அலைஞனின் அலைகள்: புலம்

Saturday, March 08, 2008

சந்நதி முருகனுக்கும் கதிர்காமக்கந்தனுக்கும் அரோகரா!

'சுஜாதா' ரங்கராஜன் இறந்ததற்கு, "துக்கம் கொண்டாடுவது ஏன்?" என்று பதிவு போட்டவர்களைக் கண்டிக்காத பதிவர்களை, வாய்கட்டிப்பூசாரிகள் சிலர் கண்டித்திருக்கின்றார்கள். இப்படியான தர்க்கமற்ற கேள்வி எழுப்புவதற்கும், "தமிழ்ச்செல்வன் இறந்தபோது, இனிப்பினைக் கொடுத்துக் கொண்டாடியவர்களின் செயற்பாட்டினை ரங்கராஜனின் இறப்பிற்குத் துக்கம் கொண்டாடத்தேவையில்லை" என்று முன்னிகழ்வு காட்டிப் போகின்ற - எதிர்நிலைக்காரர்களின் - செயலுக்கும் ஒரேயொரு வித்தியாசம் - எப்பக்கம் நிற்கின்றார்கள் என்பதுதான். அவரவர் ஒருவர் மீதான அவரவர் விருப்புக்கும் வெறுப்புக்குமேற்ப துக்கமோ களிப்போ அடைந்துவிட்டுப்போகிறார்கள். அத்துக்கத்துக்கும் அக்களிப்புக்கும் அவற்றுக்கான அளவுகளுக்கும் அவரவருக்கான காரணங்கள் இருக்கின்றன. இதிலே மற்றவர் போய் கூட்டம் போட்டு, "எதற்குத் துக்கம் கொண்டாடவில்லை?" என்றோ, "எதற்குத் துக்கம் கொண்டாடுகின்றீர்கள்?" என்றோ கேட்க என்ன உரிமையிருக்கின்றதென்று தெரியவில்லை.ஷியா உல் ஹக் விபத்திலே இறந்தபோது, பெனாசிர் பூட்டோ, "என் தந்தையைத் தூக்கிலே போட்டவன் இறந்ததற்கு நான் கவலைப்படவில்லை" என்று சொன்னார். அவரிடம் போய் எதற்காகத் துக்கம் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கமுடியுமா? [இருக்கிற சின்னவாத்தியார்களிலே சில்மிஷம் மிக்கவர்+அதிமிஞ்சியவர் புனையப்பட்ட 'தலைமைவாத்தியார்" அரியணையைக் கைப்பற்றும்வரைக்கும் மட்டுமல்ல, அதற்கப்பாலுங்கூட சுஜாதாவின் இறப்பு நிச்சயமாக தமிழெழுத்துக்கு ஒரு வெற்றிடமே; ஆனால், அவரின் இழப்பிலும்விட, என்னைப் பாதித்த எழுத்தாளர் என்ற வகையிலே ஸ்டெல்லா புரூஸின் இறப்பும் இறப்புக்கான அவரின் காரணமும் என்னைத் தொட்டிருக்கின்றன; அதையும்விட, நாளாந்தம் குண்டுகளாலே இறக்கும் மழமைக்கப்பால் தனது மொழி எதுவென்றே பேசவும் தெரியாத குழந்தைகளின் இறப்பு, ஒரு தந்தை என்றளவிலே என்னைப் பாதித்திருக்கின்றன. கொழும்பிலே குந்திக்கொண்டிருந்து அப்துல் கலாமின் புத்தாண்டு 'சன் டிவி' செய்தியினை இணையத்திலே பெறமுடியுமா என்றும், ஒபாமாவுக்கு blue c'o'lor தொழிலாளிகளின் வாக்கு கிட்டுமென்று கட்டுரையும், அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுடர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள், இவற்றினைப் பற்றி ஏன் துக்கம் தெரிவித்து ஓர் இழவிடுகையேனும் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கச் சொல்லி பதிவுத்திரட்டிகளையோ, தமிழிணையத்திட்டிகளையோ எவரும் இட்டுக் கேட்டதாகத் தெரியவில்லை; கேட்கவும் தேவையில்லை; அவரவர்க்கு அவரவர்க்கானது]

