அலைஞனின் அலைகள்: புலம்

Friday, April 01, 2005

இஸ்ரேல் குறிப்புகளின் மீது அவசரக்குறிப்பு

ரோஸாவசந்தின் பலஸ்தீனியர் குறித்த பதிவிலே தங்கமணி சொல்லவந்ததை மிகவும் பதியக்கூடியவிதத்திலே சொல்லவேண்டுமென்று "ஹிட்லர் ஜெயிக்கவில்லையே என்று இப்போது நான் வருத்தப்படுகிறேன்" என்று சொல்லியிருக்கின்றார் என்று படுகிறது. ஆனால், வேடிக்கைக்குக்கூட இப்படியாகச் சொல்லியிருக்கவேண்டாம் என்பது என் கருத்து. ஹிட்லரின் செய்கை எந்த விதத்திலுமே நியாயப்படுத்த முடியாதது - அவருக்குத் தோன்றிய காரணங்கள் எவையாகவும் இருக்கட்டும். நோம் ஸோம்ஸ்கி, ஸுஸன் ஸொடன்பேர்க், அமி குட்மென் போன்று பலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற யூதர்கள் இருக்கின்றார்கள். ஓரிரு ஆண்டுக்கு முன்னாலே ஸலூன் வலைஞ்சிகையிலே எவ்வாறு நியூ யோர்க்கின் அதி பழமைவாத யூதர்கள் இஸ்ரேல் என்பதாக ஒரு யூத நாடமைந்திருப்பது குறித்து மத ரீதியான எதிர்ப்பினைக் கொண்டிருப்பதைச் சுட்டியிருந்தார்கள்.

மிகுதிப்படி, பலஸ்தீனியர்களின் துயரத்தினையும் நியாயத்தினையும் டோண்டு போன்றவர்களின் சிந்தனை வழி இயங்குகின்றவர்கள் என்றேனும் ஏற்றுக்கொள்வார்களென நான் நம்பவில்லை. சோவினை விமர்சனமின்றித் தாங்குகின்ற ஒருவரிடம் வேறு எதனைத் தங்கமணியும் ரோஸாவசந்தும் எதிர்பார்க்கின்றார்கள்? ஐதீகங்களையும் வரலாற்றினையும் தன் விருப்புவெறுப்புகளையும் கலந்து தும்புமுட்டாய்ப்பதிவுகள் செய்துகொண்டிருக்கின்றார். ஆனால், இவரின் பதிவுகள், இதே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தும் வெளியே சொல்லச் சங்கப்பட்டிருக்கும் பலருக்கு, ஒரு வெளிக்காட்டாக இருக்கின்றது என்பதை அவருக்குச் சொருகப்பட்ட நட்சத்திரங்களிலே காணலாம். :-) ஏதோ ஒரு வகையிலே, சமூகத்திலே தனக்கு உரித்தானதை, கிடைக்கவேண்டியதினைப் பிடுங்கிக்கொண்டு கலைக்கப்பட்டு, ஒடுக்குதலை உணராத ஒருவருக்கு, அதுபோன்ற நிலைமைகளை உணர்த்துதல் கடினம். பாரம்பரிய பூமியிருந்து அடித்து ஓட்டப்பட்டு, அகதி முகாமிலே அந்தரிக்கவிடப்பட்டவன் பற்றிய கதையை அடித்து ஒடுக்குவது ஆண்மையும் வீரமுமென்று நியாயப்படுத்துகின்ற "We kicked the shit out of them" சித்தப்போக்கினைக் கொண்டவர்களுக்கு உணரச்செய்யமுடியாது.

இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட, யூதர்களிலும் எந்தவிதத்திலே அவர்கள் வந்த இடம் குறித்த பாகுபாடு நிலவுகின்றது என்பதை இஸ்ரவேலின் நடைமுறைவரலாற்றினைக் காண்கின்றவர்கள் உணரலாம். ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து சென்றவர்கள் ரஷ்யா,எதியோப்பியாவிலே இருந்து வந்தவர்களையும் கூடவே காலாகாலமாக அரபுலகிலே வாழ்ந்திருக்கின்ற யூதர்களையும் இரண்டாம் மூன்றாமிடங்களிலே வைத்து நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் ஆதாரங்களுடன் வலையிலே (குறிப்பாக, பிபிஸி இணையத்தளத்திலே தேடினீர்களென்றால், காண்பீர்கள்). வாசித்திருக்கலாம். (இதற்குள்ளே கிழக்கு இந்தியாவிலேயிருந்து இப்போது, இன்னொரு தொலைந்த இஸ்ரவேலிகுழுமத்தைனைக் கண்டெடுத்து அழைத்துப்போக இருக்கின்றார்கள் ;-)) எத்தனை முன்னைய சோவியத்திலிருந்து வந்த இரஷிய யூதர்கள் மீண்டும் சென்றிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் இஸ்ரேலிலே எவ்வகையான தொழில்களிலே ஈடுபடுத்தப்பட்டிருந்தார்களென்பதையும் பிபிஸியின் அண்மைய நிகழ்ச்சி ஒன்று தந்தது. இஸ்ரவேல் அமைச்சர்களிலே எத்தனை பேர், ஐரோப்பிய-அமெரிக்க யூத வழி வராதவர்களென்று பார்த்தால், அதிகமில்லை. இளம்பெண்களைப் பாலியற்றேவைகளுக்கான பண்டநிலையிலே பயன்படுத்தும் நாடுகளிலே இஸ்ரேல் இன்றைய காலகட்டத்திலே முக்கியமானதொன்று. அமெரிக்காவிலேயிருந்து அண்மையிலே சென்ற யூதக்குடியேறிகள், காலகாலமாக அகதி முகாம்களிலே வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு "இஃது எங்கள் நாடு; நீங்கள் ஜோர்டானிலோ அல்லது வேறெங்கோ அரபு நாட்டிலோ போய்க் குடியேறுங்கள்" என்று சொன்ன அவலத்தை பிபிஎஸ்-பிபிஸியின் frontline நிகழ்ச்சியிலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே பார்க்க நேர்ந்தது. இன்னொரு நிகழ்ச்சியிலே, இஸ்ரேலிருந்து, 1967 இலே அல்ல, ஆனால், 1948 இலே விரட்டப்பட்டு, இன்னமும் அகதி முகாமிலே வாழும் ஒரு கிழவி தனது அந்தக்காலவீட்டின் திறப்புக்கோர்வையினைச் செவ்வி காண்கின்றவருக்கு எடுத்துக்காட்டும் காட்சியை டில்லியிலே இருந்து கொண்டு சென்னையிலே தான் வாழ்ந்த - எந்த நேரமும் தான் வாழ வழியுள்ள- தன் வீடு குறித்து கனவினைத் தொடர்ந்து கண்ட டோண்டு பார்த்தால், புரிந்து கொள்ளமுடியுமென்று நம்புகிறேன். அப்படியாக தன் சொந்த வீட்டைப் பறிகொடுத்த ஒரு பாலஸ்தீனியப் பற்றி வாசித்தோ ஏதோ விதமான சமாந்திர அனுபவத்திலோ உணர வசதியில்லாதவர்களுக்கு, Costa-Gavras இன் Hanna K. இனைப் பார்க்க நான் பரிந்துரைக்கின்றேன்.

அரபு நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலின் வெற்றி, தனியே இஸ்ரேலினாலே மட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல என்பதை வரலாற்றின் நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும் சின்னப்பிள்ளைக்குக்கூடப் புரிந்துகொள்ளமுடியும்; அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான குரலாக இருக்கின்றவர்கள், அரசியல், பொருளாதார, ஊடகபலம் வாய்ந்தவர்கள்; இங்கே பட்டியல் போட்டு அண்டாது. இஸ்ரேல் ட்ரான்ஸ்-ஜோர்டானிலே அமைவதிலே அமெரிக்காவிலேயிருந்த செல்வாக்கு மிக்க யூதர்களுக்கு எந்தளவு பங்கிருந்தது என்பதையும் ட்ரூமனுக்கு அமெரிக்க அரசிற்கான பண நெருக்கடியிலே எப்படியாக முடிவெடுத்தார் என்பதையும் அதிலே பிரிட்டனின் பங்கு குறித்தும் End of Empire புத்தகம் ஓரளவுக்கு நடுநிலையாகச் சொல்லியிருக்கின்றது. இது குறித்து வெளிப்படையாகவே அமெரிக்க யூத அழுத்தத்தினைச் சுட்டி, ஹொலிவுட் படம் ஒன்று 1980 களிலே வந்து பார்த்திருக்கின்றேன். இன்னும் உதாரணங்களுக்குச் சம்பவங்கள் இரண்டு; அமெரிக்காவின் அரசுள்ளேயே மேல்நிலையிலே இஸ்ரேலின் உளவுகாரர் இருப்பதாக சென்ற ஆண்டு ஒரு செய்தி வந்தது. அப்படியே அடங்கிவிட்டது; ஈரானின் அணு உற்பத்தி, (ஈராக்கினதும் கூடவே) இஸ்ரேலுக்குக் குந்தகமாகிவிடும் என்பது வெளிப்படையாகவே, ஊடகங்களிலே அமெரிக்காவின் அரசுசார் அதிகாரிகள் சொல்லி வருவது; ஆனால், எவருமே இஸ்ரேலின் ஏற்கனவே இருக்கின்றதென்று சொல்லப்படும் அணு ஆயுதங்களையோ இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த செய்தியை வெளியிட்டாரென்று சொல்லப்பட்டு கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் மொடேசாய் வனுனு பற்றி அமெரிக்க ஊடகங்களிலே பேசுவதில்லை.

