அலைஞனின் அலைகள்: புலம்

Tuesday, February 15, 2005

எங்கெங்கு காணிலும் மன்மதராசாடா

நான் மன்மதராசா படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், வாசித்ததின்படி மன்மதராசா பிடிக்காத பெண்களைக் கொலை செய்கின்றான். (இங்கே பேசப்போகின்ற விடயத்துக்குச் சம்பந்தப்படாமல் நோக்கினால், இதிலே என்ன திரைப்படப்புதுமை இருக்கின்றதென்று தெரியவில்லை; Psycho வந்ததிலிருந்து, மூடுபனி, சிவப்புரோஜா, நூறாவது நாள் எல்லாவற்றிலும் இதேபாட்டை சினிவண்டியோட்டத்தைக் கண்டுவிட்டோம். இதிலே 'வில்லன்' அஜித் ( அல்லது 'ஜானி' ரஜனிகாந்த்) செய்கின்றதுபோல, தம்பி பெயரிலே சிம்பு கைங்கரியத்தைச் செய்கின்றார் என்று இணையத்திலே கண்ட விமர்சனங்களை வைத்து நான் புரிந்து கொள்கிறேன்).

இதன்மேலான நிரூபாவின் பதிவுக்கான கறுப்பியின் எதிர்வினையின் சாரமாக எனக்குப் படுவன கீழ்வருவன:

1. மன்மதராசாவிலே சிறுபிள்ளைகளை ஈர்க்கக்கூடியன நடனங்களும் பாடல்களுமே; படத்தின் கரு என்ன சொல்கின்றதென்பதல்ல (அல்வாசிட்டி விஜய் நியூ குறித்து எழுதிய உரையாடலின் நோக்கோடு இக்கருத்து இயைந்துபோகிறது)

2. தமிழ்ப்படங்களிலே பெண்களைப் பயன்படுத்துவதும் அவர்களுக்காகச் சொல்லப்படும் தீர்வுகளும் அந்தக்காலத்தைவிட இப்போது பரவாயில்லை; குறைந்தபட்சம், மாறவேயில்லை என்கிறபோது, மன்மதராசாவைமட்டும் கீழிழுத்துப் பேசுவது நியாயமற்றது

3. புலம்பெயர்சூழலிலே குழந்தைகளிலே இப்படியான திரைப்படம்சார் பெண்கள் சார் கருத்துருவாக்கத்திலும்விட தமிழர்நிகழ்வுகள்சார் ஆயுதவன்முறையினாலே வரும் கருத்துருவாக்கம் ஆழமானதும் கெடுதலானதுமாகும்.

குழந்தைகளின் பார்வையும் வளர்ந்தவர்களின் பார்வையும் எல்லாச்சந்தர்ப்பங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை என்பதை மறுக்கவில்லை. ஆனால், இந்நிலையிலே குழந்தைகள் என்று கறுப்பி யாரை வரையறுக்கின்றார் என்று எனக்குத் தெளிவில்லை. குழந்தை (child) என்பதும் முன்விடலை (adolesent) என்பதும் தம்மளவிலே வேறான கிரகிப்பு, கற்றுக்கொள்தன்மை, உளமுதிர்ச்சி கொண்ட பருவங்கள். ஐந்து ஆறு வயதுக்குழந்தைகள்வரை, கறுப்பி சொல்வதுபோல, நடனம், பாட்டினைமட்டுமே ஈர்த்துக் கொள்ளும். அதேபோலவே, "சிங்களவனைக்கொல்லடா; பகைவர்படையை முறியடா" என்ற -சொல்லிக்கொடுக்கும் பெரியவர்கள் வெட்கப்படவேண்டிய- பாட்டுக்கும் சொல்லிக்கொடுத்த காலடி, கைசையவு, கண்சிமிட்டு தவறாமல் செய்துவிட்டு மேடையை விட்டு இறங்கிப்போகும்; அதுக்குக் கொல்தல்/சாவு என்பதன் புரிதல் இருக்கப்போவதில்லை. என் நண்பன் ஒருவனின் ஆறு வயது மகனிடமும் இன்னொரு நண்பனது நான்கு வயது மகளிடமும் நான் கண்டது, இறப்பு என்பது நித்திரை கொள்வதுபோல என்பதாகவும் கொஞ்ச நேரத்திலே எழுந்து அடுத்த காரியத்தைச் செய்ய ஆள் போய்விடும் என்பதான உணர்தலே. குழந்தைக்குக் காணாத சிங்களவனைக் கொல்வதும் தெரியாது, மன்மதராசா பெண்களைக் கொல்வதற்கான காரணமும் தெரியாது. ஆனால், அதற்கு அப்படியான படத்திலே பார்த்த, நாடகத்திலே பழகிய செயற்பாடுகளைக் காரண-காரியம் புரியாமல் மீளச் செய்து பார்ப்பது மிக இலகு. அண்மையிலே புளோரிடாவிலே, WWF (Nature நிகழ்ச்சியிலே இல்லை, தொலைக்காட்சி மக்மோகனின் சண்டை மேடையில் :-)) பார்த்த ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை, பார்த்ததை நடித்துப்பார்க்கையிலே தன்னை அறியாமலே கொன்றிருக்கின்றது. ஆக, ஒரு பெண்ணை ஓர் ஆண் கத்தியாலே வெட்டி, துவக்காலே சுட்டுக் கொல்கிறான் என்பதை, மேடையிலே "சிங்களவனை வெட்டு" என்ற கேவலங்கெட்ட பாட்டுக்கு நாட்டியம் புரிகின்ற குழந்தையும் செய்யும்; மன்மதராசாவைப் பாட்டு, நடனத்துக்காகப் பார்க்கும் (ஆண்)குழந்தையும் புரியாமலே செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

