அலைஞனின் அலைகள்: புலம்

Friday, December 31, 2004

உணர்ந்ததை உரைக்கிறேன்

கடந்த ஒரு கிழமையாக எனக்கு நேரே இளைய தம்பி திருகோணமலை சமூக-பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு (SEDOT) ஊடாகவும் மருத்துவராகவும் பெற்ற அனுபவத்தினைச் சொல்ல, அதிலே நான் கிரகித்துக்கொண்டது கீழுள்ளவற்றிலே அடங்கும். ஏற்கனவே செய்தியூடகங்களிலும் மற்றைய நண்பர்கள் அறிந்து எழுதியவற்றினையும் நான் அறிந்த அளவிலே சொன்னது சொல்லல் வேண்டாததாலே தவிர்த்திருக்கின்றேன். இக்கருத்துகள் நான் புரிந்து கொண்டவை சரியானால், என் தம்பியின் தனிப்பட்ட அவதானிப்புகளின் விளைவானவையேயொழிய SEDOT இன் கருத்துகளையோ அவன் தொழில்புரியும் திருகோணமலை ஆதாரவைத்தியசாலையின் கருத்துகளையோ பிரதிபலிப்பனவல்ல. அதனாலே, தகவலைச் சொல்லும் விதத்திலே கொஞ்சம் தனிப்பட்டதான தொனிகூட இருக்கக்கூடும்.

திருகோணமலை-மூதூர் பிரதேசத்தினைக் கடல் தாக்கிய நேரத்திலே, இவன் திருகோணமலை மூதூர் கடற்பாதையிலே ஏற்கனவே இரு கிழமைகளுக்கு முன்னாலே வெள்ளத்தினாலே பாதிக்கப்பட்ட மூதூர்-ஈச்சிலம்பத்தைக்கிராம நிவாரணவேலையின் அடுத்த கட்டமாக இயந்திரப்போக்குவரத்துப்படகிலே வேறு பயணிகளோடு போயிருந்திருக்கின்றான். படகிலேயிருந்தவர்கள் இலங்கைக்கடற்படையினராலே காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள் (இ·து என் அம்மாவின் தகவல்).

நிலாவெளி-சலப்பையாறு இடைப்பட்ட பிரதேசத்திலே, SEDOT இனாலே இலங்கையிலே தமது சொந்தப்பிரதேசங்களுக்கு மீண்ட அகதிகளுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு வீடமைப்புத்திட்டம் இருப்பதாலே, இவ்வூழியலை நிகழ்ந்த மறுநாள் சென்ற திங்கட்கிழமை சென்று முடிவுவரை செல்லமுடியாமற் திரும்பியிருக்கின்றார்கள். இடையிலே பாலங்கள் உடைந்திருப்பதினாலே மேலே செல்லமுடியவில்லையாம். இப்பாதையிலேயிருக்கும் ஓரிரு சிறிய கடற்படைமுகாங்கள் அழிவுற்றிருப்பதாலே, அங்கிருக்கும் போராயுதங்களிலே (கடற்படையினராலே?) மீட்டெடுக்கப்பட்டவை தவிர்ந்த சிறிய எறிகுண்டுகள் போன்றவை சேதமுற்ற வீடுகளுள்ளே பரந்திருப்பதாலே அவற்றினைக் கண்டு அகற்றும் தேவையுமிருப்பதாகச் சொன்னான். இவர்கள் வரும்வழியிலே நிலாவெளி உல்லாசப்பிரயாணவிடுதியிலே தடுமாறி நின்ற ஐந்து வெளிநாட்டவர்களைக் கொண்டு வந்து நகரிலே இறக்கிவிட்டதாக அடுத்த தம்பி கூறினான்.

