அலைஞனின் அலைகள்: புலம்

Wednesday, December 29, 2004

எழுத்துக்கத்தையுட் பதுங்கும் கழுதைப்புலி

சற்று நேரம் முன்னாலே கண்ட ஒரு பதிவு மிக வெறுப்பினையும் ஆத்திரத்தினையும் ஏற்படுத்தியது. அதற்குச் சரியான விதத்திலே பதில் கொடுப்பது மிகச்சுலபம். ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வலைப்பதிவின் பின்னூட்டப்பெட்டியிலே நிகழ்ந்த வலைச்சண்டையின் பின்னாலே, சில விடயங்கள் தொடர்பாக எதையுமே இனிமேல் பேசுவதில்லை என்றும் மிதமிஞ்சிய உயர்வுமனப்பிறழ்வினாலே பாதிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட சில கறுப்பு-வெள்ளைமட்டுமே காண் கண்களுள்ள மேலாதிக்கவாதிகள் சிலருடன் எதையுமே எப்போதுமே பேசுவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

இங்கே நான் சொல்லும் பதிவினைத் தந்திருக்கின்றவர், கிட்டத்தட்ட ஜெயமோகனின் எழுத்தை வாசிக்கின்றோமென்ற உணர்வினை ஏற்படுத்தும் ஒரு மேலாதிக்கவாதி; ஜெயமோகனின் வாசிப்புவிரிவு குறித்தல்ல நான் சொல்வது; வழவழா கொழகொழாவென்று சுற்றிவளைத்து புளியம்பழம் உலுப்பிக்கொட்டியதான எழுத்துவிரிவினையும் உயர்ந்த பீடத்திலே குந்திக்கொண்டிருந்து மற்றவர்களைக் கீழே குந்திக்கொண்டு குரு மூஞ்சியை தூக்கி எறியும் உரொட்டித்துண்டுக்கு அண்ணாந்து பார்க்கும் தெருநாய்களுக்குப் பேசுவதாக எண்ணிக்கொள்ளும் தன்மையையும் வாரத்துக்கொருமுறை (நித்யசைதன்யநிதிபோல) தன் குருவினைத் தூக்கிகொண்டாடும் 'சுயாதீனச்சிந்தனையும்' குறிப்பிட்ட சில நிலைப்பாடுகள், கொள்கைகள், கருத்துகள், அவற்றினைக் கொண்டவர்கள் மீதான காழ்ப்புத்தன்மையினையும் ["எப்போதோ மறைந்துபோன மெய்யியல்வாதியான தளையசிங்கத்தை (மதுசூதனன் 'வல்லினம்' இதழிலே சொல்வதுபோல)அரைகுறையாகக் கிண்டியெடுத்து தலைதாங்கி ஜெயமோகன் கொண்டாடுவது, கைலாசபதி போன்ற இடதுசாரி விமர்சகர்களை மடக்கி/மட்டம் தட்ட அல்லவாம்"] கொண்ட பண்புக்குதம்பலைக் சொல்கிறேன். ஆனால், இந்த அதீத உயர்வுப்பிறழ்வாளுமையாலே பாதிக்கப்பட்டிருக்கும் மேலாதிக்கவாதியின்இணையக் குருபீட எழுத்துகளையும் தொடர்ந்து வாசிக்கின்றவர்களுக்கு - அப்பதிஞர் செய்யும் நல்ல காரியத்தின் மேலாகவும்- அவரின் இன்றைய பதிவின் மோனக்கள்ள உள்ளர்த்தமும் குருபீடப்பிரசங்கமும் மூடி திறந்து அடிகிடக்கும் முகம் காட்டியிருக்கும் என்பது என் நம்பிக்கையும் அவாவும். ஒருவரது சாதி/பிரதேச/மொழி நிலைப்பாடு பாஸிஸம் அல்லது குறுகல்நிலைவாதமென்றால், இன்னொருவரது தன் தேசம் என்ற பெருமை மட்டும் ஏன் பாஸிஸமாகாது அல்லது ஏன் விரியுளநிலையாகாது என்று இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி தோன்றுகின்றது. தன்னிலை மட்டுமே சரியான நிலை மற்றவரது இல்லை என்று தனது உளைச்சலைமட்டும் முன்வைத்து ஒருவர் எழுதினால், அவரது நோய்க்கு ஏது மருந்து?! ("Patriotism is the last resort of a Rogue" என்று யாராவது பழம்பெரும் அமெரிக்கச்சுதந்திரவீரரை மேற்கோள்காட்டி நானும் போகிறபோக்கிலே சொல்லிவிட்டுப்போகிறேன்.)