ஆனால், புரிந்தும் புரியாமலும் உளமுதிர்வினைக் காண்பதையும் கேட்பதையும் கொண்டு பகுத்துத் தன் கருத்தாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் பருவம் இந்த முன்விடலைப்பருவம்; அதற்கு "சிங்களவனைக் கொல்" என்பதற்கும் பொருள் விளங்கும் (இல்லாமலா, சிறுவர்கள் இயக்கங்களிலே செயற்படுகின்றார்கள் :-(); மன்மதராசா பெண்ணை வெறுப்பதற்குப் பெண்கள் கெட்டவர்கள் என்ற அபிப்பிராயமும் புரியும்.. இவை புரியாமற் பாடலுக்காகப் படமும் பார்க்கின்றவையோ, அல்லது சிங்களவர்களை ஏன் வெட்டவேண்டும் என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பாமல் நடித்துக்காட்டலிலே இயங்குகின்றவையோ அல்ல, இவற்றிலே ஒன்றைவிட மற்றது கேடானதில்லை. ஆனால், எதிர்காலத்திலே ஆயுதவன்முறையிலே ஒரு சராசரி (புலம்பெயர்) ஆண் ஈடுபடுவதிலும்விட ஒரு பெண்ணை (கருத்துநிலைப்பாட்டிலோ அல்லது செய்ன்முறையிலோ) தாக்கவே அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. குற்றமும் தண்டனையும் என்கிறதிலே பெண்கள்மீதான் கருத்துவன்முறையிலே இலகுவாக எதுவிதமான தண்டனையும் இல்லாமலே ஓர் ஆண் ஈடுபட்டுவிட்டுப்போகலாம் ("ஆண் என்றாலே இவன்தான்/இவ்வளவுதான்" என்ற மனுஷி என்ற குறும்படத்தினை எடுத்த ஒருவருக்கு இது புரியாமலிருக்கமுடியாது என்று நான் நம்பவில்லை); ஆனால், அடுத்தவனுக்கு ஒரு குத்துவிட முன்னாற்கூட, தண்டனை பற்றி நிறைய யோசிப்பான். பெண்கள் மேலான வன்முறையை கருத்தளவிலே இலகுவாக, வீட்டுள்ளே, சமூகத்திலே, இணையத்திலே தொடர்ந்து நகைச்சுவை என்ற பெயரிலேகூட பலர் ஆரவாரிப்போடு நிகழ்த்த வாய்ப்பிருக்கின்றது. இதற்கு மன்மதராசா போன்றவையும் கறுப்பி சொல்கின்ற பழைய படங்களும் புராணங்களும் அமைத்ததும் தலைமுறையாகக் கடத்தப்படக்கூடியதுமான கருத்துகட்டமைப்பே பெரும்பங்கு வகுக்கின்றன. முன்விடலைகளே பெரு அவதானத்தோடு தமது முன்மாதிரிகளைத் திரைப்படங்களிலும் போர்க்களங்களிலும் தேடிக்கொள்கின்றனர். முழுக்க முழுக்கவே வல்லுறவைத் திணிக்காத பாலுறவுப்படங்களை (pornographic films) உணர்வளவிலே முதிர்வடைந்தவர்கள் பார்ப்பதை நான் எதிர்ப்பதில்லை (இவை ஆண்பார்வையாளர்களைக் கருத்திலே கொண்டு பெண்களை நுகர்தலுக்கான வர்த்தகப்பண்டங்களாக வைக்கின்றன என்ற குற்றச்சாட்டினை மேற்கிலே இன்றைய நிலையிலே எந்தளவு ஏற்கமுடியுமென்பது குறித்துத் தனியே வாதாடவேண்டும்); ஆனால், இதுதான் பண்பாடு என்ற விதத்திலே, பெற்றோரினாலே அங்கீகரிக்கப்பட்டு பிள்ளைகளுக்கு வரும் தமிழ்ப்படங்கள், வீரநாட்டியநிகழ்வுகள் தரும் கருத்துகளுக்குப் பெற்றோரின் அங்கீகாரம் இருக்கின்றதென்ற ஓர் உணர்வே பிள்ளைகள் மத்தியிலே தவறான கருத்தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அந்தளவிலேதான் அந்நியத்துவம் என்று புகட்டப்பட்டு எச்சரிக்கையோடு எட்டிநின்று உறவாட வேண்டிய நிலையிலிருக்கும் "This is my mom's boy friend" என்கிற நண்பர்களிலும்விட பிள்ளைகளுக்குத் தவறான கருத்தாக்கங்கள் தமிழர்கலைவெளிப்பாடுகள் என்பவற்றினூடாக நுழைகின்ற அபாயம் இருக்கின்றது.

