோ வடக்கு-கிழக்கு. எதிர்.தெற்கு-மேற்கு என்று பார்க்கும்போது, குழியும் மலையும் போல வேறுபட்டிருக்கின்றது; இதற்கு அரசியல்ரீதியான நிலையும் போக்குவரத்து வசதியும் ஓரளவுக்குக் காரணமென்பதினை மறுப்பதற்கில்லை. ஆனால், முன்னைய அனுபவங்கள் எச்சரிக்கையோடு இருக்கச் சொல்கின்றன. இந்நிலையிலே இரண்டு விதங்களிலே இலங்கையின் வடக்கு-கிழக்கு சார்ந்தவர்கள் தொழிற்படவேண்டும் - குறிப்பாக, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மக்கள்; ஒன்று, தாம் நிவாரணநிதி வழங்கும் நாடுகளிலே வாழ்ந்தால், அந்த அரசுகளை இந்நிதிகளை இலங்கை அரசு சார்பற்ற, உலக நிறுவனங்களூடாகக் கொடுக்கும் வகை செய்கின்றதா என்று காண வேண்டும்;, அப்படி இல்லாத பட்சத்திலே அவ்வாறு இருக்க நிர்ப்பந்திக்க வேண்டும் (நேற்று, கனடாவின் CTR வானொலி, அந்த வகையிலே தொராண்டோவின் ஓர் அரசியல்வாதியினை தமது வானொலிக்கு அழைத்து, கனடிய அரசு அவ்வாறு செய்கின்றதென்பதை உறுதிப்படுத்திக்கொண்டது); குறைந்தது, நிதிவழங்கும் அரசின் பிரதிநிதிகள், இந்த நிதி பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இனம், மொழி, மதம் சாராது சென்றடைகின்றதென்பதை உறுதிப்படுத்தும்வண்ணம் அனுப்பவேனும் நிர்ப்பந்திக்கவேண்டும்; அரசுகளைச் சாராது நிதி வழங்கும் வெளிநாட்டுத்தமிழர்கள், அரசு/அரசியல்சாரா தமிழ் நிறுவனங்களூடாக அனுப்ப முயலவேண்டும். பல பெரு, சிறு அமைப்புகள் இருக்கின்றன; ஆனால், ஒவ்வோர் அமைப்புக்கும் கொடுக்கப்படுவது, செல்லவேண்டிய இடத்தினை, வேண்டிய காலத்திலே சென்றடைகின்றதா என்பதினை வழங்குவோர் அறிய வழிவகையும் செய்யப்படவேண்டும். இது மிகவும் அவசியம். தவிர, வடக்கு-கிழக்கிலே தமிழர்சார் நிறுவனங்கள் உதவிசெய்யும்போது, பாதிக்கப்பட்டார்களின் தேவைகளையும் அவர்களுக்கு எந்தளவு அத்தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும் நோக்கி, அவசியத்தின் வரிசைக்கிரமத்திலே உதவி செய்யவேண்டுமேயழிய, இனம்-மதம்-மொழி-பிரதேசம்-சாதி அடிப்படையிலே செயற்படக்கூடாது; இதனை வடக்கு-கிழக்கிலே பெரும்பகுதியினைத் தம் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருக்கும் விடுதலைப்புலிகள் ஓரளவுக்குக் கண்காணிக்கவேண்டும். அரசியல்ரீதியிலேகூட, இவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கும் முஸ்லீம்கள், சிங்களவர்கள் ஆகியோரிடம் தங்களின் நல்லெண்ணத்தைக் காட்டுவதற்கும் நட்பேற்படுத்திக்கொண்டு விரிசல்களை ஒட்டமுயலவும் இது நல்லதொரு தருணம்.