வாகரை மட்டக்கிளப்பு மாவட்டத்திலேயிருந்தாலுங்கூட, மீதி மட்டக்கிளப்பு மாவட்டத்திலேயிருந்து முழுக்கவே தனித்துப்போயிருந்ததாலும், செவ்வாய்வரையும் ஏறக்குறைய முற்றாகவே ஏதும் உதவி அங்குச் சென்றடையாததாலும் மூதூர்த்தேர்தற்தொகுதியிலே வெருகலுக்கப்பாலேயிருக்கும் இப்பிரதேசத்துக்குப் போய்வருவதாகத் தீர்மானமானதாம். கருணாவின் முன்னைய தளப்பிரதேசமான வாகரை மற்றைய காலத்திலேயே மிகவும் அடிப்படைவசதிகளற்ற, போர்க்கால இறப்புகள் அதிகமாகவிருந்த பிரதேசம். (சக்தி வானொலியிலே ஒரு செய்தியாளர் மக்கள் வீதியிலே தேங்கியிருக்கும் தண்ணீரைக் குடிப்பதாகச் சொல்லிக் கேட்டிருந்தேன்) புதன் கிழமை அங்கு சென்று ஐந்து மக்கள் தங்கு முகாங்களை - ஊரியங்காடு, கண்டலடி, கதிரவெளி, புளியங்கண்டல், கட்டுமுறிப்பு- அமைக்கின்றதற்கு உதவிகளைச் செய்ததாகக் கூறினான். அங்கிருக்கும் மக்களுக்கு சேதம் விளைந்தவுடன் முதலிலே உதவி புரியச்சென்றவர்களும் உணவு வழங்கியவர்களும் கடலண்டாத உட்பிரதேசமான சேருவில என்ற குடியேற்றப்பிரதேசத்திலேயிருக்கும் சிங்களமக்களே என்பது குறிப்பிட்டுச்சொல்லப்படவேண்டியதென்றான். அம்மக்களுக்கு (அந்நேரத்திலே) மருத்துவ உதவி செய்வற்காக 15 யாழ் மருத்துவமாணவர்கள் வந்திருப்பதாகச் சொன்னான். பொதுவாக, ஸ்ரீலங்காவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் மருத்துவர்கள் நிறையவே செய்ய விரும்பியபோதுங்கூட, அவர்கள் ஒரேயிடத்திலேயே தங்கியிருந்து சேவையாற்ற முடியாதிருக்கும் அமைநிலைமையிலே அவர்கள் வேறுவேறு இடங்களுக்குச் சென்றுவிடுகின்றார்கள்.

மேலும், ஜேவிபி வைத்தியர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் சில சிங்கள வைத்தியர்கள் அரசியல் செய்வதிலும் முரண்டுபிடித்து இனவாதம் கிளப்புவதிலுமே ஈடுபட்டிருப்பதாகத் தெரிகின்றது. நேற்றைக்கு, வெள்ளிக்கிழமை பேசியபோது அறிந்ததுகொண்டதென்னவென்றால், திருகோணமலை ஆதாரவைத்தியசாலையிலே கீழ்மட்ட ஊழியர்கள் குறைவாகவே இருப்பதாலேயும் இதுபோன்ற பல இற்றைநிலை அற்பக்காரணங்களை முன்வைத்தும், சில சிங்கள அரசியல்வாதிகள், மாவட்டத்திலே பெரிதான திருகோணமலை வைத்தியசாலையை அதன் ஆதாரவைத்தியசாலை தரத்திலிருந்து நீக்கி, சிங்களப்பெரும்பான்மை வாழும் கந்தளாயிலே உள்ள வைத்தியசாலையை ஆதாரவைத்தியசாலை ஆக்கிவிட முழுமுயற்சி எடுப்பதாகத் தெரிகின்றது. திருகோணமலைக்கு வரும் உதவிகளே இப்படியான அரசியல்வாதிகளாலும் அவர்களோடு இயங்கும் சில பெரும்பான்மையினத்தினராலும் வழங்கப்படமுடியாமல், (சில நேரங்களிலே பாதிக்கப்படாத உள்நாட்டிலே வாழும் சிங்களமக்களுக்குச் சும்மா வழங்கப்பட்டிருப்பதாக, இன்றும் நேற்றிரவும் செய்திகளிலே நான் படித்தும் கேட்டுமிருக்கின்றேன்) இருக்கின்றதாம். தவிர, அண்மையிலே திருகோணமலையிலே நிகழ்ந்த எல்லா இனத்தவருக்கும் எல்லா உதவிசெய்யமைப்புகளுக்குமான கூட்டத்தின்பின்னே, திருகோணமலை அரசாங்க அதிபர் உரொட்ரிக்கோவே நிவாரணநிதி/உதவியினைப் பிரித்துவழங்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாலே, நடைமுறைச்சிக்கல் ஏற்பட்டிருப்பதாக, எனக்கு நேற்று திருகோணமலைக் கச்சேரியிலே நிகழ்ந்த அடாவடித்தனமான நிகழ்வு உணர்த்துகின்றது.