Griffithஇன் The Birth of a Nation, திரைப்பட நுணுக்கங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும், அது விதைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. அது இங்கும் பொருந்தக்கூடும். வேண்டுமானால், பாய்ந்துவரும் புலியிலும்விட, அழகாக நெளியும் பாம்புக்குத்தான் குழந்தை அநாவசியமாகக் கையை நீட்டும் அபாயம் இருக்கின்றது.

முரண்நகை: இந்தக்கடைசி வசனத்தினை அடித்துக்கொண்டிருக்கும்போது, காதுகளிலே ஏ. ஈ. மனோகரனின் நேரடி நிகழ்ச்சியொன்றிலே பதிக்கப்பட்ட "சின்னமாமியே, உன் சின்னமகளெங்கே?" பாட்டுப் போய் முடிந்து, தமிழ்மக்கள் உணர்ச்சிபூர்வமாகக் கைதட்டுவது நிகழ்கின்றது :-) / :-(

9 Comments:

  • பெயரிலி, இந்த விவாதத்தைப்பற்றி நேரங்கிடைத்தால் நானும் ஒன்றிரண்டு வார்த்தை சொல்லிவிட்டுப்போகின்றேன். நிற்க. மதியின் சுறாங்கனி சுறாங்கனி பாடல் பதிவைப் பார்த்தவுடன், மதியிடமும் மற்ற நண்பர்களிடம் இந்த 'சின்ன மாமியே' பாடலை request செய்யவிருந்தேன். எனக்கு அவசரமாய் தேவைப்பட்டது/படுகிறது. You read my mind, Peyarili.
    எனது மனதை அறிந்தமாதிரி இந்தப்பாடலால் எனக்கு வரப்போகும் பின்விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பென்பதையும் சேர்த்து வாசிக்குக :)).

    By Blogger இளங்கோ-டிசே, at 7:21 PM  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger வசந்தன்(Vasanthan), at 8:17 PM  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger வசந்தன்(Vasanthan), at 8:19 PM  

  • உதே பாட்ட எஸ்.பி.பி. மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடக்கேட்டிருக்கிறியளோ? (மன்னிக்கவும் பெயரிலி! சம்பந்தமில்லாமல் எழுதி விசயத்தை திசைதிருப்புவதற்கு)

    By Blogger வசந்தன்(Vasanthan), at 8:23 PM  

  • நான் ஏற்கனவே மதியிடம் அந்தப்பாடலை (சிங்கள) கேட்டுவிட்டேன். :)

    இந்த விவாதம் குறிது பின்னர் எழுதுக்கிறேன்

    By Blogger Thangamani, at 8:36 PM  

  • நீங்க வேற பாதையில போறீங்க! போங்க நல்ல விஷயம்தான்.

    கறுப்பி 'சொல்லவருவது' போலவே வெகுஜன படங்கள் குறித்து சில கருத்துக்களை பாய்ஸ் படம் துவக்கி வைத்த விவாதத்தில், பதிவுகளில் சில கருத்துக்களை சொல்லியிருக்கிறேன். கிட்டதட்ட கறுப்பி சொல்வது போலவே இருக்கும், காதல் படம் குறித்து பேசும் போதும்! அதே நேரம் மன்மதன் படம் குறித்து அவர் பார்பது போல் பார்க்கமுடியாது. பேசுங்க! இப்போ என்னால் எதிலும் கலந்துகொள்ள முடியாது. நேரம் கிடைக்கும்போது பார்போம்.

    By Blogger ROSAVASANTH, at 10:15 PM  

  • டி.சே
    சின்ன மாமியே,பட்டு மாமியே இரண்டுமே என்னிடம் இருக்கின்றன.ஆனால் இனையத்தில் இலவசமாக எப்படி ஏற்றுவதென்ரு தெரியவில்லை.யாரவது உதவினால்.பாடல்களுக்கென்று வலைப்பதிவொன்று தயார்.

    By Blogger ஈழநாதன்(Eelanathan), at 5:12 AM  

  • geocities இல ஏத்திப்போட்டு பிறகு இணைப்பக் குடுத்து விடுமேன். இல்லாட்டி 35MB இலயும் ஏத்தலாம்.

    By Blogger வசந்தன்(Vasanthan), at 5:46 AM  

  • மன்மதராசாக்களே “சின்னமாமி” பாடலின் கடைசியில் மருமகன் கேட்கிறார் “மாமி நீங்கள் வந்தால் போதும்” எண்டு. எங்க எது பெண்களையும் அவர்களின்ர உணர்வுகளையும் கொஞ்சமேனும் சீரியஸாப் பாக்குது. மன்மதன் மன்மதன் எண்டு சும்மா கிடந்த படத்தைத் தூக்கி விட்டிருக்கிறம். இனிப்பாக்காத ஆட்கள் எல்லாம் பாக்கப்போகீனம்.

    By Blogger கறுப்பி, at 1:43 PM  

Post a Comment

<< Home