அலைஞனின் அலைகள்: புலம்

Thursday, June 23, 2005

கலங்கல் அகலக் காணலே காட்சி

முதலே சொல்லிவிடுகிறேன்; முக்குலத்தோரை நியாயப்படுத்துவது அல்ல. என் நோக்கம். ஆனால், தமிழக நிகழ்வுகளை உன்னித்துக் கவனித்து வருவோமானால், பெரும்பாலும் பார்ப்பனிய_ஊடகங்கள் (இங்கே கண்ணும் கருத்தும் தெளிவானோர் பார்ப்பனர்_ஊடகங்கள் என்று வாசிக்கமாட்டார்கள்) முக்குலத்தோர்-தலித் பிளவுகளைப் பெரிதுபடுத்திக்காட்டுவதிலேயும் ராமதாஸ்-திருமாவளவன் (வன்னியர்-தலித்_ஒரு-பகுதி) ஆகியோரின் கூட்டினை எள்ளி நகையாடுவதிலுமே கண்ணாக இருக்கின்றார்கள்; "ஆக, இத்தால் அறியப்படவேண்டியது என்னவென்றால், தமிழகத்தில் உள்ள சாதிப்பிரச்சனை அத்தனையும் "இடைநிலை_சாதி".எதிர்."கீழ்நிலை_சாதி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே." உலகின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் மூலகாரணம், அமெரிக்காதான் என்று ஒடுக்கிச் சுருக்குவது எவ்வளவுக்கு மடைத்தனமும் நேர்மையற்ற செயலுமோ அதைப்போலவே "தமிழகத்தின் எல்லாச்சிக்கல்களுக்கும் அடிவேர் பார்ப்பனியமே" என்பதும்; ஆனால், பார்ப்பனியம் என்பது நிச்சயமாக பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அத்தோடு, பார்ப்பனியம் எனும்போது, இடைநிலைச்சாதி, கீழ்நிலைச்சாதி என்ற வகைப்படுத்தலோடு மேல்நிலைச்சாதி என்பதும் உள்ளடங்கியிருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

பார்ப்பனிய ஊடகம், ஊடகவியலாளர் என்று ஏன் கூறுகின்றேனென்றால், தமிழ்நாயரான ஜெயக்காந்தன்பிள்ளை போன்றோரும் அவருடைய குட்டிநாயர்களும் மிக இலகுவாக பார்ப்பனர் அல்லாதவராக உருக்காட்டப்பட்டுவிடலாம்; கிட்டத்தட்ட வையாபுரிப்பிள்ளை போன நூற்றாண்டின் பின்பகுதியிலே செய்ததும் இதுவே; வேண்டுமானால், கல்யாணசுந்தரமுதலியாரையும் டி. கே. சிதம்பரம்பிள்ளையையுங்கூட இந்தப்பட்டியலிலே சேர்த்துக்கொள்ளலாம். இப்பட்டியலிலே, தண்டபாணிபிள்ளை ஜெயக்காந்தன்பிள்ளையை விட்டுவிடுவோம்; மிகுதியானவர்கள், தாம் பார்ப்பனியச்சித்தாந்தத்தினைக் காவுகின்றோமென்று அறிந்தே - தம் குல இருப்பினைத் தக்க வைக்கச்- செய்தார்களா, அல்லது, இவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டினாலே (வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுரீதியான வடமொழியினை முன்னிறுத்திய போக்கு; கல்யாணசுந்தரமுதலியாரின் இந்தியதேசியத்தினை முன்னிறுத்திய காங்கிரஸினை முன்னிறுத்திய போக்கு; டிகேசியின் இலக்கியச்சுவைத்தலின் பாற்பட்ட கம்பராமாயணத்தினை முன்னிறுத்திய போக்கு) பார்ப்பனிய சித்தாந்தத்தினை முன்னிலைப்படுத்தியவர்களுக்கு அறியாமலே நகர்த்துகாய்களானார்களா என்று சரியாக எனக்குப் புரியவில்லை. ஆனால், இவர்களையும் இவர்களின் கருத்துகளையும் பார்ப்பனிய/வடமொழி முன்னிறுத்து/தமிழ்த்தேசியக் கூட்டுவுணர்வுக்கெதிரான நிலைப்பாடுள்ளோர்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்; இன்னும் பயன்படுத்துகின்றார்கள்.