பலஸ்தீனியர்களின் செயற்பாடுகளை முன்வைத்து அவர்களைப் பயங்கரவாதிகளென்று சொல்லிவிடுவது 'பயங்கரவாதப்புலி வருகுது! வருகுது" நாடுகளிலே மிகச்சுலபமான விடயம்; அரச பயங்கரவாதங்கள், அரசு, சட்டம் என்பதன் போர்வைகளின்கீழே நியாயப்படுத்தப்பட்டுப்போகின்றது. இஸ்ரேலின் செய்கை குறித்தும் இதுவே "புலி வருகுது வருகுது!!" பயத்தின்கீழே நெறி பற்றி பேசுகின்றவர்களின் செய்கை இருக்கின்றது. இஸ்ரேலின் பலஸ்தீனியர் மீதான அரசபயங்கரவாதம் குறித்து எந்த விமர்சனமோ, குரியனின் சாதாரண மக்களுடனான விடுதிகளைக் குண்டுவைத்துத் தகர்த்தது குறித்து எந்த விமர்சனமோ, ஆஜெர்ண்டீனாவுக்குள்ளே புகுந்து அதன் பிரஜையை - அவன் நாட்ஸி குற்றவாளியாகத்தான் இருக்கட்டும்- மொஸாட் கடத்திவருவது குறித்து எந்த விமர்சனமோ இல்லாதவர்கள் இப்படியானவர்கள். இணையத்திலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே கண்டிருந்தேன். ஹிந்துத்துவா குழுவொன்று யாரோடு கூட்டுச்சேர்ந்து முஸ்லீம்களை ஒழிக்கவேண்டுமென்று சொல்கின்றார்களென்று பார்த்தீர்களானால், அதிவலதுசாரி யூதர்களின் ஹனேன்குழுவுடனாம். ;-)

இஸ்ரேலின் ஆதரவாளர்களாக இருப்பது ஒன்று; ஆனால், நிகழ்வுகளைத் திரிப்பதும் சொந்த விருப்புவெறுப்புகலந்த புனைவினை வரலாறென்று பதிவதும் நியாயமானதல்ல; பலஸ்தீனியர்களிலே எத்துணை குறைகளோ இருக்கலாம்; ஆனால், தமது பூமியைத் தமது என்று போராடுவது அவற்றிலே ஒன்றல்ல. குறைந்தபட்சம், யசீர் அரபாத்தின் அடிப்படை நோக்குக்கும் ஒஸாமா பின் லேடினின் அடிப்படைவாத நோக்குக்குமிடையே வித்தியாசம் பிரியாமல், இஸ்ரேலுக்காக ஆதரவு தெரிவிக்கின்றவர்களை எண்ணி வெறுமனே புரியாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு பரிதாபப்பட்டுவிட்டுமட்டுமே போய்விடமுடியாது; இவர்கள், தாம் சாடும் பயங்கரவாதிகளிலும்விட அபாயமானவர்கள்.

இணைப்புகளைத் தேடப் பொழுது இல்லாதபடியினாலே, இங்கு கொடுக்கவில்லை; சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது, கொடுக்கின்றேன்.

2005, ஏப்ரில் 01 16:11 கிநிநே.

0 Comments:

Post a Comment

<< Home