அலைஞனின் அலைகள்: புலம்

Wednesday, January 12, 2005

தத்து மேலே பட்டது

ரஜனி ராம்கி தத்தினைக் குறித்து எழுதியதன்பின்னே கடந்த இரு வாரங்களாக இதன்மேலே தோன்றியதை இங்கே குறிக்கிறேன்.

கடற்கோளினாலே பாதிக்கப்பட்டு, பெற்றோரினையோ அல்லது பாதுகாவலர்களையோ இழந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பேசப்படுவது மிகவும் மகிழ்ச்சியினைத் தருகின்றது. இவர்களின் எதிர்காலத்தினை நிச்சயப்படுத்தும் ஒரு நடைமுறைச்சாத்தியமாக, தத்து எடுப்பது முன் வைக்கப்பட்டிருக்கின்றது. தத்துக்கொள்ளுதல் என்பது சிறந்ததே என்றபோதுங்கூட, இந்தக்கடற்கோளினாலே பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாகத் (ஆறுமாத காலம் என்பதையும் அப்படியான காலவெல்லை என்றுதான் கருதுகின்றேன்) தத்தெடுத்தல் என்பதிலேயிருக்கும் சில நடைமுறை, உளநிலைச்சிக்கல்களைத் தத்தெடுக்க விரும்புகின்றவர்கள் கவனிக்கவேண்டுமென்று தோன்றுகின்றது. சட்டரீதியான சிக்கல்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.; அதனாலேயே, அண்மைய நிலவரத்தினை அவதானித்ததின் விளைவாகத் தோன்றிய நடைமுறை, உளநிலைச்சிக்கல்களைமட்டும் குறிக்கின்றேன். எம்மிலே பலருக்கு இந்த எண்ணங்கள் தோன்றியிருந்திருக்குமென்றாலும், அவற்றினை மேலே பேசுதல் குறித்து, இங்கே பொதுவிலே குறித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

உளநிலைச்சிக்கல்களை இரண்டு வகைகளாக இந்தச்சூழ்நிலையிலே அடக்கமுடியும்; ஒன்று, குறுகியகாலநோக்கிலே, குழந்தைகளின் உடனடிக்கால உளநிலையின் விளைவான சிக்கல்கள்; குழந்தைகளை குறைந்தபட்சம், திடீரென அநாதைகளான குழந்தைகளுக்கு அந்நிலையைச் சமித்துக்கொண்டு, உலகை எதிர்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். அதற்கு அதேபோன்ற சூழ்நிலையிலே, உளநிலையிலே இருக்கும் குழந்தைகளுடன் கூட இருப்பதே மிகவும் பொருத்தமானதாகும். 'தான் மட்டும் தனித்துப்போகவில்லை' என்ற உணர்வு ஏற்படவும் தன்னுட்சுருண்டுபோகாமல், சமுதாயத்துக்கு மீள வந்தடையவும் இப்படியான கூட்டுவாழ்க்கையும் கற்கையும் கொஞ்சக்காலத்துக்கேனும் கட்டாயமானதாகும். அடுத்ததாக, பாதிக்கப்பட்டு க் கொஞ்சக்காலத்துள்ளே (ஆறுமாதகாலமானாலுங்கூட) புதிதாக ஒரு குடும்பத்திலே போய் இணையும்போது, குழந்தை ஏற்கனவே நொந்திருக்கும் மனநிலையிலே புதியசூழலையும் எதிர்கொள்ளவேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகும் - குறிப்பாக, தத்தெடுத்துக்கொள்கின்றவர்களுக்கு ஏற்கனவே சொந்தக்குழந்தைகள் இருப்பின், அ·து மனவுறுதியினையும் கூடிவாழுதலையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக மனமுறிவினையே தான் இழந்த சொந்தப்பெற்றோரை நினைத்து ஏற்படுத்த உதவும். மேலும் கூடி இருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிலே சில உடனடியாகத் தத்தாக்கிப் போனால், ஏற்கனவே பாதுகாப்பு உணர்வு முற்றாகச் சேதமடைந்த உளநிலைப்பட்ட ஏனைய குழந்தைகள் தாழ்வுச்சிக்கலினாலே அழுந்தக்கூடிய அபாயங்கூட இருக்கலாம்.