3. இன்றைய நெகிழ்வுநிலையும் இலங்கைப்பிரச்சனையின் இராணுவரீதியான சமநிலைப்பிறழ்வும்; இவ்வூழியலை அநர்த்தத்தின்விளைவாக, பருத்தித்துறையிலிருந்த முனை இராணுவமுகாம் போன்ற பெரிய இராணுவமுகாங்களிலிருந்து, நிலாவெளி இராணுவமுகாம், மட்டக்கிளப்பிலே சில சிறிய இராணுவமுகாங்கள் ஆகியன முழுக்க அழிந்துள்ளன என்பதாகச் செய்தி; கூடவே திருகோணமலை கடற்படைத்தளமும் சேதமடைந்திருக்கின்றது; 58 அளவிலே இராணுவ அதிகாரிகள் இறந்திருப்பதாக, ஸ்ரீலங்கா அரசின் தகவல். புலிகளின் தரப்பின் அறிக்கையின்படி, ஆகப் பதினைந்து கடற்புலிகள் இறந்தும் சில படகுகள் அழிந்துமிருக்கின்றன. ஆனால், இலங்கை அரசின் ரூபவாஹினி கடற்புலிகளின் தளபதி சூசை கூறியதாகச் சொல்லி, பெருந்தொகையான புலிகளும் புலிகளின் கிழக்கு வடமராட்சி, முல்லைத்தீவு பகுதிகளிலே அமைந்திருக்கும் சில முகாங்களும் தளங்களும் முற்றாக அழிந்திருப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இதைப் புலிகள் மறுத்திருக்கின்றனர். உண்மை பொய் எதுவோ, சூசைக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைக்குமிடையே கருத்து பேதம் என்றதொரு அபிப்பிராயத்தை உருவாக்க, ஸ்ரீலங்க அரசும் இராணுவமும் கடந்த மூன்று மாதங்களாகவே முயன்று வருகின்றன. அடுத்ததாக, ஸ்ரீலங்கா அரசு கேட்டிருக்கும் நிதியுதவியும் பொருளுதவியும் பொருளாதாரத்திலும் இராணுவநிலையும் நலிந்திருக்கும் ஸ்ரீலங்கா அரசின் நிலையை மேம்படுத்தத் திசை மாற்றி எடுக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்; சில நாடுகள் இப்படியான நிலையை இலங்கை அரசுக்கு மறைமுகமாக உதவ எதிர்பார்த்திருப்பதும் தெளிவு. இதன் காரணமாகவே, அரசுக்குப் போகும் செலவுக்குக் கணக்கு வெளிப்படையாக இருக்கவேண்டும். இன்னொரு நடைமுறைப்பெரும்பிரச்சனை, வெள்ளம் காரணமாக புலிகள், இராணுவம் இரண்டு தரப்பினரும் புதைத்திருக்கும் கண்ணிவெடிகளின் இடநகர்வு; இந்நிலை புதைத்தவர் வெடிகுறிநிலப்படங்களும் எதற்கும் பிரயோசனமில்லை என்றாக்கியிருக்கின்றது; மக்களே பாதிப்புக்குள்ளாகப் போகின்றார்கள் என்ற அநியாயம்.

4. பண்பலை வானொலிகள் தமிழைக் கெடுக்கின்றதென்று கத்திக்கொண்டிருந்தவர்களிலே நானும் அடக்கம் (பண்பாட்டினைக் கெடுக்கின்றதென்று எனக்கு எப்போதும் கவலையிருந்தவில்லை). ஆனால், கனடாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, கொழும்பிலும் சரி; இந்த வானொலிகள் தங்கள் முகத்தினைப் பிரகாசப்படுத்திக்கொண்டு நற்பெயர் பெற உழைத்தன என்று கொண்டாலுங்கூட, அவற்றின் சேவை கடந்த இருநாட்களிலே மிகவும் பயனாக இருந்திருக்கின்றன. இவ்வகை வானொலிகள் இன்றி இப்படியான நிகழ்வுகள் சாத்தியமில்லை என்று கூறும்வண்ணம், நிதியுதவி சேர்க்கவும் காணாமற்போனோர் பற்றிய விபரங்களைப் பரிமாறி தொடர்புகளை ஏற்படுத்திக்கொளவும் உதவியிருக்கின்றன. அந்த வகையிலே மனிதனுக்குப் புரியச்சொல்லும் மொழி கிடக்கட்டும், மனிதனை வாழவைக்கும் செயற்பாட்டின் விளைவினைச் சுட்டிப் பாராட்டியே ஆகவேண்டும். இணையமும் இதுபோல ஓரளவுக்கு உதவுகின்றது.