ஐம்பதுகளின் பிற்பகுதிகளிலும் அறுபதுகளிலேயும் எழுபதுகளின் முற்பகுதிகளிலும் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்தினையும் பார்ப்பனிய எதிர்ப்பினையும் திராவிடதேசியத்தினையும் முன்னிலைப்படுத்திய திராவிடக்கட்சிகளின் ஆளுமைக்கு முன்னாலே, ஒடுங்கிப்போயிருந்த பார்ப்பனிய/வடமொழி/தமிழ்த்தேசியத்துக்கு எதிரான சக்திகள், திராவிடக்கட்சிகளின் அரசியல், பண்பாட்டுச்சீரழிவின்பின்னாலே, மீண்டும் உலகளாவிய மதத்தீவிரவாதத்தின்பின்னால் மறைந்துகொண்டு ஆழ வேரிட்டு முளையெடுத்து மேற்செல்ல முயல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்தக்காலகட்டத்திலே, இத்தகுசக்திகளின் காய்நகர்த்துதல், ஒடுங்கிப்போய்விட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பலம்பொருந்திய கொள்கையான தனக்கு எதிரானசக்திகளைப் பிரித்தலும் தம்மை மீறாதவிதத்திலும் தம்நலத்தினைச் சேதப்படுத்தாதவிதத்திலும் பிளந்த எதிர்ச்சக்திகளிலே தனக்கு அடுத்த நிலையிலே வர்ணாசிரம அடிப்படையிலே வைத்திருக்கும் குழுவுக்கெதிராக, அடிமட்டத்திலே வர்ணாசிரமும் வைத்திருக்கும் குழுவினை மோதவிடுதலுமாக இருக்கின்றது. முதலிலே தலித்துகளை இந்துமதபீடங்கள் மீனாட்சிபுரமதம்மாறுசம்பவத்தோடு ஒரு கண்துடைப்புக்காக அணுக முயன்றது. அதற்குக் காரணம், இந்துமதத்தின் அத்திவாரத்திலே ஆட்டம் வந்துவிடுமோ என்பதால், மேல்மாடியிலே இருந்தவர்கள் பயமுற்றது. அதன் பின்னாலே, எதுவுமே பத்தாண்டுகளாக நடக்கவில்லை. பிறகு, இந்துமதபீடங்களுக்கு ஈடான அசகிப்புத்தன்மை கொண்ட பொருட்பலமுள்ள பப்டிஸ் கிறிஸ்துவ ஊடுருவலும் மத்தியகிழக்கிலே தொழிலுக்குப் போனவர்களூடாக உள்நுழைக்கப்பட்ட தீவீரவாத வஹாபி இஸ்லாமும் வெளிப்படையாகச் செயலாற்றத் தொடங்கிய காலத்திலே, தீவிர இந்து இயக்கங்களினை வைத்து பார்ப்பனியகூட்டுச்சக்திகள் செயலாற்றத்தொடங்கின என்று சொல்வேன்.

அண்மைக்காலத்திலே, இருள்நீக்கி சுப்பிரமணியம் என்ற காஞ்சி சங்கராசாரியாரின் தலித்துகளை அணுகலும் இதன்பாலானதே. கிட்டத்தட்ட, குருவுக்கு வன்னாயுதப்போரிட எத்துணை தெரிந்தபோதும், புழு தொடையிலே துளைத்தாலுங்கூட பிராமண குருவின் தூக்கம் கலையாது அசையாதிருக்க, ஷத்திரியனுக்குத்தான் ஆகும் என்கிற புராண(ப்)பார்வையைக் கொஞ்சம் தலித்துகளுக்கு நகர்த்தியதுபோன்ற செயற்பாடு இதுவெனலாம். மீதியான தம்மை அரசியல், பொருளாதார வகையிலே எதிர்கொள்ளக்கூடிய சாதியினரை எதிர்கொள்ள, தலித்துகளைப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கின்றது. நேராக, குறியினைத் தாக்காமல், நீரிலே, ஆடியிலே விழும் விம்பத்தினைச் சுட்டி அம்பெய்யெனும் தன்மை இதுவெனலாம். தம் உழைப்பாலே உயர்மட்டத்தினை அடைந்த தலித்துகளின் பார்ப்பனப்போர்வைக்கு ஆசைப்படும் போக்கினையும் இங்கே பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கின்றது; பண்ணைபுரம் சின்னத்தாயி புள்ளை இளையராஜா இதற்கு ஒரு செவ்வுதாரணம். இளையராஜாவினைத் தூக்கித் தலையிலே வைத்துக்கொள்ளும் பார்ப்பனிய ஊடகங்களும் அபிமானிகளும் இளையராஜாவின் அரசியல் திருமாவளவன் போலவோ அல்லது கிருஷ்ணசாமிபோலவோ இருந்தால், அவரை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.