அகதிகளுக்கு மிகவும்தேவையான அத்தியாவசியப்பொருட்களாக, கட்டிடப்பொருட்கள், மின்பிறப்பாக்கி, சமையற்பாத்திரங்கள் இருக்கின்றதாம் - அதுவும் அடர்ந்த மழை பெய்யும் இந்த நிலையிலே மிகவும் நெருக்கமாக இருக்கும் அகதிமுகாங்களிலே (திருகோணமலை கஞ்சிமடம் பாடசாலை (அநுராதபுரம் சந்தி கலைமகள் வித்தியாலயம்), மூதுர் இலங்கைத்துறை, நிலாவெளி வேலூர் என்பன சிலதாம்) நோய் பரவும் சாத்தியங்கள் அதிகமாகவிருக்ககூடும் என்றதும் தற்காலிகமாக உதவி செய்யச் செல்லமுடியாதிருக்கும் நிலையும் உண்டாகியிருக்கின்றது. வியாழன்/வெள்ளி மூதூர்-ஈச்சிலம்பத்தை, வாகரை ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லவிருந்தபோதுங்கூட, போக்குவரத்திலே நடைமுறைச்சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னான். இங்கே குறிப்பிடவேண்டிய இன்னொரு விடயமென்னவென்றால், பல பாதைகள் சுத்தம் செய்யப்படாத நிலையிலும் இன்னமும் பிணங்கள் அகற்றப்படாதநிலையிலேயே இருப்பதாலும், அப்படினான பிரதேசங்களிலே நிலைமை இன்னும் மோசமடையக்கூடலாமென்று தெரிகின்றது.

இவை எல்லாவற்றினையும் விட மோசமான - ஆனால், இதுவரை பெருமளவிலே உணர்ந்து தொழில்சாரளவிலே செயற்படாத - நிலைமை, உடல்ரீதியான விளைவுகளுக்கு நிவாரணங்கள் கிடைக்கின்றபோதும், மக்கள் உளரீதியாக அடைந்திருக்கும் தாக்கத்திலேயிருந்து மீட்டுவர உளவியல் நிபுணர்களோ பயிற்றப்பட்டவர்களோ அதிகமில்லாது இருப்பதெனத் தோன்றுகின்றது. உறவு உடைமைகளை இழந்தவர்களின் உளநிலை, தற்போது நிவாரணத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் ஓரளவுக்குச் சிக்கலை உருவாக்கியுள்ளது. பித்துப்பிடித்து மெய்யாகவே அதிர்ச்சியினைத் தாங்காமல் இந்நிகழ்வினை ஒரு கனவுநிலைபோல எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலே இருக்கின்றார்கள் என்று தெரிக்கின்றது. தவிர, வாகரை மக்களிலே கணிசமானோரின் தொழில் மீன்பிடித்தல்; ஆனால், இந்த அநர்த்தத்தின்பின்னாலே, தான் பேசிய சிலர் இனி கடற்பக்கமே போகமாட்டோமென்ற உளவியல்வெறுப்போடும் பயத்தோடும் இருப்பதாகத் தெரிகின்றார்கள் என்றான். ஆனால், அதுவே வாழ்தொழில் அதுவானபோது -அதைவிட வேறு தொழிலனுபவம் இல்லாதபோது -, அதைவிடுத்து என்ன செய்யமுடியுமென்று தோன்றவில்லை. இந்நிலையிலே உளவியல் நிபுணர்கள் அவசியமாகின்றது. திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலே, SEDOT இலே இரண்டு உளவியல் பயிற்றப்பட்டவர்களைக் கொண்டிருப்பதாகவும் கொழும்பிலே உளவியல் மருத்துவநிபுணனானத் தொழில்புரியும் எங்கள் நண்பன் தற்போது தொழில்புரியும் வைத்தியசாலையிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்துக்கொண்டு திருகோணமலை வர இசைந்திருப்பதாகவும் அதற்கான விடுப்பு அனுமதியை சுகாதார அரசு தந்திருப்பதாகவும் சொன்னான் (இன்றைக்கு வருகின்றதாக, இப்போது தொலைபேசியபோது அறிந்தேன்). இதன்மூலம் இன்னும் சில உளவியல் ஆலோசனைகூறுகின்றவர்களைப் பயிற்றுவிக்க உடனடித்திட்டமிருப்பதாகவும் தெரிகின்றது.

அடுத்த சங்கடம், கிடைத்திருக்கும் உதவிகளை, பொருட்களைப் பங்கிடுதல் குறித்த நடைமுறைச்சிக்கல்; அரசாங்க அதிபரூடாகச் செல்லவேண்டுமென்று இன்றைய நிலை ஒரு புறமிருக்க, கொடுக்குமிடங்களிலும் ஓரூரின் ஒரு பகுதிக்குக் கிடைக்க, மறுபகுதிக்கான அமைப்பு கொடுக்கும்வரை, கிடைக்கும்பகுதியையும் கிடைக்கவிடாது தடுப்பதுபோன்ற சில புரிந்துகொள்ளக்கூடிய, ஆனால், தவிர்க்கவேண்டிய நிலைமைகள் இருக்கின்றன. கூடவே, கொண்டு செல்வதற்கான வாகனங்கள்- குறிப்பாக, மழை, வெள்ளம், விளைவான சேற்றுநிலம் என்பவற்றிடையேயும் தொழிற்படக்கூடிய, உழவு இயந்திரம், ஜீப் போன்ற கனரகவாகனங்கள் தேவையாக இருக்கின்றதாம். அவை இல்லாமல், சில சந்தர்ப்பங்களிலே கிடைத்திருக்கும் உதவிகளையும் வேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய நிலைமை இல்லாதிருக்கின்றது.

இந்தக்கிழமை அல்லது வரும் கிழமை திருகோணமலையிலே இருந்து ஓர் இணையத்தளம் நிவாரணம், நிலைமை குறித்து தாங்கள் அமைத்து ஏற்ற இருப்பதாகவும் கூறினான். கூடவே பாதிக்கப்பட்ட களங்களுக்குச் செல்லும் மயூரனும் திருகோணமலை மாவட்டம் குறித்த மேலதிக செய்திகளைத் திரும்ப வந்து தன் வலைப்பதிவிலே தருவார் என்று நம்புகிறேன்.

ஆனால், இன்னொன்றினையும் இந்நிலையிலே அவதானமாகவும் ஆறுதலாகவும் யோசிக்கவேண்டியதாக இருக்கின்றது. உடனடியாக உணர்வுமயப்பட்ட நிலையிலே உதவி குவிகின்றது; ஆனால், உணர்ச்சிகளும் வெள்ளமும் வடிந்தபின்னாலே, தொழில்புரி வசதி, வாழிடம், உறவு எல்லாவற்றினையும் இழந்து நிற்கின்ற பேரெண்ணிக்கையான மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையினைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்காக என்ன திட்டங்களையும் அதற்கான பொருளாதார, உளவியல், மருத்துவவசதிகளையும் பலத்தினையும் நாங்கள் வழங்கப்போகின்றோம் என்பது நிதானமாக யோசிக்கப்படவேண்டும். அதனால், நிதியினையும் உதவிகளையும் உளம் கனிந்தும் நெகிழ்ந்தும் வழங்குகின்றவர்கள், எதிர்காலத்திலும் - குறைந்து ஓரீர் ஆண்டுகளுக்கேனும் - தாயகத்து உறவுகளுக்குக் கைகொடுக்கும்வண்ணம் தமது நிதி, உதவிகளைத் திட்டமிட்டு வழங்கவேண்டுமென்பது என் அபிப்பிராயம். ஏன் உங்கள் புத்தாண்டுத்தீர்மானங்களிலே இப்படியான உதவி செய்தல் குறித்ததும் ஒன்றாக இருக்கக்கூடாது?

