அலைஞனின் அலைகள்: புலம்

Monday, December 13, 2004

பினோஸேயின் வீட்டுக்காவலின் பின்னாக...


பினோஸே-அலன் டே

சோம்பலுக்குரிய இந்தத்திங்கட்கிழமை ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியோடு விடிந்திருக்கின்றது. சிலியின் பினோஸே (Pinochet) அவருடைய ஆட்சிக்காலத்தின் அடக்குமுறையின் சில நிகழ்வுகளுக்குப் பொறுப்பாகக் காட்டப்பட்டு, வீட்டுக்காவலிலே வைக்கப்பட்டிருக்கின்றார். இற்றைக்காலகட்டத்திலே செய்திகளிலே பெரிதும் பேசப்படாத முதலாவது செப். 11 இனை நடத்தியவர். பாக்கிஸ்தானின் பூட்டோ மூன்றாம் மட்டத்திலேயிருந்த ஸியா வுல் ஹக்கினை தலைமை இராணுவ அதிகாரியாக்கி விளைவாகப் பெற்றுக்கொண்ட வினைதான் அலண்டேயிற்கும் பினோஸேயிடமிருந்து கிடைத்தது. பினோஸே எப்போதுமே ஒரு விலாங்கு. அகப்படும் நேரமெல்லாம் நோயைக் காரணம் காட்டியோ, உலக அரசியலிலே பலம் பொருந்திய நண்பர்களின் தயவாலோ, தான் பதவி விலகும்போது பெற்றுக்கொண்ட சட்டத்தின் கைகளிலே விசாரிக்கப்படாதிருக்கப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொண்ட காப்பினாலோ தப்பிக்கொள்வார். இந்த செப். 11 இலே அமெரிக்காவின் உளவுநிறுவனத்தின் கை மிகவும் தெளிவு; அ.கூ.மாநிலங்களின் ஹென்றி கிசிஞ்ஸர் - நோபல் பரிசு பெற்றவராக இருந்தபோதுங்கூட- இந்த செப். 11 நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டி, உலக நீதி மன்றத்திலே விசாரிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை - ஈராக் போரினை இன்று ஆதரிக்கும் கிரிஸ்தோபர் ஹிகின்ஸ் ஊடான பலர் முன்வைக்கின்றனர். அரபாத்திற்கு நோபல் பரிசு கிடைத்ததை எப்போதும் சுட்டிக்காட்டி அலறும் அமெரிக்கப்பத்திரிகைகள் செய்தித்தாபனங்கள் கிசிஞ்ஸரின் செயற்பாடுகள் குறித்து மௌனம் சாதிக்கவே செய்கின்றன. இந்நிலையிலே பினோஸே இந்த முறையாவது சட்டத்தின் முன்னே சரியாக விசாரிக்கப்படுவாரா என்பது இன்னும் உறுதியாகச் சொல்லமுடியாத விடயமே. ஆனாலும், மந்தமும் மறதியும் வயதுகாரணமாக ஏற்பட்டிருக்கின்றது என்று வைத்தியரீதியாக வயோதிபத்தினை நோயாகக் காட்டியவர், அண்மையிலே புளோரிடாவிலே தன் முன்னைய செயற்பாடுகளை நியாயப்படுத்தி ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த செவ்வி அராஜகமானது.

அண்மைக்காலத்திலே உலகப்பிராந்தியங்களிலே எனக்கு நம்பிக்கை தருவதாக இருப்பது, இலத்தீன் அமெரிக்காதான். நெடுங்காலமான கைப்பொம்மைச்சர்வாதிகாரிகளுக்கெதிரான போராட்டங்களின் சோர்வுபட்ட நிலை, வலதுசாரி அரசுகளின் தீவிர வன்முறைகள் என்பன எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மொத்தமாகவே அவநம்பிக்கையை மட்டுமே இந்தப்பிராந்தியத்திலேயிருந்து காலிக்கொண்டிருந்தன. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, மெக்ஸிகோ முதல் ஆஜெர்ண்டீனிய-சிலி முனைவரை ஒரு நம்பிக்கை தெரிகின்றது. உலக வல்லரசினதும் அதன் கூட்டாளிகளினதும் பார்வை இஸ்லாமியத்தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ஈராக்கிலும் குவிக்கப்பட்டிருக்கின்றபோது, இலத்தீன அமெரிக்கா ஒரு புதியவீச்சைத் தருகின்றது. பிரேஸிலின் லோலா, வெனிசூலாவின் சாவாஸ், சிலியின் Lagos, ஆர்ஜெண்டீனாவின் Kirchner, உருகுவேயின் Vazquez ஆகியோர் நம்பிக்கையைத் தருகின்றனர். பழைய ஆட்சியாளர்களான பெருவின் பியூஜிமோரி, ஆர்ஜண்டீனாவின் கார்லோஸ் மெனம், கோஸ்ராரிக்காவின் Rodrங்guez ஆகியோர் ஏற்கனவே சட்டத்தின்பிடியிலே இழுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதேநேரத்திலே, இடதுசாரியினர் இப்புதியபோக்கினை இடதுசாரிகளுக்கான வெற்றி என்று கருதிக்கொள்ளமுடியாது. அரசியல்ரீதியிலே பெருமளவிலே இடதுசாரிகள் பதவிக்கு வந்தபோதுங்கூட - குறிப்பாக, தென் அமெரிக்காவிலே; மத்திய அமெரிக்காவிலே அவ்வாறு சொல்லமுடியாது- பொருளாதார அளவினானநிலையைப் பார்த்தால், திறந்தபொருளாதாரக்கொள்கைகள் இன்னும் திறக்கப்பட்டேயிருக்கின்றன; மற்றைய மூன்றாமுலக நாடுகளைப் போல, இப்பிரதேசத்திலும் தொழிலாளர்கள்மீதான பெருநிறுவனங்களின் சுரண்டல் தொடரவே செய்கின்றன. தத்தமது வாக்குவங்கிகளைக் காப்பாற்றிக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசியல்வாதிகள் அவ்வப்போது குரலெழுப்பினாலுங்கூட, தமதுநாடுகள் மீதான கடன்களை நீக்குவதிலும் குறைப்பதிலும் பெருநிறுவனங்களின் சுரண்டல்களைத் தவிர்ப்பதிலும் எந்தளவு வெற்றி பெறமுடியுமென்பது கேள்விக்குறியானதே. போதாக்குறைக்கு இடதுசாரி அரசாங்கத்துக்கு எதிராக (எரிபொருட்)பெருநிறுவனங்களின் தொழிலாளர் அமைப்புகள் நிற்கும் புதியநிலையை வெனிசூலாவிலே காணக்கூடியதாக இருக்கின்றது. எழுபது எண்பதுகளிலே ஆளுக்காள் எதிராக ஆயுதமேந்திப் போராடிய வலதுசாரி, இடதுசாரி போராளிகள் கூட்டாக வேலைகேட்டுப் ஆயுதமில்லாப்போராட்டம் நிகழ்த்தும் புதுநிலையும் மத்திய அமெரிக்காவிலே தெரிகின்றது. முன்னைப்போல, எதையும் வலது-இடது, முதலாளித்துவம்-பொதுவுடமைத்துவம் என்று இலகுவாக நடுவே ஆழிக்கோடுபோட்டுப் பிரித்துப் பேசும் எளியநிலையிலே இனிமேலும் உலகு இல்லை என்பது தெளிவாகின்றது. விரும்புகின்றோமோ இல்லையோ, இந்தக்கொள்கைகள் இன்றைய நிலையை முழுமையாக விளக்கப்போதா; முன்னெடுத்துச் செல்லவும் போதா. நடைமுறையை ஏற்றுக்கொள்கின்றபோது, நிகழ்வுகளைப் புரியவும் எதிர்வினைகளைப் புரியவும் இன்னொரு அல்லது பல மூன்றாம் (நான்காம், .... முடிவிலிப்) பாதை(கள்) தேவைக்கும் தேடலுக்குமுரியன. ஆனால், எந்த முழுமையான கொள்கை அகப்பட்டாலுங்கூட, அது பினோஸேயின் செயற்பாடுகளை நியாயப்படுத்தமுடியாதென்பது என் முழுமையான நம்பிக்கை.

3 Comments:

 • நல்ல விஷயம்தான் (இப்பொழுதுதான் நான் சதாம் கைதானதன் முதலாம் ஆண்டு நிறைவைப் பற்றி எழுதினேன்). சுகவீனமாக இருக்கும் பினாஷேயைப் பொருத்தவரை இல்லக்காவல் என்பதற்கு பெரிதும் ஒரு அர்த்தமும் கிடையாது. காலதாமதம் ஆனாலும் பினாஷே தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதில் ஐயம் கிடையாது.

  நீங்கள் சொன்னதைப் போல லத்தீன் அமெரிக்க நாடுகளில் இப்பொழுது ஒரு தெளிவு பிறக்கத் தொடங்கியிருக்கிறது. (அமெரிக்காவின் கவனம் ஒருவர் மீது இல்லாவிட்டால் அவர் முன்னேறுவது உறுதி என்று ஒரு கட்டுரையில் நோம் சோம்ஸ்கி சொன்னார்). - வெங்கட்

  By Anonymous Anonymous, at 4:43 PM  

 • «Ãº¢Âø ±Ø¾×õ ÅóÐÅ¢ðËá! ¿øÄÐ.

  By Blogger ROSAVASANTH, at 10:17 PM  

 • வெங்கட்,
  இந்த முறையும் பினோஸே தப்பிவிடுவார்போலத்தான் தெரிகின்றது
  Pinochet house arrest is lifted ரோஸா வசந்த் அடுத்ததாக "தெய்வத்தின் குரல்" கொடுக்க இருக்கிறேன் :-)

  By Blogger -/பெயரிலி., at 11:54 PM  

Post a Comment

<< Home