அலைஞனின் அலைகள்: புலம்

Saturday, February 12, 2005

எண்ணங்களின் எதிர்வினையாக, பிரகாஷ¤க்குச் சுருங்க

நந்தா கந்தசாமியின் ஓவியம்மீதான மதியின் எண்ணங்கள் பதிவிலே பிரகாஷ் இட்ட உள்ளீட்டத்திலே பெயரிலியின் பெயர் ஓரிடத்திலே குறிப்பிடப்பட்டிருப்பதால், பதில் இங்கே.
==========

பிரகாஷ், இங்கே என் பெயர் வந்ததால் அந்த விடயத்தின்மீது இது;

மனுஷ்யபுத்திரன் மனசு நொந்துபோவதற்கு நான் காரணமா என்று முறைக்கப்போவதில்லை. சுந்தரராமசாமிக்கும் அவருக்கும் சேர்த்துக் கிண்டல் செய்த ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் எதிராகக் கையொப்பம் போடச் சொல்லிக்கேட்டபோது, காலச்சுவட்டிலே மனுஷ்யபுத்திரன் இருக்கவில்லையா? காலச்சுவட்டிலிருந்து கையொப்பம் இடச்சொல்லிக் கேட்டுவந்த எத்தனையோ பேர்களிலே என் பெயரும் இருந்தது (இல்லாவிட்டால், என் இணைய அஞ்சல்முகவரிக்கு வந்திருக்காதல்லவா?) அப்படியாக இருந்தபின்னால், இன்றைக்கு மனுஷ்யபுத்திரன் எழுத்தாளர் கையொப்பம் போடுவது பற்றிச் சுந்தரராமசாமிக்குக் கேள்வி கேட்டால், என்ன செய்வது? (வேண்டுமானால், ஜெயமோகனுக்கும் திண்ணை(த்)தூங்கிக்குமிடையிலே உயிர்மையிலே பதிவுகளில் யாரோ எழுதி வந்தததை ஜெயமோகன் என்ன விதத்திலே திரித்துப்போட்டார் என்பது குறித்து வந்த பழைய கோபத்தின் காரணமாக நான் எழுதிவிட்டேன் என்றாவது கொள்ளுங்கள். பரவாயில்லை :-)) பழையவற்றைப் புகைக்காகப் பற்ற வைத்துக்கொண்டு சூடாக நானுங்கூட இங்கே ஒரு காபிக்கும் காரத்துக்கும் ஆடர் கொடுக்கலாம். எதற்கு?

இனி மேலே குறித்த ஓவிய விடயம் குறித்து; பா. ராகவனுடன் நீங்கள் அறியவே பல முறை புத்தகப்புழுக்காலத்திலிருந்து சொருகுப்பட்டிருக்கின்றேன். அதற்காக நீங்கள் அவர் உங்கள் நண்பர் என்ற முறையிலே என்னோடு 'பேசி'யிருக்கின்றீர்கள். அவர் குறித்த அவ்வப்போது சொல்லப்பட்ட அபிப்பிராயங்கள் அந்தந்த விடயங்கள் தொடர்பானவை. இங்கோ வெங்கடேஷின் புத்தகம் குறித்த பதிவிலே நந்தா கந்தசாமியின் ஓவியம் குறித்து அது முறையல்ல என்றது தவிர நான் ஒரு வரி ஏதும் பேசவில்லை. காரணம், இந்த 'என்னுடைய படம்' (அது சரி, பெரீய்ய்ய பப்படம்!). ஆனால், நீங்கள் என் பெயரையும் மதியின் எண்ணங்கள் பதிவிலே இழுத்துவிட்டிருப்பதாலே, (இந்தப்பதிவிலும்) விளக்கம் தரவேண்டிய நிலை. அந்தப்படம் குறித்த என் பதிலை மற்றைய பதிவிலே கண்டிருப்பீர்கள். [என் அணுகுமுறை இணையத்தூடாகத் தெரிந்த நட்பு, எடுக்கப்பட்ட என் படத்திலே என்ன கிடக்கின்றதென்ற வியப்பு, கூடவே, நானும் எனது வலைப்பதிவுகளுக்குப் படங்களை இணைப்பதுண்டு (fair use என்ற அளவிலே இப்போது Google image தேடலில் வரும் thumbnail அளவுக்கே நானும் இணைக்கிறேன் என்றபோதும்; இன்னமும் ஈழத்துப்படைப்பாளிகளின் படங்கள் விகடன், குமுதம் போன்ற இடங்களிலே வந்தால், நான் அவற்றினைச் சேகரிப்புக்காகச் சேர்த்து வைப்பதும் உண்டு) என்ற அளவிலே என்றதிலே இதெல்லாம் ஒரு பெரியவிடயமாக்காமல், மனைவி தவிர எவர்க்கும் இது நடந்ததே என்னாலே தெரியாமல் நகர்ந்திருக்கின்றேன். (காசி போன்றவர் அசுரன் அவரது எழுத்தினை அள்ளிப்போட்டது குறித்துச் செய்ததினை அணுகிய விதத்தோடு பார்க்கும்போது, நான் கையாண்ட விதங்கூட ஓரளவு அலட்டலாகத் தெரியலாம் :-))