5 Comments:

  • நண்பருக்கு,
    கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவது/நடைபெற்றது குறித்து விபரமாய் எழுதிய குறிப்புக்கு நன்றி. இப்போதுதான் சூசையின் பேட்டியின் மூலம் (tamilnet) முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கு போன்றவற்றில் நிகழ்வதை அறியமுடிந்தது.
    நீங்கள் சொன்னது மாதிரி இரண்டு விடயங்கள் முக்கியமானது. உடனடி நிவாரணம்/உதவி என்று நின்றுவிடாமல் நீண்டகாலத்திற்கு திட்டமிட்டு உதவிகள் வழங்கப்படவேண்டும். மற்றது உளவியல் பிரச்சனைகள். இதுகுறித்து உளவியல் மருத்துவர் சோமசுந்தரம் ஒரு அறிக்கை வெளியிட்டும் இருக்கிறார் (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13788). இவரைப்போன்றவர்களின் பணி இந்தச்சமயத்தில் மிகவும் அவசியமானது (இவரின் பேட்டி மூன்றாவது மனிதனில் வந்ததாயும் நினைவு).
    புதுவருடமும் பிறந்துவிட்டது. நல்லது நடக்குமென நம்புவதைத் தவிர வேறென்னத்தைச் சொல்ல?

    By Blogger இளங்கோ-டிசே, at 2:26 AM  

  • நல்ல பதிவு.

    ஆமாம் டீஜே! எனக்கும் நம்பிக்கையே முக்கியமானதாக தெரிகிறது. நம்பிக்கை நல்லதிற்கு இட்டுசென்றாலும் இட்டு செல்லும். நம்பிக்கையினமை நிச்சயம் எங்கேயும் இட்டுசெல்லாது.

    By Blogger ROSAVASANTH, at 2:45 AM  

  • இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி கடந்த வாரத்தில் நானறிந்தது பொதுமக்கள் மத இன ஒற்றுமையுடனேயே இருக்கிறார்கள். இவர்களைச் சீரழிப்பது கட்சிகளும், அரசும், மதங்களுமே. தனித்தனியான மக்களின் தொண்டுள்ளத்தை ஒருங்கிணைக்கத் தெரியாமல் சிதைத்தழிக்கும் இவர்களை என்ன செய்ய? இத்தனைத் தீய சக்திகளுக்கும் நடுவில் பணிபுரியும் நண்பர்களுக்கு நம் வணக்கங்களும் ஆதரவும் நெடுகக் கிடைக்கும்.

    By Blogger சுந்தரவடிவேல், at 6:58 AM  

  • டிஜே, நீங்கள் சொல்லும் சோமசுந்தரத்தின் அறிக்கைக்கும் இணைப்புத் தந்திருக்கின்றேனே. திருகோணமலை வந்திருக்கும் உளவியல் மருத்துவநண்பன் சோமசுந்தரத்தின் முன்னைய மாணவனே.

    ரோஸா வசந்த், சுந்தரவடிவேல் சற்றேனும் புரிந்துணர்வு ஆரம்பிக்க இச்சந்தர்ப்பம் உதவுமென நினைக்கிறேன்.

    By Blogger -/பெயரிலி., at 1:32 AM  

  • ரமணி அண்ணா புரிந்துணர்வு என்று பார்த்தால் தமிழ்- சிங்கள- முஸ்லிம் கிராமப்புற மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் தன்மையும் வளர்ந்திருக்கின்றன.அரசியல்வாதிகள் தான் இடையில் சிண்டு முடிந்துவிடப்பார்க்கிறார்கள்.கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ்க் கிராமம் ஒன்றுக்கு பாதைகள் அடைக்கப்பட்டமையினால் சிங்கள மக்கள் தலையில் சுமந்து சென்று உணவுகளை வழங்கியதாகக் கேள்விப்பட்டேன் அவர்கள் நன்றிக்குரியவர்கள் கூடவே சிங்கள் முஸ்லிம் கிராமங்களில் தங்கியிருந்து பல சிரமங்களுக்கு மத்தியிலும் மருத்துவ உதவி புரியும் யாழ்,வவுனியா மாணவர்களும் நன்றிக்குரியவர்கள்.
    இது தொடர்பில் நிறைய எழுதவேண்டும் பொருட்கள் சேகரித்தலும் அனுப்புதலும் இன்னும் நீளுவதால் எழுத முடியவில்லை.எனது பதிவில் உங்களது பின்னூட்டத்திற்கும் ஆருதலாக விரிவாகப் பதிலளிக்கின்றேன்

    By Blogger ஈழநாதன்(Eelanathan), at 11:43 PM  

Post a Comment

<< Home