மற்றது, நீண்டகாலப்போக்கிலே, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் தத்தெடுத்தவர்களும் எதிர்கொள்ளக்கூடிய உளச்சிக்கல்கள். தத்து எடுக்கவேண்டுமென்று நெடுங்காலமாக எண்ணி, அதற்கேற்ற வகையிலே தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டவர்கள் குறிப்பிட்ட அளவிலேயிருந்தாலுங்கூட, இன்றைய சூழ்நிலை அலையிலே அடித்துப்போகப்பட்டு மனம் நெகிழ்ந்து தத்து எடுத்துக்கொள்ள எண்ணுகின்றவர்களே பலர் என்று எனக்குத் தோன்றுகின்றது. இப்படியான இரண்டாவதுவகைப்பட்டவர்கள், கணத்தாக்கு உணர்ச்சியலை வடியச் சிறிதுகால அவகாசத்தினை எடுத்துக்கொண்டு, அதன்பின்னாலேயும் தாம் அப்படியான முடிவினை எடுப்பது சரியா என்று தம் முடிவினைத் தாமே உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அல்லது நீண்டகாலநோக்கிலே, இப்படியான தத்தெடுத்தல்கள் எவ்வகையிலும் சம்பந்தப்பட்ட இரு சாராருக்கும் நலம் பயக்காது. மேலும், குறிப்பாக, தமிழ்நாடு, இலங்கையைப் பொறுத்தமட்டிலே எனக்குப்படுவதென்னவென்றால், பால், மதம், மொழி, சாதி கடந்து தத்து எடுத்துக்கொள்ள முன்வரவேண்டும். அப்படி நிகழும் நேரத்திலே, அப்படியான தத்தினை சட்டம் ஏற்றுக்கொள்ளவும் தத்தெடுக்கின்றவர்கள்-தத்தெடுக்கப்படும் குழந்தைகள் இருவரும் நாளாந்த வாழ்க்கை நெருடாமல், இயல்பாக உணரும்வகையிலும் இருக்கவுங்கூடிய நிலை இருக்கவேண்டும். அப்படியான பரந்துபட்ட தத்து நிகழாத சந்தர்ப்பங்களிலே ஏதோவொரு வகையிலே சில குழந்தைகள் தங்களின் இழந்த பெற்றோரினது அடையாளங்கள் குறித்துத் தம் சுயம் மறுக்கப்படுகின்ற அவநிலையை உருவாக்குகின்றோமென்றாகின்றது.

நடைமுறைச்சிக்கல்களிலே, முக்கியமானதென்னவென்றால், நாம் இன்னமும் நிகழ்ந்தது என்னவென்று முழுமையாக அறிந்துகொள்ளாமல், பகுதியான அறிதலினையும் மீதிப்பகுதிக்குத் தெளிவின்மையையும் கொண்டிருப்பதனாலே ஏற்படுவது. குறிப்பாக, இலங்கையிலே இப்படியான நிலையைக் காண்கிறேன். குழந்தைகளுக்கு அவை அறிந்த உற்றார் உறவினர்கள், எதிர்காலத்திலே சட்டரீதியாக மட்டுமல்ல, இலகுவாக நம்பிக்கை கொள்ளக்கூடிய உணர்வுரீதியிலான பிணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளக்கூடியவர்களாகலாம். அப்படியானவர்கள் குறித்த விபரங்களே சரிவர வந்தடையாத நிலை இருக்கின்றது. இப்படியாக ஏற்கனவே சேரக்கூடிய நம்பிக்கையான குழந்தைகளை அவசரப்பட்டுத் தத்து எடுத்துக்கொள்ள முயல்வது, நல்ல எண்ணத்தினைக் குறித்தாலுங்கூட, எதிர்காலத்திலே சட்டரீதியான, உளரீதியான கெடுதல்களை எவருக்குமே ஏற்படுத்திவிடக்கூடாது. தத்து எடுப்பவர்கள்கூட, சட்டம் ஒழுங்கினாலே தத்து எடுப்பதினை உறுதிசெய்துகொள்ளவேண்டும்; இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலே தத்து எடுத்துக்கொள்ளுதல், சட்டரீதியாக இப்படித்தான் வழிமுறை என்று வகுக்கப்பட்டிருக்கின்றபோதும், நடைமுறையிலே அப்படியாக பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே நடக்கின்றதா என்று தெரியவில்லை. இலங்கையிலே தற்காலிகமாக தத்தெடுத்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றதற்கும் தத்தெடுத்தலிலே உள்ள கோளாறுகளும் அதன்விளைவான குழந்தைகள் பண்டங்கள்போல கைகள் பரிமாறப்பட்டும் விற்கப்பட்டும் ஆகும் நிலை இருக்கின்றது. அப்படியான குழப்பகரமானதும் அபாயகரமானதுமான சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படவேண்டும்.