"சுஜாதா இறப்பினைக் கொண்டாடுவோம்" என்பது போன்ற இடுகைகள் என்னளவிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதேயிருக்கின்றன. ரங்கராஜனின் இறப்பினைக் கொண்டாடுமளவுக்கு அவரொன்றும் எச்சமூகத்துக்கும் கெடுதலாகச் செய்துவிடவில்லை. 'அவரின் இறப்பினைக் கொண்டாடுவோம்' என்ற வகையிலான கருத்து, அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளின் -பிராமணசங்கங்களிலே தலைகாட்டியதன், பிராமணசார்புக்கதையொன்று எழுதியதன் -விளைவானாலும், அஃது அதீதமே. தமிழகத்தின் பார்ப்பனிய அதிகாரத்துக்கு அவரே முதன்மைக்காவலர் என்பதுபோல நிறுத்திக் கொண்டாடுவது தனிப்பட்டவளவிலே எனக்கு எரிச்சலூட்டுகிறது. ('தினமலர்' அந்துமணி ரமேஷுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர் ஒருவர் சுஜாதாவின் பார்ப்பனியசார்பினைக் கண்டிக்கும்போது, அதை அவரின் கோமாளித்தனம் என்று பார்த்தாலுங்கூட எரிச்சலூட்டுகிறது). அதேநேரத்திலே, அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், அடுத்த பிறப்பிலாவது தமிழ்நாட்டிலே அரைஞாண் & பூணூலோடு பிறக்கமாட்டோமா என்ற உள்ளரிப்போடு உலாவும் ஈழத்து வாய்கட்டிப்பூசாரிகள் சிலரின் ஒப்பாரிக்கு அவரின் தலையாலே பிறந்த தன்மையும் ஒரு காரணமாகின்றது என்றால் பொய்யாகாது.

அவருடன் அம்பலத்திலே பணியாற்றிய சந்திரன் என்பவர் "சுஜாதா இறுதிக்காலகட்டத்திலே தான் பிராமணர் என்பதற்காகவே ஒதுக்கப்படுவதாக உணர்ந்தார்" என்று எழுதியிருக்கின்றார்; இஃது உண்மையா என்பதை, சுஜாதாவே வந்து அவரது இறப்பு அஞ்சலிக்கூட்டத்தினைப் பார்த்திருந்தால் அறிந்திருக்கலாம். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்திபன், சுஜாதா பெயரிலே ஆயுட்காப்புறுதி எடுத்திருக்கக்கூடிய அளவுக்கு முதலிட்ட மனுஷ்யபுத்திரன் போன்ற புதுப்பூசாரிகள் பந்தல்போட்டு வைத்த கூட்டத்திலே, சார்ந்தத(ண்ணியி)ன் வண்ணமாகும் சாருநிவேதிதா, ராமகிருஷ்ணன், பழனிச்சாமி சிவகுமார், பேசியபோது தண்ணி போடாததாலோ என்னவோ நிதானமிழந்து கணினியின் உற்பத்தியை சுஜாதாவுக்குத் தாரை வார்த்த ஜெயகாந்தன் இவர்கள் பேசியதெல்லாம் ஸ்ரீரங்கம் அரங்கராஜனை பார்ப்பனர் என்று "ஒதுக்கி" வைத்திருந்தார்களா என்பதற்கு ஒரு பாசிசாயக்காட்டியாகவிருந்திருக்கும். இன்னமும், தன்னைப் பிராமணர் என்று தள்ளிவைத்திருந்தார்கள் என்று சுஜாதா எண்ணியிருந்தால், அவர் பிராமணர் என்பதாலேயே அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரைக்கும் எழுத்து வட்டத்திலே அவரின் அங்கீகாரம் இலகுவாக்கப்படவில்லையா என்பதையேனும் எண்ணிப்பார்த்திருக்கலாம் - குறைந்தது, பிராமணர்சங்கக்கூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம். நிச்சயமாக, பரமசிவன் போன்ற தமிழ்_சமூக ஆய்வாளர்களே "சுஜாதா எப்படி சங்க இலக்கியத்துக்கு உரை எழுதலாம்?" என்று கேட்டபோது, சுஜாதா அடைந்திருக்கக்கூடிய ஆத்திரத்தினை உணரக்கூடியதாகவிருக்கின்றது; அப்படியாகக் கேட்டவர்கள் மீது ஆத்திரம் எனக்கும் வந்திருக்கின்றது. இலக்கியம் என்றால், உரை எவர் எழுதவேண்டும் கூடாது என்று வகுத்துச் சொல்ல எவருக்கும் அதிகாரமில்லை; வேண்டுமானால், உரையின் சிறப்பினை உரைத்துப்பார்த்து விவாதத்தினை வைத்துக்கொள்ளலாம். (இதே சுஜாதா, வே. சபாநாயகம் கணையாழி இதழ்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரே காரணத்தினாலே மட்டுமே சபாநாயகத்துக்கு அவை பற்றி எழுதத் தகுதியிருக்கின்றது என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்று காட்டமாகக் கேட்டதும், பரமசிவன் சுஜாதா சங்க இலக்கியத்துக்கு எப்படியாக உரையெழுதலாம் என்று கேட்ட காலகட்டத்திலேயே நிகழ்ந்தது என்பது முரண்சோகம்).