எனக்குப் பீய்ச்சாக் கழிவைப் பீய்ச்சிப் பதிவதிலும்விட, இன்றைக்கு இந்தக் குருபீடப்பதிவை வாசிக்கமுன்னாலே சொல்ல வந்ததை நான் பதிவது மேலானதாகப் படுகின்றது. இன்றைய நாளும் உளமும் இருக்கும் நிலையிலே நான் வேண்டவே வேண்டாததெல்லாம், வலைவாள்வீச்சும் வீணான பேச்சைப் பேசிக்கழிப்பதும்.

5 Comments:

 • Which email you're using right now? I have sent an email(regarding Michael) to you but it came back to my email.Pls let me know asap.

  By Blogger டிசே தமிழன், at 10:05 PM  

 • நீங்கள் சொல்வது போலத்தான் நானும் அந்தப்பதிவை வாசித்து கொதிப்படைந்தேன். இருக்கின்ற மனநிலையில் அதில் பின்னூட்டம் எழுதி அடிபடமுடியாது. நீங்களாவது அவரில் 'நல்லநிலை' இருக்கின்றது என்று கொஞ்சமாவது சொல்கிறீர்கள். நான் அதைக்கூட, வக்கிரமாய் ஏற்கனவே எழுத்தில் பிரதிபலித்திருப்பதால், அந்த 'பெரிய மனதை'க்கூட நிராகரிக்கின்றேன்.

  By Blogger டிசே தமிழன், at 10:20 PM  

 • பெயரிலி, நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று சரியாய் விளங்கவில்லை. நான் படித்தவரையில் இந்த சிவகுமார் என்பவர் எழுதியதை விட வாந்தி வரவழைக்கும் ஒரு எழுத்தை யாராவது எழுதமுடியுமா என்று தெரியவில்லை. உண்மைலேயே குமட்டிகொண்டு வந்தது. இப்படியும் ஒருவர் அரசியல் செய்து, மற்றவரை அரசியல் செய்வதாக சொல்லி எல்லாம் எழுதமுடியுமா என்று தெரியவில்லை. இது குறித்து பேசுவதும், எதிர்வினை வைப்பதும் அபத்தமானது, உண்மையில் அந்த ஆசாமி விரும்புவது அதைத்தான்.

  என்னால் ஆககூடியது எதுவும் உண்டெனில் எழுதுங்கள்.

  By Blogger ROSAVASANTH, at 11:55 PM  

 • பத்ரி : நீங்கள் சொல்வதைப்போல என்ன வேண்டும், என்ன உடனடித் தேவை என்பதும் நேரடியாக TRO அமைப்பிடமிருந்துதான் வரவேண்டும். யாருக்காவது TRO அமைப்பின் முக்கியஸ்தர்களைத் தெரியுமா? நேரடி தொலைபேசித் தொடர்பு இதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
  http://thoughtsintamil.blogspot.com/2004/12/blog-post_110430229635285558.html

  பத்ரி கேட்டதற்கு அங்கே பதில் வராததால் இங்கே ஒட்டுகிறேன். நேரம் கிடைக்கும்போது பதில் சொல்லவும்

  By Blogger ROSAVASANTH, at 12:53 AM  

 • ரோஸா வசந்த்,
  தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் அமைப்பாளர்கள் எவரையும் இலங்கையிலே எனக்குத் தெரியாது. ஆனால், அமெரிக்காவிலே அவர்களுக்கான தொடர்புத்தொலைபேசி இலக்கங்கள் இங்கே உள்ளன
  http://www.trousa.org/local_contacts.html
  வேண்டுமானால், அங்கே தொடர்பு கொண்டு கேட்டுச் சொல்கிறேன். அல்லது, நேரடியாக, info@trousa.org இற்கு எழுதவும் முடியும். கனடாவிலே TRO அமைப்பாளர் சிவநாதன் என்பவர் என்று நினைக்கிறேன் (இன்று கவிதன் தந்த சுட்டியிலே கண்ட தமிழ்விஷன் ஒளிபரப்பூடாக அவர் செவ்வியினைக் கேட்டேன்); டி ஜே தமிழன் போன்ற கனடா நண்பர்கள் உதவி செய்யலாம். ஐக்கிய பிரித்தானியாவிலே எனது நண்பர் பவகரன் இன்று பேசியபோது, தான் தற்போதைக்கு TRO இன் சேவையிலே பொருட்கள் சேர்த்து இலங்கைக்கு அனுப்ப உதவுவதாகச் சொன்னார் (அம்பாறையிலே முழுக்கவே அழிக்கப்பட்ட திருக்கோவில் அவருடைய கிராமம்). அவரிடம் கேட்டுச் சொல்கிறேன். [இப்போது இந்தியாவில் தெற்குப்பகுதியிலே கன்யாகுமரியிலே மீண்டும் சுனாமி என்று சக்தி வானொலியிலே கூறுகின்றார்கள்]

  By Blogger -/பெயரிலி., at 1:25 AM  

Post a Comment

<< Home