அதனாலே, தத்தெடுத்தலிலே அவசரப்படலாமா என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால், குழந்தைகளைப் பொறுத்தமட்டிலே அவர்களின் நாளை பெற்றோருக்கு ஈடான நிரந்திரமான தீர்வொன்றினாலே நிச்சயப்படுத்தப்படவேண்டியதொன்றென்றாலுங்கூட, தத்தெடுத்தலுக்கும் முன்னதாக நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசரகாரியமாக குழந்தைகளின் உளநிலையை உலகோடு மீண்டும் ஒட்டிக்கொள்ள வைக்கும்வண்ணம் மீளமைவு செய்தலும் அப்படியான இடைக்காலத்திலே பொருளாதாரரீதியிலே அவர்களின் தேவைகளை நிறைவு செய்தலுமே மிகவும் முதன்மையாகின்றன. விரும்பினால், தத்து எடுத்துக்கொள்ளவிரும்புகின்றவர்கள், தாம் தத்து எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ள குழந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திப்பேணிக்கொள்ளலாம்; அக்குழந்தைகள் தற்காலிகமாக வாழும் சூழ்நிலையிலே அதன் நிலையை மேம்படுத்த சிறிது காலத்துக்கு வசதிகளைப் பொருளாதார நிலையிலே (அக்குழந்தைகளைப் பாதுக்காக்கும் நிறுவனங்களூடாக) ஏற்படுத்த உதவலாம். காலப்போக்கிலே, குழந்தைகளை அவை ஏற்கனவே அறிந்த உணர்ந்த இரத்த உறவுகளிலே யாராவது தத்து எடுக்காத நிலையும் குழந்தைகள் உணர்வுநிலையிலும் தத்தெடுக்கவிரும்புவோரோடு பிணையுற்ற நிலையிலும் தத்துக்கொள்வது சிறப்பானதாகுமென்று படுகின்றது.

4 Comments:

  • பெயரிலி, இதை நீங்கள் அங்கேயே எழுதலாமே? இப்போது கூட அங்கே இதை இடும்படி கேட்டுகொள்கிறேன். மீட்பு பணியுடன் தொடர்புடைய எல்ல வகை விவாதங்களையும் அங்கே எழுதலாம்.!

    By Blogger ROSAVASANTH, at 12:50 PM  

  • Did Rajni Ramki write about adopting children two weeks back? Can you please give a link for the 2 weeks before writing? The link you have given me shows a date of Jan 12, 2005. Thats what Rajni Ramki told in Arul Kumaran chat. Thats not two weeks before. - PK Sivakumar

    By Blogger PKS, at 12:57 PM  

  • ரஜனி ராம்கி இருவாரங்களுக்கு முதல் எழுதவில்லை. அவர் எழுதியது இன்றுதான் (12 ஜன. 2005). என்னை இரு கிழமைகளுக்கு முன்னாலே இது பற்றி எண்ண வைத்தவை, ஊழியலை வந்து இரு நாட்களுக்குப் பின்னால், இலங்கை சக்தி வானொலியினூடாக ஒருவர் பசறை என்னுமிடத்திருந்து தொலைபேசி, தனக்கு மூன்று வயதான ஒரு பெண்குழந்தை இருப்பதாகவும் அதே வயதுடைய ஓர் ஆண்குழந்தையை இந்த நிர்க்கதியிலே தான் தத்து எடுக்க விரும்புவதாகவும் அப்படியான குழந்தையன்றைத்தேட, சக்தி வானொலி தனக்கு உதவமுடியுமா என்று கேட்டதும் மட்டக்கிளப்பு டச் பார் என்ற இடத்துக்குப் போன வத்தளையைச் சேர்ந்த இரு குழந்தைகளை ஒருவர் இந்த அலைநிகழ்வின் பின்னாலே, விற்றுவிட்டதாகவும் தேடித்தரும்படியும் அவர்களின் தாயார் கேட்டிருந்ததும். 'ரஜனி ராம்கி இருவாரங்களுக்கு முன்னே சொன்னதன் பின்னாலே, இருகிழமைகளாக எனக்குத் தோன்றியது' என்ற விதத்திலே தொனித்திருந்தால், மன்னிக்கவேண்டும்.

    நீண்டுவிட்டதால், சுனாமி வலைப்பதிவிலே எதிர்வினையாகச் சுட்டித்தரத்தான் இங்கே போட்டேன். வேண்டுமானால், தனி உள்ளீடாகப் போட்டுவிடுகிறேன்.

    By Blogger -/பெயரிலி., at 1:12 PM  

  • தனி உள்ளீடாக எழுத சொல்லித்தான் கேட்டேன். பொதுவாய் எதிர்வினை எதுவாயினும், விரிவாய் இருக்கும் பட்சத்தில் தனி உள்ளீடாய் எழுதவும்.

    By Blogger ROSAVASANTH, at 10:08 PM  

Post a Comment

<< Home