5. இனியும் தொடராக, ஆனால், சிறிய அளவிலே நடுக்கத்தின் பின்விளைவு எதிரொலிக்கும்; ஆனால், அ·து பெருமளவிலே உயிர்கொல்லுமளவிலே இருக்கப்போவதில்லை. இனி அப்படியேதும் உயிர்கொல்லும் நிலையின் நிலநடுக்கமும் ஊழியலையும் வருமானால், அது கொல்லவேண்டியவர்கள் யார்யார் என்ற பட்டியலிலே அடங்கும் சிலர்:- "கொட்டாஞ்சேனை ஆஞ்சநேயர் இது நடக்கமுதல்நாள் ஒற்றைக்கண் திறந்து பார்த்தார்" என்கிறவர்கள்; "ஸ்ரீரங்கம் கோபுரம் உயர்ந்து போனதாலே" என்கின்றவர்கள்; "அல்லாவின் அல்வாக்கூத்து, அல்லேலுயாவின் பராட்டாகொத்து" என்கிற படுபாவிகள்; "ஜெயேந்திரரைப் புடிச்சதால தெய்வக்குத்தம்; வீரப்பனைச் சுட்டதால வீரமாகாளி ஆவேசம்" என்று விபரீதமாக விக்கெட்டு வீழ்த்துகின்றவர்கள்; "எண் சாத்திரப்படி வந்த இழவு" என்று எதிர்காலத்துக்கும் இழவுக்குறி எடுத்துச் சொல்கின்றவர்கள் & செல்கின்றவர்கள்; "நொஸ்ரடாம், காண்டம்" என்ற உசாத்துணை அகவுகின்ற கிளிகள்; "திருவாதிரை நட்சத்திரத்திலே வைகை பெருகி பிட்டுக்கு மண்சுமந்த நாளிலே, இந்தக்கடல்....." என்று அறிவியல் சாராமல் முழுக்க முழுக்க காகம் குந்தியதும்-பனம்பழம் கழண்டதும் கதை சொல்கிற ஆசாமிகள். ஆதிரைநாளிலே தீர்த்தமாடிய காரைநகர்ச்சிவன்கோவிற்காரர்களுக்கும் மோட்சவிளக்கு; முல்லைத்தீவிலே தேவாலயத்திலே யேசு பிறந்ததைக் கொண்டாடியவர்களுக்கும் இறப்பு; நிந்தாவூரிலோ, காத்தான்குடியிலோ மதராஸிவிலே குரான் ஓதிக்கொண்டிருந்த நாற்பது சிறாருக்கும் அதே(¡)கதி; கடவுளையும் எண்கணக்கையும் இழுத்து உள்ளாற அமைதிப்படுத்திக்கொள்ளாலாம்; ஆனால், அதுவே தீர்வாகாது; கொடுத்தவன் எடுத்தான் என்பது அரூபத்தீர்வாகலாம்; நடைமுறைக்கு அடுத்த நிலைக்கு என்ன வழி என்பதைக் காணவேண்டும்.

6. ஒரு சின்ன நிம்மதி; இனி, பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஸ்ரீலங்கா என்றால் எங்கே இருக்கின்றது என்பது குறித்தோ அல்லது இரண்டு மணிநேர இட, கால, அரசியல் விளக்கத்தின்பின்னும், "So, basically, which part of India?" என்ற மண்ணாங்கட்டிக்கேள்விகள் குறித்தோ பதில்கூறும் தொந்தரவு குறையுமென்று ஒரு நம்பிக்கை.

1 Comments:

 • The United Nations' children's fund said Sri Lankan survivors faced an unexpected threat from some of the 2 million land mines buried there as the result of ethnic conflict.

  "Mines were floated by the floods and washed out of known minefields, so now we don't know where they are," UNICEF's Ted Chaiban said in Colombo.

  "The greatest danger to civilians will come when they begin to return to their homes, not knowing where the mines are."

  :((

  Reuters(ABC)

  By Blogger பரி (Pari), at 1:31 PM  

Post a Comment

<< Home