ஆனால், நந்தா கந்தசாமி என்பவர் ஓவியத்தை மிகவும் ஆழமாகவே எடுத்துக்கொண்டவர். இணையத்திலே இல்லாதவர், சம்பந்தப்பட்டவர்களைத் தெரியாதவர் என்றளவிலே அதை இணையத்திலே தோழியர் பதிவிலே எடுத்திட்ட மதியின் பதிவு அவரை ஓவியருக்கு நியாயப்படுத்தவும் மற்றவர்களுக்கு அறியப்படுத்துவதும் அவசியம். என்னைப் பொறுத்தமட்டிலே, தோழியர் பதிவிலேயிருந்து அ·து எடுக்கப்பட்டதென்றால், மதி ஓர் எதிர்காலப்பதிவுக்காகவாவது பேசுவது நியாயமே. இல்லாவிட்டால், ஜெயமோகன் போல நாளைக்கு இணையத்தினரைக் கிண்டல் செய்துகொண்டே அதையும் விற்பனைப்படுத்தும் எழுத்துப்போக்கிரிகளுக்கு இணையத்தின் விரிவினைச் சுட்ட ஏதுமில்லை. [ஜெயமோகன் அருள்மொழிநங்கை பெயரிலே தஞ்சாவூர் பல்கலைக்கழகத்து ஆளொருவரினது இசைபற்றிய கட்டுரையை அள்ளிப்போட்டுப் பின்னாலே மன்னிப்புக் கேட்டதெல்லாம் சிலவேளை பதிப்புலக இலக்கியத்திறமைகளிலே ஒன்றாகப் பேசப்படக்கூடும்].

நிச்சயமாக, எனக்கும் "திருடன் பா.ராகவன்" போன்ற அநாவசியத்துக்கு அதீதப்படுத்தப்பட்ட பதங்கள் வெறுப்பையும் அருவருப்பையுமே ஏற்படுத்துகின்றன. பா. ராகவனின் கட்டளைகள் இழுத்துவந்த தெறிவினைகளோ தெரியாது; ஆனால், நிச்சயமாக திருடன் என்ற பதம் அதீதம். ஆனால், அப்படியான பதில்களுக்கு மதி என்ன செய்யமுடியுமென்பது எனக்குத் தெரியவில்லை. டிஜே குறிப்பிட்ட புதுமைப்பித்தன் விவகாரமும் மெய்யென்று அறிவீர்கள். காலச்சுவட்டிலே சிவக்குமார் இப்படியாக அள்ளிப்போடுவது குறித்து தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளையும் கண்டிருப்பீர்கள். தமிழக வர்த்தகப்பத்திரிகைகளின் இந்த அள்ளிப்போடும் விடயம் விடயம் குறித்து உங்களோடு ஒப்புக்கொள்கிறேன். (யாழ்மணம் என்ற பத்திரிகை தொடங்கிய ஆண்டிலே இப்படித்தான் எக்ஸிலிலே வந்த என்னுடைய கடிவகையை அள்ளிப்போட்டிருந்தார்கள்). படங்கள் மிகத்தாராளமாக சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தொடக்கம் பல இடங்களிலே அள்ளிப்போடப்பட்டிருக்கின்றன (இதிலே வாசகர்கள் தேடி அள்ளி அனுப்பி வைக்கின்றது வேறு). ஆனால், எல்லோரும் நடத்துகின்றார்களே என்பதற்காக அது சரியாகாது.

சம்பந்தப்படாமல், ஒரு கேள்வி; அசோகமித்திரனுக்குக் கிழக்குப்பதிப்பகம் நடத்தும் விழா மன்றிலே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட அசோகமித்திரனது அத்தொகுப்புகளையும் வாங்க வசதி உண்டா? இங்கிருந்து என்னுடைய நண்பர் ஒருவர் சென்னை வருகின்றார். அவரூடாக இயலுமானால், அதை அங்கே வாங்கி எடுக்க விழைவு.

கடைசியாக, வலைக்கு வந்து மனுஷ்யபுத்திரன் குறித்து வருந்தும் உங்களுக்கு நிச்சயமாக, பசுவோடு சேர்ந்து பிரபல கன்றாகத் துடிக்கும் பன்றியாக இருப்பதிலும்விட, தன்னிச்சையாகவே திரிய விழையும் சுயாதீன மூர்க்கப்பன்றிகளும் உண்டு என்பது தெரியுமென்பது என் நம்பிக்கை; 1998 இலே அருந்ததி ராய் குறித்து நா. கண்ணனாலும் 2004 இலே பிரமிள் குறித்து குப்புசாமி சிவகுமாரினாலும் 2005 இலே மனுஷ்யபுத்திரன் குறித்து பிரகாஷாலும் ஒரு வராகம் மூசிக்கொண்டே நிலம் தோண்டி நெடுநாளல்ல, இலக்கு அடைநாள் வரை அலையும். ;-)

அப்பாடா! அலையாமல், பெயரிலி சம்பந்தப்பட்டதற்குமட்டுமே பெயரிலி பதிலளித்திருப்பது அதுவும் பேயிலியாகப் பதிலளித்திருப்பது குறித்து பெயரிலிக்குப் பெரிய மகிழ்ச்சி. :-)

7 Comments:

  • ஆனால் பிரகாஷின் பின்னூட்டத்தை. மதியின் எண்ணங்களில் என்னால் காணமுடியவில்லையே! எதாவது பிழையா, அல்லது என் பார்வையிலா?

    By Blogger ROSAVASANTH, at 4:15 AM  

  • அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதிகள், சிறுகதைத் தொகுதிகள் (கவிதா வெளியீடு), கலைஞன், நர்மதா பதிப்பக வெளியீடுகளான சில கட்டுரைத் தொகுதிகள், நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள் ஆகியனவும் கிடைக்கும். அசோகமித்திரன் படைப்புகள் மட்டும்தான் கிடைக்கும்.

    By Blogger Badri Seshadri, at 4:16 AM  

  • பத்ரி நன்றி.

    வசந்த், :-(

    பிரகாஷ் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அநாவசியமாக வேறு யாரும் வேரு திசையிலே இழுக்கப்படுவதை விரும்பாமல், மதி பதிலிடும் வசதியை மூடிவிட்டாரோ தெரியவில்லை.

    By Blogger -/பெயரிலி., at 4:22 AM  

  • //[ஜெயமோகன் அருள்மொழிநங்கை பெயரிலே தஞ்சாவூர் பல்கலைக்கழகத்து ஆளொருவரினது இசைபற்றிய கட்டுரையை அள்ளிப்போட்டுப் பின்னாலே மன்னிப்புக் கேட்டதெல்லாம் சிலவேளை பதிப்புலக இலக்கியத்திறமைகளிலே ஒன்றாகப் பேசப்படக்கூடும்]. //


    இது பற்றி பதிவுகள் வீ(ர)வாத களத்திலே, இது ஒரு தவறு என்று ஒத்துகொண்டு எழுதியிருந்தேன். ஆனாலும் ஜெயமோகன் செய்தது தவறு என்றும் ஒத்துக்கொண்டிருந்தேன். நிறைய வெளியிடுவதில் இப்படி ஒரு தவறு நடப்பது சகஜம் என்பது போல் குறித்ததாய் நினைவு.ஜெயமோகன் இது குறித்து (மறைமுகமாய் ?) மன்னிப்பு கேட்டிருந்த பின்னரே எழுதியிருந்தேன். அது திட்டமிட்ட சுருட்டல் வகையறா என்று நீங்கள் சொல்வது , நான் எழுதியது குறித்து மறு பரிசீலனை செய்ய வைக்கிறது.
    அதைப்பற்றி இணையத்திலே (காலச்சுவடா?)வார்த்தைக்கு வார்த்தை , மூலத்தை காட்டி ஒருவர், எழுதியிருந்ததும் படித்தேன்.

    By Blogger SnackDragon, at 3:05 PM  

  • கார்த்திக்,
    நான் வாசித்தவரையிலே ஜெயமோகன் இன்னும் அது தான் கவனித்துச் செய்யாததாலே, நடந்த தவறு; திட்டமிட்டதல்ல என்றுதான் சொல்கின்றார். அ·து உண்மையாகவும் இருக்கக்கூடும்; இல்லாமலும் இருக்கக்கூடும். எங்களுக்கு எது உண்மை என்று தெரியப்போவதில்லை. ஆனால், அந்நிகழ்வைக்கூட, அவர் தான் அறியாமற் பிறழ்ந்த, நிகழ்ந்த செயலுக்காக மன்னிப்புக்கேட்டும் நேர்மைத்தனம் நிறைந்தவர் என்ற விதத்திலே இன்னொரு சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டித் தனக்குச் சாதகப்படுத்தக்கூடிய அபாயநிலைமையும் இருக்கின்றது என்றதையே சொன்னேன். (அதற்காக, அவரின் மன்னிப்புக்கோரல் அநாவசியமானதென்று சொல்லவில்லை)

    By Blogger -/பெயரிலி., at 3:49 PM  

  • புத்தப்புழுக்காலமெல்லாம் எதுக்கு? நிறைய முறை பேசி இருக்கிறோம். 'பேசியும்' இருக்கிறோம். இப்போது வெறுமனே பேசுகிறேன். நித்திலன் கதிர் நலமா?

    அசோகமித்திரன் விழா முடிந்த உடன், பால் சக்கரியா மற்றும் அசோகமித்திரன் உடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விழாப் பேச்சில் , சுந்தர.ராமசாமி நடத்திய அருவருப்பான மிமிக்ரி நாடகம் பற்றி, அசோகமித்திரனிடம் வருத்தம் தோய்ந்த குரலில் சில வார்த்தைகள் சொல்லி, என்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், சக்கரியாவும், அ.மி யும் சாகித்ய அகாதமி, மகாஸ்வேதா தேவி என்று என் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை மும்முரமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்குச் சால் ஓட்ட முடியவில்லை. . நடுவில் சக்கரியா சொல்கிறார்... " the gathering was amazing. I think lot of people in chennai read you". அதற்கு அ.மி, " it is not like that. todays crowd was not for me but for sundara.ramasamy. such a writer...commands a huge following in here... like your MT in kerala ( வெள்ளையாகச் சிரிக்கிறார்).

    ரமணீதரன், இலக்கிய உலகம், சுந்தர.ராமசாமிகளாலும், அசோகமித்திரன்களாலும் நிரம்பியது. அடியொட்டும் இணைய இலக்கிய உலகம், பிரபல பசுக்களுடன் அசோசியேஷன் வைத்துக் கொள்ள முயலும், என் போன்ற கன்றுக்குட்டித் தோற்றமுடைத்த வராகங்களாலும், உங்களைப் போன்ற சுயம்புகளாலும் நிரம்பியது.

    இவ்வியற்கைச்சமன்பாட்டை எவர் முயன்றாலும் மாற்ற முடியாது என்பதுதான் யதார்த்தம்.

    அன்புடன்
    பிரகாஷ்

    By Blogger Jayaprakash Sampath, at 5:32 PM  

  • /ரமணீதரன், இலக்கிய உலகம், சுந்தர.ராமசாமிகளாலும், அசோகமித்திரன்களாலும் நிரம்பியது. அடியொட்டும் இணைய இலக்கிய உலகம், பிரபல பசுக்களுடன் அசோசியேஷன் வைத்துக் கொள்ள முயலும், என் போன்ற கன்றுக்குட்டித் தோற்றமுடைத்த வராகங்களாலும், உங்களைப் போன்ற சுயம்புகளாலும் நிரம்பியது./

    1. அந்தப்புரிதல் போதும் ;-)
    2. சுயம்பு வேறு; சுயாதீனம் வேறு.
    3. சுயாதீனம் வெறும் சுயாதீனமல்ல, அதுவும் சுயாதீன வராகமே; ஆனால், கன்றென்று தோற்றமளிக்காத வராகம்
    4. சொல்லப்பட்ட சொற்கள் திரிக்காது இருக்கப்படும்போது, புரிதல் இலகுவாகிறது, பார்த்தீர்களா?

    /இவ்வியற்கைச்சமன்பாட்டை எவர் முயன்றாலும் மாற்ற முடியாது என்பதுதான் யதார்த்தம்./
    மறுக்கமாட்டேன்.

    /நித்திலன் கதிர் நலமா? /
    நலமே. விசாரிப்புக்கு நன்றி.

    By Blogger -/பெயரிலி., at 9:56 PM  

Post a Comment

<< Home