இதுதவிர, பார்ப்பனிய நலனைப் பேணும் சக்திகள் அமைப்பு சார்ந்து தமிழகப்பொதுவுடமைக்கட்சிகளிலும் நிறையவே தொடர்ந்திருக்கிறன. தமிழகத்திலே மட்டுமல்ல, பொதுவாகவே இந்தியாவிலேயே மரபுசார் பொதுவுடமைக்கட்சிகளிலேயிருந்து, தொண்ணூறுகளின் பின்னே விலகிப்போனவர்களைப் பார்த்தால், பார்ப்பனியத்தினை முன்னிறுத்துகின்றவர்கள் பாரதீயஜனதா போன்ற கட்சிகளிலே சேர்ந்திருக்க, மீதியானவர்கள், தலித்முன்னிலைப்படுத்து, தமிழ்த்தேசிய, பெரியாரியப்பார்வைகளை எடுத்துச் செல்ல முயல்கின்றனர். ஆனால், மரபுசார் பொதுவுடமைக்கட்சியில் இன்னமும் பார்ப்பனியகைப்பிடி இறுக்கமாக இருக்கின்றதைக் காணலாம்; மார்க்ஸும் லெனினும் பார்ப்பனிய நலத்துக்குக் கேடுவராதவரைக்குமென்பதே இவர்களின் நிலைப்பாடும். பார்ப்பனிய நலனைப் பொறுத்தமட்டிலே இவர்களுக்கு இடது வலது கொள்கைப்பேதமில்லையோ என்றே தோன்றுகிறது. மிகவும் இயல்பாக, செந்தோழர் 'இந்து' ராமும் காவிஞானி 'துக்ளக்' ராமசாமியும் பொருந்திக்கொள்கின்றார்கள். ஒருவர் இருள்நீக்கி சுப்பிரமணியர் சிறை வைக்கப்பட்டதற்கு வருந்தி எழுதினாரென்றால், மற்றவர் அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது, போய் சவாரி கொடுக்கின்றார். அடிப்படையிலே, இவர்கள் இணைவது இந்த பார்ப்பனியநலன்பேணலின்விளைவாகவே.

இந்த வகையிலேயே "தமிழகத்தில் உள்ள சாதிப்பிரச்சனை அத்தனையும் "இடைநிலை_சாதி".எதிர்."கீழ்நிலை_சாதி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே" என்னும் மாயை ஏற்படுத்தப்படுகின்றது; தமிழுக்காகக் குரல் கொடுக்கின்றவர்கள், இந்தப்பார்ப்பனிய சக்திகளாலே மிக இலகுவாக, குரல் கொடுப்பவர்களை இவர்கள் எடைபோடும் வகையிலே, ஒன்று, எள்ளிநகையாடப்படுகின்றார்கள், அல்லது, பயங்கரவாதிப்பட்டம் கட்டப்படுகின்றார்கள். ராஜ்குமார் தொடர்பாக வீரப்பனோடு பேச, நெடுமாறன், கல்யாணி, சுகுமாரன் போனபோது, இந்து ராமும் துக்ளக் சோவும் ஒருமித்த குரலிலே ரீடிஃப்பிலே, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளர்கள் என்ற குரலை இடம்-வலம் மறந்து எழுப்ப முடிகின்றது. அதேபோல, ராமதாஸினையும் திருமாவளவனையும் 'தமிழைச் செம்மொழி ஆக்குங்கள்' என்பவர்களையும் இலகுவாக தார்பூசி, தமிழ்க்குடிதாங்கி என்றவகையிலே எளிமைப்படுத்திவிடமுடிகின்றது. ராமதாஸும் திருமாவளவனும் உச்சக்கட்டத்திலே சண்டைபிடித்துக்கொண்டபோது, வன்னியர்.எதிர்.தலித் என்றதை வலிந்து வலிந்து "வெட்டு_குத்து_கொலை" என்பதாகப் பெரிதுபடுத்தி எழுதிய ஊடகங்கள், இப்போது, இருவரும் சேர்ந்து செயற்படுவதிலே கிண்டலடிக்கச் செய்கின்றன. இங்கே, குறிப்பாக ஒன்றைக் கவனிக்கவேண்டும். இந்தக்கூட்டினைக் கிண்டல் செய்யும்போதுகூட, திருமாவளவனை இவர்கள் நேரடியாகக் கிண்டல் செய்வதில்லை என்பதை கொஞ்சம் உன்னிப்பாக வாசிக்கின்றவர்கள் அவதானிக்கலாம்; ஆக, ராமதாஸினையும் அவர் மகனையுமே வெளிப்படையாக அடித்துத்தள்ளுகின்றார்கள். இதற்கான காரணத்தினை அறிவது மிக இலகு; நான் மேலே எழுதிய, "பலமற்ற எதிரியைத் தட்டிக்கொடுத்து அவன் மூலம் உடனடி எதிரியைத் தாக்கு." 'கிருஷ்ணசாமி.எதிர்.திருமாவளவன்' என்ற 'தென்மாநில தலித்.எதிர்.வடமாநிலதலித்' என்ற உருவாக்கமும் சில ஆண்டுகளின் முன்னே பார்ப்பனியசித்தாந்தத்தினை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ காவும் பத்திரிகைகளிலே பெரிதுபடுத்தப்பட்டுக்கொண்டேயிருந்தது. ஆனால், இப்போது, வடமாநில வன்னியர்_தலித் கூட்டு மிகவும் பயமுறுத்துவதாக இருப்பதால், அதையிட்டே கவனம் திரும்பியிருப்பதால், இந்த 'வடதலித்.எதிர்.தென்தலித்' அடங்கிப்போயிருக்கின்றது. இப்படியான ஊடகங்கள், பதிப்பிலோ, ஒலி/ஒளியிலோ, ஏன் இணையத்திலோ இயன்றவரை பார்ப்பனிய (பார்ப்பன என்றே இங்கே வாசித்துக்கொள்ளவும்) ஒற்றுமைக்கு ஏதோ வகையிலே உள்வீட்டுத்தனியார் ஈடேற்றம் குறித்த மோதலிலே ஊறுவரும்போது, கலங்கிவிடுகின்றன. இந்து பத்திரிகையின் மீது ஜெயலலிதா அம்மையார் தன்னைச் சம்பந்தப்படுத்தியதால் நடவடிக்கை எடுக்க முயன்றபோது, பல (எல்லோருமல்ல) ஐயங்கார்களிடையே ஏற்பட்ட கலவரத்தினைக் கண்டபோது இது தெளிவாகத் தெரிந்தது. இதேபோலவே, காஞ்சி சங்கராசாரியாருக்கும் ஜீயருக்கும் உரசல் ஏற்பட்டபோது, அது வெளியே பெரிதும் தெரியாமலே அடங்கிப்போனது. குறைந்த பட்சம் கண்டமகாதேவி தேர் குறித்து எழுதப்பட்டதுபோலாவது, ஊடகங்கள் பேசியிருக்கக்கூடாதா?

சன் ரிவி, ஜெ ரிவி, குமுதம், குங்குமம் என்பன பார்ப்பனிய சக்திகளுக்கானவை இல்லையே என்பதாகவும் ஓரளவுக்குத் திராவிடக்கட்சிகள் சார்ந்தன என்பதாகவும் சொல்லித் தப்பிவிடமுடியாது. சன் ரிவி.எதிர்.ஜெஜெ ரிவி இரண்டு சீரழிந்த அரசியல்வாதிகளினையும் அவர்கள் நலன்களையும் பேண நடாத்தப்படுவன. அதிலேகூட ஜெ அம்மையாரின் ஜெ ரிவியினைத் தாக்காமல், சன் ரிவியினை(யும் குங்குமத்தினையும்) மட்டுமே தொடர்ந்து சிலர் இணையத்திலே தாக்குவதற்கான காரணம் ஜெ அம்மையாரின் பின்புலம் தவிர வேறு எதுவாக இருக்கமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை. இரண்டுமே குப்பை என்றால், ஒரு குப்பையை மட்டுமேன் இவர்கள் நாறுகின்றதாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்கள்? குமுதம் அடிப்படையிலே ஒரு வர்த்தக சஞ்சிகை; உரிமையாளர்கள் செட்டியார்களாக இருப்பினும், அடிப்படையிலே அதன் ஆசிரியபீடம் தொடர்ச்சியாக பார்ப்பனிய நலனினைப் பேணுவதாகவே இருந்திருக்கின்றது; ஆனால், அதற்குக்கூடவே உரிமையாளர்களின் வியாபாரநலனைப் பேணும் தேவையும் இருக்கின்றது; தீராநதி, யாழ்மணம் போன்றவை இந்த நலனைச் சுட்டும்.

ஆரம்பத்திலேயே சொன்னதுபோல, நான் தேவர்களின் தலித்துகளுக்கு எதிரான செயற்பாட்டினை எந்நிலையிலும் (ஊர்க்கோவிற்றேர் என்றாலென்ன, பஞ்சாயத்துத்தேர்தலென்றாலென்ன) நியாயப்படுத்த மாட்டேன். அதேபோல, பாமா, இமையம் போன்ற தலித்துகளே, அடித்தட்டிலே சாதியடைப்படையிலே வைக்கப்பட்டிருக்கின்றவர்களிடையே நிகழும் பிக்கல்களைப் பேசியிருக்கின்றார்கள். அதையும் மறுக்கப்போவதில்லை. ஆனால், சாதிவெறியோடு அலைகின்றவர்கள் தேவர்களும் வன்னியர்களும் தலித்துகளுமே என்பதுபோல, மேல்நுரையைக் காட்டிவிட்டு, தமிழகத்திலே சாதிப்பிரச்சனை முழுக்கவுமே அதற்குள் அடக்கமென்று சொல்லிவிட்டுச் சிலர் தப்பிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. இதற்கு இவர்களுக்கு "மீதி சாதி/குழு குறித்த அடக்குமுறை எதையுமே சொல்லாத" ஊடகங்கள் வாய்ப்பாக இருக்கின்றன. ஆனால், இவர்கள், அசோகமித்திரன் சொன்னதாகச் சொன்னதிலே தான் சொல்லவில்லை என்று சொன்னதை விட்டு ஒன்றுமே சொல்லாமல் விட்டதையிட்டு என்ன சொல்லப்போகிறார்கள்? ஜெயக்காந்தன்பிள்ளை தமிழ்(த்தேசியம்) குறித்துச் சொன்னது குறித்துச் சொன்ன விளக்கம் குறித்து என்ன நினைக்கின்றார்கள்? இவை குறித்து ஏன் பத்திரிகைகள் மிகவும் ஆழமாக விவாதிக்க மறுக்கின்றன என்பதைச் சொல்லவேண்டும். பெருமளவிலே நான் பார்ப்பனியசித்தாந்தத்தையே சுட்டியிருக்கின்றேன்; பார்ப்பனர்களை அல்ல; ஆனால், சில இடங்களிலே நிச்சயமாக பெருமளவிலான பார்ப்பனர்களையும் சுட்டித்தானிருக்கின்றேன். இந்தப்பார்ப்பனிய சித்தாந்தநிலைப்பாட்டினை விட்டுவிலகிச் சிட்டுக்குருவிகளாக நின்ற, நிற்கிற பார்ப்பனர்களையும் எனக்குத் தெரியும்; இந்தப் பார்ப்பனிய சித்தாந்தத்தின் படிக்கட்டுகளிலே உச்சிக்கு அடுத்த குருபீடத்துக்கு நடக்கத் துடிக்கும் நடந்தடைந்த பிள்ளைகளையும் தேவர்களையும் தலித்துகளையும் எனக்குத் தெரியும். ஆனால், இத்தால் சொல்ல விழைந்தது என்னவென்றால், நாம் 'நீருக்கு மேலே தெரியும் வாலை மட்டும் பார்த்து, ஆழக்கடற்சுறா அளவு இவ்வளவுதான்' என்று சொல்லிவிட்டுப் போகக் கூடாது.

'05 ஜூன், 23 வியா. 12:30 கிநிநே.

பி.கு.: பெயரிலிகளாக, முகமூடிகளாக வந்து திட்டிவிட்டுப்போகவும் கருத்துச்சுதந்திரம் உண்டு; மூலம் கண்டுபிடித்து, வழக்கேதும் போடமாட்டேன். ;-)

0 Comments:

Post a Comment

<< Home