தமிழின் எழுத்துநடையையும் பேசப்படும் கருக்களையும் புதுமைப்படுத்தியதிலே, வாசகர்களை ஆர்வமுடன் அதற்கு முன்னான காலத்திலிருந்து மாறுதலான துறைகளிலே தேடி வாசிக்க வைத்ததிலே, சுஜாதாவின் எழுத்தோடு சம்பந்தப்பட்ட ஆளுமை மறுக்கப்படமுடியாதது. அவ்வகையிலே அவரது இழப்பு தமிழ் எழுத்துலகுக்கு - அவர் எண்பதுகளின் பின்னரையிலே, தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே இறந்திருந்தால் இருப்பதிலும்விட மிகவும் குறைவேயாயினுங்கூட- பெரிதே. நல்லதாகவோ, கெட்டதாகவோ அவர் போட்டு வைத்த பாதையிலே நடை பயின்றெழுந்த எழுத்தாளர்கள் பலர். ஆனால், அவரைப் பற்றிய விமர்சனங்களே வரக்கூடாதென்ற விதத்திலே, "இப்போதுதானா அவரைப் பற்றி விமர்ச்சிக்கவேண்டும்?" என்று கேட்பவர்களுக்கு, 'அண்ணா(த்துரை) இறந்ததன் பின்னாலான தேர்தலின்போது,இறந்தவரைத் 'தெய்வமாக்கி' (sic) வாக்கினைத் திராவிடமுன்னேற்றக்கழகம் பெற்றிடக்கூடாதென்ற விதத்திலே, 'சோ'வும் ஜெயக்காந்தனும் அவரைப் பற்றிப் பேசவில்லையா?' என்ற கேள்விதான் பதிலாகவிருக்கமுடியும். ஒருவரினைப் புனிதப்பசுவாக்கி, குட்டி எல்லைக்காவற்றெய்வமாக மாற்றாதிருக்க அப்படியான - "பார்ப்பனியன் இறப்பைக் கொண்டாடுவோம்; இறந்ததுக்காகப் பதற்றம் வேண்டாம்" போன்ற எல்லைமீறிய உருப்பெருத்த அபஸ்வரங்கள் அல்லாத - விமர்சனங்களும் அவசியமே. "'கணினி' என்ற பதத்தைக் கண்டுபிடித்தவர் சுஜாதா" என்று உளறிக்கொட்டுகிறார் ஜெயக்காந்தன்; "தமிழுக்குக் கணியகராதி தந்தார்; எழுத்துருக்களை அமைத்தார்" என்ற வகையிலே தட்ஸ்தமிழ் எழுதித்தள்ளுகிறது. ('க்ரியா' தமிழகராதியிலே சுஜாதாவுக்கு பங்களிப்பு இருக்கின்றதென்றாலுங்கூட, இக்கணியகராதி பற்றி யாரேனும் சொல்ல வேண்டும்; 98 இலே கணையாழியிலே "புதுச்சொல் உருவாக்கங்கள் குடிசைக்கைத்தொழில் போல உருவாகுகின்றன; புதுச்சொல் உருவாக்கியிருக்கிறோம்; பரிசினைக் கொடுங்கள் என்பதுபோலப் புறப்பட்டிருக்கிறார்கள்" என்ற