அலைஞனின் அலைகள்: புலம்

Wednesday, December 13, 2006

தமிழ்மணம் தேவைப்படுமேதான்

இரவிசங்கரின் "தமிழ்மணம் தேவையா?" இடுகையோடு முழுமையாக ஒத்துப்போகமுடியாதெனினும், நல்ல அலசல். தமிழ்மணம் வருவதற்கு முன்னர் இதே மாதிரியான வாசிப்பிகளை (readers) வைத்துக்கொண்டுதான் ஓடைகளூடாக வாசித்துக்கொண்டிருந்தோம். தமிழ்மணம், இப்படியாக எந்தெந்தப் பதிவுகள் புதிதாக வருகின்றன என்று தேடிக்கண்டு வாசிப்பியிலே சேர்த்துக்கொள்ளும் தேடுதல்நேரத்தினையும் செயற்பாடுகளையும் அநாவசியமாகக் குறைத்தது. பதிவுகள் பெருகப்பெருக இதே சூழல் தொடர்ந்து இருக்கவே போகிறது. இந்நிலையிலே சந்தைப்படுத்தலினின் உச்சப்பயனைப் பெற, தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தேவை இருந்துகொண்டேயிருக்கும். பல்லங்காடி (Mall) இன் தேவை ஏன் ஊசி தேடி வீடுவீடாகப் போய் இருக்கிறதா இருக்கிறதா என விசாரித்து வாங்கவேண்டிய நிலையிலும் முக்கியப்படுகிறதெனப் பார்த்தாலே விளங்கிவிடும். ஆனால், காலப்போக்கிற்கேற்ப தமிழ்மணத்தின் தற்போதைய சேவைகளிலே சில பயனற்றதென்பதால் அகற்றப்பட்டும் புதிதாகத் தேவைப்படும் சேவைகள் வசதிப்படுத்தப்படவும் வேண்டி வரும். இரவிசங்கர் தலைப்பிலே தமிழ்மணம் என்பதற்கு தமிழ்ப்பதிவுகளின் திரட்டி என்ற அர்த்தத்திலே படியெடுத்தலுக்கு ஸீரோக்ஸ் என்று பயன்படுவது என்று பயன்படுத்தியிருக்கின்றார். அதைவிட, பல பதிவர்கள் ஒருவரின் பதிவிலே வரும் இடுகைகளின் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் தமிழ்மணமே காரணம் எனக் குழப்பிக்கொள்ளும் நிலையிலே இப்படியான பதிவர்கள் இருக்கும்போது, தமிழ்மணத்தின் தேவை இருந்துகொண்டேயிருக்குமென்றே தோன்றுகிறது. தமிழ்மணம் ஆரம்பித்தபோது இப்போதிருக்கும் வசதிகள் பல இருக்கவில்லை; புளொக்கர் பதிவுகள் இந்தியாவிலே வாசிக்கத் தடையேற்படும்போது, அவற்றினைச் சுற்றிச் சென்று அணுகும்வண்ணம் பதிவு முகப்பிலேயே PK இடைமுகத்தினைக் கொடுக்கும்வசதி காலத்தின் தேவை. தமிழ்மணத்தின் இன்றைய வடிவம் கொண்டிராத சில வசதிகளை முன்னைய வடிவம் கொண்டிருந்தது (நேராகவே தமிழ்மணம் தளத்திலிருந்து நட்சத்திரம் குத்துதல் போல); ஆனால், அதனாலான பக்கவிளைவுக்கெடுதல் (வாசிக்காமலே நட்சத்திரம் குத்துதல்) காரணமாக விலக்கப்பட்டன. பூங்கா தமிழ்மணத்தின் -சரியான போக்கோ என்று தெரியாவிடினும் - இன்னொரு முயற்சி; குறிப்பாக இவ்வாரம் சிறப்புச்செவ்வியும் தொடக்கப்பட்டிருக்கிறது. விவாதக்களம், வாசகர்களின் தேவைக்காக அமைக்கப்படுமென அறியத் தந்திருக்கின்றது. அதனால், தமிழ்மணம் காலத்துக்கேற்றவாறு வழங்கும் சேவைகளை விரிக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றதென நம்புவோம்.

ஒருவர் தான் எழுதும் இடுகையொன்று தமிழ்மணத்துக்குப் பொருந்தாதெனக் கண்டால், தானே அந்த இடுகையைத் தமிழ்மணத்துக்குப் பதிவு பட்டையூடாக அனுப்பாமல் விடலாம். அப்படியல்லாது விதிகளுக்குப் பொருந்துமெனத் தோன்றும் இடுகைகளை அவர் தமிழ்மணத்துக்கு அனுப்பிவைக்கலாம். அதனால், தமிழ்மணத்திற்கும் விரும்பாத இடுகைகள் வந்து சேரும் வில்லங்கம் இருக்காது; பதிவரின் பதிவுக்கு அவர் விதிகளுக்குப் பொருந்தியிட்ட இடுகைகளூடாகப் போகும் வாகசர்கள், அவருடைய முன்னைய - ஆனால், தமிழ்மணத்திலே தோன்றாத, விதிக்கு முரண்படுமோ எனத் தோன்றும்- இடுகைகளையும் சென்று காணலாம். தமிழ்மணமும் வேண்டாத பஞ்சாயத்திலே "விடுக்கவோ? கோக்கவோ?" தீர்ப்புச் சொல்லிக்கொண்டு நேரம் செலவு செய்யத் தேவையில்லை. அப்படியேதும் இடுகை இன்னமும் தனக்குப் பொருந்தாதெனத் தோன்றினால், தமிழ்மணம் விலக்கிவிடலாம். தமிழ்மணத்திலே இணைக்காத இடுகைகள் தமிழ்மணத்துக்குச் சட்டச்சிக்கல்களைக் கொண்டு வராதென்ற சூழலிலே, தமிழ்மணமும் எடுத்ததற்கெல்லாம் சட்டச்சிக்கலின் பின்னாலே மறைந்திருந்து பார்க்கும் மர்மநிலையிலே இருக்கத்தேவையில்லை. இப்படியாக, பெற்ற ஒவ்வொரு பட்டறிவுடனும் தமிழ்மணம் தொழில்நுட்பத்தினைச் சேர்த்து, தன்னைக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சிப்படுத்திக்கொள்ளுமென நம்புகிறேன். இப்படியாக, தமிழ்மணம் என்னவென்ன செய்யவேண்டுமென எல்லோரும்போல எனக்கும் விருப்பங்கள் சில உள்ளன. தமிழ்மணத்துக்கே தனிப்பட எழுதிவிட்டால் சரியாகும்.

ஆனால், இரவிசங்கர் குறிப்பிட்டதுபோல, நிச்சயமாக, தமிழ்மணம், தேன்கூடு ஆகிய திரட்டிகளின் வசதிகளின் போதாமையினால், அப்போதாமையை நிவர்த்தி செய்யும் புதுத்திரட்டிகள் வரும்; வரத்தொடங்கிவிட்டன. அவை வழங்கும் வசதிகள் முக்கியமாகப் படுகிறவர்கள் அவற்றினைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். பூங்கா போன்ற வலைஞ்சிகளிலே (e-zines) குறைகளைக் காணுகிறவர்களைப் போல வாசகர்கள் முன்னரும் திண்ணை போன்ற இதழ்கள் குறிப்பிட்ட ஒரு சிலரின் பக்கச்சார்பான படைப்புகளைத்தான் தருகின்றன என்று குற்றம் சாட்டியிருக்கின்றார்கள். இனியும் புதிதாக வரும் வலைஞ்சிகைகளிலும் இதுபோன்ற பழிகள் சுமத்தப்படவே செய்யும். மனித இயல்பின் காரணமாக, இந்நிலை எக்காலத்திலும் எவ்வலைஞ்சிகை, சஞ்சிகையென்றாலுங்கூடத் தவிர்க்கமுடியாதது. திண்ணை, துக்ளக் குறித்து உங்களுக்கு முன்னமே ஒரு தனிப்பட விரும்பாத காரணமேதும் விழுந்திருப்பின், திண்ணை, துக்ளக்கிலே ஒருவருக்கு விரும்பிய படைப்பு வருவதில்லையென்ற தோற்றமே அது பற்றி அவருக்கு ஏற்படும். அது சரியா தவறா எனறு காலம் பூராக வாதாடிக்கொண்டிருக்கலாம். அதனால், இப்படியான நிலை திரட்டிகளின் வளர்ச்சியைப் பாதிக்குமெனத் தோன்றவில்லை.

விக்கிபீடியா, திறவூற்று என்பன குறித்து 2004 இலே தமிழ்ப்பதிவுகள் சூடுபிடித்த நேரத்திலே வெங்கட்ரமணன் உட்பட இன்னும் பலர் முனைப்புடன் செயற்பட்டுத் தமிழிலே விரிக்க முனைந்தனர். அவர்கள் சிலவற்றினைச் சாதிக்கவும் செய்தனர். ஆனால், சராசரி பயனர் என்ற வகையிலும் பதிவர் என்ற வகையிலும் பெரும்பான்மையானோர் முடிவுநிலையிலே தங்கள் வசதிகளையே கண்டுகொண்டார்கள். ஆக, லீனெக்ஸ், பயர்பொக்ஸ் போன்றவை நெடுக்க வளர்ந்து பேரோடையிலே கலக்கும்போதுதான், அவர்கள் தமக்குச் சாதகமென இணைந்து கொள்வார்கள். தமிழ்மணத்தின் பயன்பாடும் அவர்களுக்கு வாசிப்பிகளிலிருந்து விலகிவர இவ்வகையிலேயே உதவியது. பாஸ்டன் பாலாஜி சொன்ன 2006 கூட்டுப்பதிவுகளின் ஆண்டு என்பது முழுமையல்ல. 2003 இலே வலைப்பூ என்ற தமிழ்மணத்துக்கு முன்னோடியான (அல்லது கூர்ப்படைய முன்னான தமிழ்மணம் என்றும் ஒரு வகையிலே சொன்னால்) ஆளியக்கு திரட்டியினைப் பார்த்தோமென்றால், துறைசார்கூட்டுப்பதிவுகள் எத்தனை ஆரம்பிக்கப்பட்டனவெனத் தெரியவரும். இங்கே பாலாஜி சொல்லி பொன்ஸ் வழிமொழிந்திருக்கும் கருத்து, கிட்டத்தட்ட செய்திகளிலே ஒரு விமானவிபத்தோ அல்லது ஒரு பாடசாலைச்சூட்டுச்சம்பவமோ நிகழ்ந்தபின்னால், ஓரிரு வாரங்களுக்கு அதேபோன்ற செய்திகளே தொடர்ந்து தொலைக்காட்சி, பத்திரிகைகளிலே ஓட்டமாக வரும் பாங்கிலேயே அமைந்திருப்பதாகத் தெரிகிறது. கூட்டுப்பதிவு என்பது ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தேவை; இல்லாவிட்டால், புளொக்கரிலே அதற்கான வசதி தொடக்கத்திலேயே இருந்திருக்குமென்று சொல்லமுடியாது. திறவூற்று, விக்கிபீடியா, விக்சனரி என்பன -வேண்டுமானால் பாருங்கள் - செயற்படுகிறவர்கள் தன்னார்வத்துக்குத் தீனி போட்டு, சமூகம் குறித்த தங்கள் பங்களிப்பிலே திருப்தியடைய உதவும் அதே நேரத்திலே, பெரும்பான்மையான பதிவர்கள் அவற்றின் வெற்றியிலே பயனர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆக, மிஞ்சி அவர்களது பங்களிப்புகள் இரண்டாகவிருக்கும்; ஒன்று உற்பத்தியிலே இருக்கும் பயனருக்கான குறைகள், நிறைகளைச் சுட்டிக்காட்டும் சோதிப்பார்களாகவிருப்பார்கள்; அடுத்ததாக, தமக்குப் பிடித்திருந்தால், மற்றோருக்கும் அறிமுகப்படுத்துகிறோமென்ற விளம்பரதாரர்களாக, சந்தைப்படுத்திகளாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

'வெட்டி, ஒத்தி, ஒட்டிப்போடுதலுக்கு இனி மதிப்பு இருக்காது; ஆனால், பதிவரின் நேர்மை, எழுத்துத்திறன் போன்றவற்றுக்கே மதிப்பிருக்கும்' என இரவிசங்கர் நினைக்கிறார். நல்ல விழைவுள்ள சிந்தை; ஆனால், நடைமுறை அப்படியாகத் தோன்றவில்லை. பின்னூட்டக்கயமை என்று சொல்லப்படும் எத்தனை பின்னூட்டங்கள் கிடைத்தன என்ற ஆர்வமும் பரபரப்பான பதிவிட்டுக் கவனிக்கப்படவேண்டுமென்ற விழைவும் ஐம்பது இடுகைகளை இட்டவுடனேயே ஆள்மறைக்கும் பின்னூட்ட வாழ்த்துமாலைகளுடன் "வெற்றிகரமான ஐம்பதாம் பதிவு" நோக்கும் திரைநடிகன் உளநிலையை ஒத்திக் கடத்திவந்திருக்கும் நிலையும் இருக்கும் இச்சூழலிலே இரவிசங்கரின் விழைவுச்சிந்தை விரைவிலே சாத்தியப்படுமெனத் தெரியவில்லை; ஆனால், நிச்சயமாக, அச்சுப்பத்திரிகைகள் வலைப்பதிவுகளின் முக்கியத்துவதை, தம்மீதான அவற்றின் சூட்டினை உணர்வதற்கு ஏற்பட்ட பாய்ச்சல் தமிழ்ப்பதிவுகளிலே ஒரு பொதுச்சிந்தையாக உருவாகும்போது, இரவிசங்கர் சுட்டும் பாய்ச்சல் ஏற்படும். ஆனால், "எனது ஐம்பதாம் பதிவு" என்ற களிப்பும் "நான் போகிறேன்; போகிறேன்; மனமின்றியும் மார்க்கமின்றிப் போகிறேன்; விடை கொடு தமிழ்மணமே; மணமே நீ கலங்காதே; சயனோரா!" என்ற கண்ணீர்மல்கலும் ஒருக்கிக் குழைத்த தமிழ்த்தொலைக்காட்சித்தொடர் உளப்பாங்கு வலைப்பதிவிலே இருக்கும்வரை இதன் சாத்தியம் உடனடிக்கில்லை என்றே சொல்வேன்.

தனித்தனி வாசிப்பிகள் வந்தால், வலைச்சண்டைகள் குறைந்துவிடுமென்பது நடைமுறையில்லை; வலைப்பதிவுகள் வருமுன்னால், யாஹூ குழுமங்கள், அதற்கு முன்னால், மின்னஞ்சற்குழுமங்கள், அதற்கு முன்னால், பயனர்வலைக்குழுமங்கள் என தேடி இணைந்துகொள்ளும் படிநிலைகள்தான் இருந்தன; ஆனால், அப்போதும் இதே - சொல்லப்போனால், இதைவிட மோசமான - சண்டைகளும் மண்டையுடைப்புகளுமிருந்தன. இந்நிலை திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டையொழிக்க முடியாதென்ற நிலைதான்; தனியார் வாசிப்பிகள், பின்னூட்ட வசதிகளைத் தந்தால், இந்தச்சண்டைக்கும் சந்தோஷத்துக்கும் திறவுகோலையும் சேர்த்துக்கொடுக்கிறதென்றே அர்த்தப்படும்.

பெரும்பாலும், இரவிசங்கர் சொல்லும் - வாசிப்பி, கூட்டுப்பதிவு, தனிப்பட்ட துறைப்பதிவு என்பன உள்ளடக்கிய - எதிர்கால வலைப்பதிவுலகு, ஒரு மீள்-முன்னைக்காலம் (Retro-Pre '04) நளினப்படுத்திய உலகாகவே தோன்றுகிறதேயொழிய, பயனர்நிலைப்பதிவர்களின் தொழில்நுட்பத்திறனும் தேடுமுனைப்பும் உயராத நிலையிலே தமிழ்மணம் இன்னும் நெடுங்காலத்துக்குத் தேவைதான் என்றே உறுதியாகச் சொல்லமுடியும். இங்கே தமிழ்மணம் என்பதை அதுபோன்ற திரட்டிகளின் தேவை என்ற வகையிலே குறிப்பிட்டிருக்கிறேன். (தனிப்பட்ட, இரவிசங்கரினது அவரது நண்பர்களினது கணிச்சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் குறித்த விக்சனெறியும் கடந்த பத்தாண்டுகளாக எத்தனை கணிச்சொல்லாக்கம் குறித்த முயற்சிகள் ஏற்பட்டிருந்தன என்பதைப் பார்க்கும்போது, சோர்வினை ஏற்படுத்தினாலும், அதிலே அவர்கள் காட்டும் ஆய்திறனும் ஒருமித்த முடிவுக்கு வரும் வழிமுறையும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது)

இச்சூழலிலே வலைத்திரட்டிகளின் தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்றே தோன்றுகிறது. இடுகையின் தலைப்பினை "தமிழ்மணம் தேவைப்படுமேதான்" என்றுதான் வைத்திருக்கிறேன்; "தமிழ்மணம் தேவைதான்" என்றல்ல.

0 Comments:

Post a Comment

<< Home