வகையிலே எழுதியவர் சுஜாதா; கணனி, கணினி என்பன பயன்பாட்டுக்கு வந்த பின்னும், "வாசகர்களுக்குச் சென்றடைவதற்காக," 'கணிப்பொறி', 'கம்ப்யூட்டர்' என்று தொங்கிக்கொண்டிருந்தவர் அவர்). "இந்தியாவிலே முதலாவது கணியமைவாக்குப்பொறி அமைத்ததிலே பாரத் நிறுவனத்திலே அவரது பங்களிப்பு என்ன" என்பதுகூடத் தெளிவாகச் சொல்லப்படாமல், அவரை கருத்துமுதல் பொருள்கொண்டு கணியமைத்ததாக ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஓர்குட் குழுமத்திலே சில பிராமண இளைஞர்கள் 'இணையம்' என்ற சொல்லே சுஜாதாதான் உருவாக்கினார் என்று வரலாறு எழுதியிருக்கின்றார்கள் (இங்கே குறிப்பாக, பிராமண இளைஞர்கள் என்று சொல்லக்காரணம், இதைப் பற்றிப் பேசப்பட்ட, குழுமமே ஓர் ஓர்குட் பிராமணர்குழுமம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் குழுமம் என்பதாலேதான். இவ்வகையிலேதான், சாதி/ஜாதி முக்கியமாகின்றதென்பது, கொழும்பிலிருந்து -அடுத்தடுத்த தெருக்களிலே தமிழ் இளைஞர்கள் பிடிக்கப்பட்டுக் காணாமற்போகும்போது- அப்துல்கலாமின் புத்தாண்டுச்செவ்வி இணையத்திலே கிடைக்குமா என்று கேட்கும் வாய்கட்டிப்பூசாரிகளுக்குத் தெரியவேண்டும். 'ஜாதி'யும் அறிவும் தமிழகசமூகத்தின் கண்டத்திலே குடுமியின் முதலைப்பிடியும் எவ்வாறு புனைகதையாக அமைக்கப்பட்டு, சமன்பாடு போடப்படுகின்றதென்பதையும் கொஞ்சம் சன் ரிவி நிகழ்ச்சிகளுக்கும் ஆனந்தவிகடனுக்கும் அப்பாலே போயும் பார்த்தாலே பிடிபடும்). சுஜாதாவின் இறப்பின்போது, அவர்மீதான விமர்சனங்களே வரக்கூடாதென்ற வகையிலும் துக்கம் தெரிவிக்காதவர்கள்மீது கண்டனம் திரட்டிகளும் திட்டித் தெரிவிக்கவேண்டுமென்று அலறுகின்றவர்கள், இப்படியான புனைகதைகளைச் சுஜாதாவின் உடலத்தின்மேலே போ(ர்)த்தி, அவரைத் திருநிலைப்படுத்தி, விமர்சனம் மறுத்த தெய்வவழிபாடுக்கு வழிபோடமட்டுமே உதவுவார்கள்.

அவர் பற்றிய வாய்கட்டிப்பூசாரிகளின் தனித்துவமான இன்னொரு புனிதப்பசுவுக்கு இன்னொரு கறவைமுலைபொருத்தும் கதையாகத்தான், "ஈழத்தமிழர்களுக்காக சுஜாதா நெக்குருகினார்" என்ற வகை இடுகைகளும் பின்னூட்டங்களுமிருக்கின்றன. நிச்சயமாக, 'சோ'+இராம்+மாலன் போன்ற இந்தீய(ப்)பத்'திரி'கையாளர்களுக்கும் சுஜாதாவுக்கும் ஈழத்தமிழர்களின் நிலை, கதை, எதிர்வினைகளிலே வெளிப்படையாகவே தெரியும் வேறுபாடுண்டு. அவர், ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளிலே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயங்கியதாக (நான் அறிய) ஏதும் ஆதாரமில்லை. ஓரளவுக்கு ஜெயலலிதா அம்மையாரின் வைசூரி ஆட்சியின்போது, தமிழகத்தமிழாராய்ச்சிமகாநாட்டுக்குச் சென்றிருந்த சிவத்தம்பி போன்றோர் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கருவாக, களமாகக் கொண்ட, "சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம்" என்ற கதையை அவர் எழுதியதும், யாழ் நூலகம், ஈழத்தமிழ்க்கவிதை (அவரின் ஈழத்தமிழ்க்கவிதைகள் பற்றிய அறிதல் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுவிட்டன என்பதை அவரின் 'கற்றதும் பெற்றதும்', கானா பிரபாவிற்கான செவ்வி என்பதிலேயிருந்து அறிந்து கொள்ளலாம்) பற்றிய குறிப்புகள் என்பனவும் ஈழத்தமிழர் மீதான அவரின் ஈரத்தனத்தினைக் காட்டுவதாகவேயிருந்தன. அதற்காக -ஈழத்தமிழர் குறித்த மறை உணர்வும் குறைப்புரிதலும் கணிசமாக நிறைந்த 'அறந்தாங்கி அஹிம்ஸாமூர்த்திகளான" 'துக்ளக்+த ஹிண்டு+இந்தியா ருடே" வாசகப்பரசுராமர்களிடையே நிறைய மதிப்பினைப் பெற்றிருந்த - அவருக்கு நன்றி. [இதையே ஆள்வோர் பின்பலமற்ற வேறு படைப்பாளி எழுதியிருக்கமுடியாதென்றாலுங்கூட, எழுதிய அவருக்கு நன்றி] ஆனால், இவ்விடத்திலே அவர் ஒரு கரு(க்)கட்டும் கதையாளி என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவருக்கு -எல்லா எழுத்தாளர்களையும்போலவே - சந்திக்கின்றவர்கள் சொல்லும்/தரும் கருக்களும் சொற்களும் -ஏன் சந்திப்பவர்களுமே- கதைக்கானவைதான். அவருக்கு(ம் மணிரத்தினத்துக்கும்) 'கன்னத்தில் முத்தமிட்டால்" எழுதக் கருவும் (இடைக்காலச்சமாதான ஒப்பந்தமும் புலம்பெயர் பார்வையாளர்கள் தொகையும் இந்தியத்தயாரிப்புக்குத் துணிவினைத் தந்திருந்தால்) இந்தியாவின் செயற்பாடுகளிலே விமர்சனம் வைக்காத கதைகளும் ஆக்கமுடியுமானால், அவரின் பிரபலத்தோடு அவற்றினைச் செய்ய ஏதும் தடையில்லை ['கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்த அதே காலத்திலே தடை செய்யப்பட்ட புகழேந்தியின் ஈழம் தொடர்பான 'காற்றுக்கென்ன வேலி'யை இங்கே நினைவுகூர்வோமாக]. இதுதான் சுஜாதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையின் எல்லை: '"சோராமாலன்" உடனோடு ஒப்பிடும்போது, இவர் 'ஒரு மூட்டை அரிசியையாவது விதைத்தவருக்குத் திருப்பித் தந்தாரே' என்ற நிலைதான்.' நிச்சயமாக, அதற்காகவேனும் நன்றியுள்ளவர்களாக, கொழும்பிலே குந்தியிருந்து இந்தியாவின் ஆளுமைகளுக்காக உருகும் வாய்கட்டிப்பூசாரிகளும் நானும் என்னைப் போன்றவர்களும் இருப்போம் - "தளையசிங்கத்தைக் கிண்டி ஆழமும் முத்துலிங்கத்தை விராண்டி அகலமும் கண்டுபிடித்துத் தமிழகத்துக்குச் சொன்னதற்காக, ஜெயமோகனருக்கு நன்றி உடையவர்கள்போல." ஆனால், நெருக்கடி நிலைகளிலும் தமிழகத்தின் பதிப்பகங்களிலும் படைப்புகளிலும் ஈழத்தமிழர்கள் பற்றி நூல் வெளியிட்ட, வெளியிடும் படைப்பாளிகள் குறைந்தது ஐவரையாவது, இந்த வாய்கட்டிப்பூசாரிகள் சொல்வார்களானால், நன்றியுடைத்திருப்பேன்.

மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம்....
..... மூளையில் வரல் ஆற்றுச்சளி கட்டாதவரையில்.

@ Wandererwaves: Focus
http://wandererwaves.blogspot.com/2008/03/blog-post.html

Labels: