அலைஞனின் அலைகள்: புலம்

Sunday, September 04, 2005

உறங்காவிலிகளும் விழிமூடி வில்லர்வில்லிகளும் - 1

உறங்காவிலிகளும் விழிமூடி வில்லர்வில்லிகளும் - 1

சென்ற கிழமை மூன்று விடயங்கள் தொடர்பான பதிவுகள் எனது கவனத்துக்குரியனவாகின; மூன்றும் பெண்கள் மீதான ஆண்களின் சொல், செயல் வன்முறை குறித்தவை:

1. ரூமியின் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்த விமர்சனம்
2. தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்து
3. யாழ் பல்கலைக்கழக அரசியலறிவியல் விரிவுரையாளர் கே. ரி. கணேசலிங்கம் மீது எழுந்திருக்கும் சிறுமியைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டு

உரைக்கப்பட்டவை உண்மைகளாக பட்சத்திலே, இவை பெண்கள்மீதான ஆணாதிக்க எழுத்து, சொல், செயல் வன்முறையென்பது குறித்து கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. முதலிரண்டு பற்றியும் தோன்றியதை ஏற்கனவே குறித்துவிட்டதனால், மூன்றாவது விடயம் பற்றிமட்டும் இங்கே குறிக்க விரும்புகிறேன்.

இது குறித்து என் கருத்து மற்றவர்களுக்கு அவசியமா என்றால், இல்லை என்பதை ஒத்துக்கொள்வேன்; ஆனால், இந்த இடத்திலே எனது கருத்தினைப் பதிவு செய்துகொள்வது என் நிலைப்பாடு குறித்த ஒரு தெளிவினைக் குறித்துக்கொள்ள உதவுமென்ற சொந்த நலனை முன்னிட்டது; அவ்வகையிலே, எனக்கு இது முக்கியமானது.

முதலிலே விடுதலைப்புலிகள் குறித்து கொள்கையளவிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த மார்க்ஸியம் சார்ந்த புளொட், ஈரோஸ் ஆகியன சிதிலமடைந்து திரிபுவாதநிலைப்பாடு கொண்டபின்னால், என் நிலைப்பாடு குறித்துச் சொல்ல வேண்டியதாகவுள்ளது; இயக்க ரீதியிலே ஒரு சின்னத்துரும்பைக்கூடத் தேசியவிடுதலைக்காகவும் மார்க்ஸியமுன்னெடுப்புக்காகவும் செய்யாதபோதுங்கூட, தேசியமும் மார்க்ஸியமும் பிணைந்த ஈழமே விடுதலை என்று முழுக்க நம்பிக்கை கொண்டிருந்த சாய்மனைக்கதிரைக்காரர்களிலே என்னையும் கணக்கெடுத்திருக்கலாம். ஆனால், தம்முள் இந்தியமேலாதிக்கத்தின் ஊடுருவலின்பின்னால், புழுக்கொண்டு மாய்ந்தும் தேய்ந்தும்போன மார்க்ஸியஈழதேசிய இயக்கங்களின்பின்னால், தேசியமென்றவளவிலே அரசியற்கொள்கையடிப்படையிலே அடுத்த தராசுத்தட்டிலிருப்பினுங்கூட, கட்சி & இயக்கம் சாராது ஒவ்வொரு தனிப்பட்ட செயற்பாட்டினதும் தன்மையைப் பொறுத்து, விடுதலைப்புலிகளின் தேவையை ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு நடைமுறைக்கொவ்வாத ராயாகரனின் கட்டித்த மரபுவாத கொள்கையவினாலான மார்க்ஸியத்தின் சமகாலத்தோல்வியும் இந்திய மார்க்ஸியவாதிகளின் ஈழத்தேசியத்துக்கெதிரான திட்டமிட்ட நிலைப்பாடும் பலஸ்தீன தேசியத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவுமென்ற இரட்டைநிலைப்பாடுகளும் மேலும் ஊக்கிகளாகத் தொழிற்படுகின்றன. ஆனால், விடுதலைப்புலிகள்போல தமிழீழம் என்ற பதத்தினை அடிப்படையிலே இன்னமும் நான் ஒத்துக்கொள்வதில்லை; அதைவிட ஈரோஸ் முன்வைத்த தமிழர்கள் அல்லாத மாற்றுமொழியினரும் இனத்தவர்களும் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடிய ஈழம் என்ற பதத்தினையே இன்னும் பிடித்துக்கொண்டிருக்கின்றேன்.

மொழி அடிப்படையிலான தேசியமென்ற உணர்வினை இழிவுணர்வென்ற அடிப்படையிலே குற்றவுணர்வினை ஏற்படுத்த முயலும் நடைமுறையிலில்லாத வர்க்கம்சார் மரபுவாதபொதுவுடமைவாதிகளின் கருத்துத்திணிப்பும் அடியிலே மறைந்து மெல்லிய இந்துமேலாதிக்கம் உள்ளோட, மொழியடிப்படையிலான உரிமைகளைப் பின்தள்ள வற்புறுத்தும் இந்தியமேலாதிக்கவாதிகளின் (இவர்களிலே தமிழ்நாட்டினைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த இற்றை மார்க்ஸியர்களும் முன்னை_மார்க்ஸியர்களும் அடக்கம்) கருத்துத்திணிப்பும் எனது ஈழதேசியம் குறித்த உணர்விலே குற்ற அழுத்தத்தினைத் திணிக்கமுயன்றபோதுங்கூட, சமகாலத்துக்கான மார்க்ஸியத்தின் ஆழமாதலும் விரிதலுங் குறித்த எனது புரிதல், அத்தகு குற்றவுணர்வு அநாவசியமென்பதை உணர்த்துவதால், அரசியலளவிலே மிகவும் தெளிவாக இருக்கின்றேன்; "ஆயுதப்போராட்டம் என்பது வன்முறையின் அடையாளம்" என்பதாகவும் ஜனநாயகவழிப்பாதை மட்டுமே நெறியானது" என்பாதாகவும் கருத்து முன்வைக்கும் பல "மனிதவுரிமைச்சாத்வீகப்போராளிகளினது பேச்சாளி"களின் உள்நோக்கங்கள், சொந்த நலன்கள் குறித்த வேட்கைகள் மிகவும் துல்லியமாக அவர்களின் வேறு விடயங்கள் தொடர்பான கருத்துவெளிப்பாடுகளிலே தெரிந்துவிடுவதாலும், ஆயுதப்போராட்டமென்பது விரும்பாதபோது ஈழத்தேசியத்தின்மீது காலத்தினாலே திணிக்கப்பட்டதென்பதை நிகழ்வுகளின் சாட்சியாக இந்தப்பேச்சாளிகளின்மேலாக அறிந்திருக்கின்றேன் என்பதாலும் ஆயுதப்போராட்டத்தின் மீது இன்றைய நிலையிலும் - சொந்தமாக ஒரு சின்ன சவர அலகை எடுத்துக் கடதாசி வெட்டவும் மிக அவதானம் கொள்கின்ற ஆளான நிலையும் - நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.

விடுதலைப்புலிகள் குறித்து எனக்கு விமர்சனமிருக்கின்றது; மற்றைய இயக்கங்களை அவர்கள் ஒடுக்குவதற்கு, பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே மற்றைய இயக்கங்களின் மேல்மட்டத்தலைமைகள் தாம் சொல்லிக்கொண்ட ஈழதேசியநோக்குக்கு எதிரான நடவடிக்கைகளிலே விரும்பியோ திணிக்கப்பட்டோ இயங்கியதும் காரணமாகவிருந்தபோதுங்கூட, அந்த இயக்கங்களைச் சேர்ந்த கீழ்மட்டப்போராளிகளை விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒடுக்கிய விதத்திலும் அழித்த விதத்திலும் எவ்விதமான ஒப்புதலுமில்லை. தமக்கெதிரான எதிர்க்கருத்துகள் குறித்து, விடுதலைப்புலிகளோ அவர்களின் ஆதரவூடகங்களோ கண்மூடிய ஆதரவாளர்களோ பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே வாய்திறக்கவிடுவதில்லையென்பது மறுக்கமுடியாத உண்மை - கிட்டத்தட்ட, த இந்துவினதும் அதன் ஆதரவு ஊடகவியலாளர்கள், விமர்சனமில்லாத வாசகர்களின் ஈழ ஆதரவு குறித்த பேச்சுக்கான சுதந்திரமளவுக்கே விடுதலைப்புலிகளும் வாயைத் திறக்கவிடுகின்றனர் என்பது என் கருத்து. முஸ்லீங்களை அவர்களின் பாரம்பரியப்பிரதேசங்களிலே இருந்து அகற்றுவதிலே (குறிப்பாக, வடக்கிலே) விடுதலைப்புலிகளின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் - இன்றைய காலகட்டத்திலே தமது அந்தக்குற்றத்தினை மிகவும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டபோதிலுங்கூட. (கிழக்கிலே தமிழர்-முஸ்லீங்கள் குறித்த முரண்பாடு தனியே ஈழதேசியத்தின் அடிப்படையிலானதல்ல; தவிர, அதிலே கிழக்குமுஸ்லீங்களும் முழுக்கமுழுக்க பாதிப்புக்குள்ளானவர்கள் என்ற வகையிலேமட்டும் பார்க்கப்படக்கூடியவர்களல்ல; அடுத்தடுத்திருக்கும் தமிழ்-முஸ்லீம் ஊர்களுக்கிடையேயான தனிப்பட்ட உள்ளூர் அரசியற்குரோதங்களும் அரசுசார் முஸ்லீம் ஊர்காவற்படையின் தமிழரெதிர்ப்பு நடவடிக்கைகளும் கவனத்திலெடுக்கப்படவேண்டியவை). சிறுபிள்ளைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் பயன்படுத்துவது குறித்துக் கொள்கையடிப்படையிலே எனக்கு மிகவும் எதிரான கருத்துண்டு - நடைமுறையிலே இயக்கத்தின் தேவையும் நிலைப்பும் அப்படியான சிறுவர்களிலே தங்கியிருக்கின்றபோதிலுங்கூட. விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளிகள் பற்றி விசனம் தெரிவிப்பவர்களுக்கு நான் தற்கொலைப்போராளிகள் குறித்த சில நூல்களின் கீழ்வரும் அறிமுகக்குறிப்பினை வாசிக்கும்படி பரிந்துரைக்கின்றேன். Why They Do It. ஆனால், எந்த வகையிலும் அரசின் பொருளாதாரநலன்களையும் அரசுபோரிடுசாதனங்களையும் குறிகளாக்குவதை ஏற்றுக்கொள்ளும்போதிலே, இவை தவிர்த்த நிராயுதபாணிகளை வேண்டுமென்றோ பக்கவிளைவாகவோ நாசம் செய்வதை முற்றிலும் எதிர்க்கின்றேன்.

இலங்கை-ஈழம்-இந்தியா குறித்த அரசியல் குறித்து நூல்களைப் பரிந்துரைக்கக்கேட்கும் நண்பர்களுக்கு நான் விடுதலைப்புலிகளின் சார்பான புத்தகங்களையோ கட்டுரைகளையோ ஊடகங்களையோ மட்டும் பரிந்துரைப்பதில்லை; எனக்குத் தெரிந்த, நான் வாசித்த, விடுதலைப்புலிகளுக்கு எதிரான/ஆதரவான ஈழத்தமிழர்களின், சிங்கள ஊடகங்களின், இந்தியர்களின் நூல்களையெல்லாவற்றினையுமே பரிந்துரைக்கின்றேன்; வாசித்தபின்னால், அவர்களையே அரசியல் குறித்துத் தீர்மானிக்கும்படி சொல்கிறேன். ஈழத்தவரின் பாரம்பரியப்பிரதேசங்களென்பதும், மொழி, பண்பாடு, கலை வெளிப்பாடுகளென்பதும், ஈழத்தவரின் சுயநிர்ணயவுரிமையின் முழுமையான அடைதலிலேதான் தங்கியுள்ளன என்பதிலே எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அந்த அடைதல் இலங்கை என்ற கூட்டமைவின்கீழான இரு தேசங்களாகவோ அல்லது தனியான ஈழமென்ற தேசமாகவோ இருப்பது குறித்து எனக்குப் பெரிய அக்கறையில்லை; ஆனால், எந்தத்தீர்வு முழுமையான உரிமையைத் தருகின்றதோ அதுவே முக்கியமானது; தொடர்ந்து வரும் சிங்கள அரசுகளோ இந்திய அரசுகளோ ஈழத்தவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் இவையிவையெனத் தீர்மானிப்பதினை முழுக்க வெறுக்கின்றேன்; அத்தகு அரசுகளின் விசுவாசிகளும் தரகர்களும் எழுத்தூடகத்திலும் ஒலி ஒளி இணைய ஊடகங்களிலும் அவற்றினை எந்தப்பட்டுப்போர்வையின்கீழும் நெளியும் புழுக்களாக விற்பனை செய்வதனை இயன்றவரை கிழித்துக்காட்டி உள்நோக்குகளையும் திரிபுகளையும் தரகர்களையும் வெளிப்படுத்துவது என் கடமையென்று உணர்கிறேன். இதற்கு நான் ஈழத்தவனாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை; தர்க்க அடிப்படையிலும் பகுத்தறியும் தன்மையிலும் ஒரு மனிதனாகவே செய்யலாம்; ஆனால், ஓர் ஈழத்தவனாக இருப்பது அவ்வாறு செயற்பட ஓர் உணர்வுந்தலைத் தருகின்றது; அந்த உணர்வுந்தலைச் சிறப்புக்கூறாகப் பெற்றிருப்பது, அவ்வாறு இந்தமுகமூடிகளை உரித்துக்காட்டும் கடமையை மேலதிகமாக என்னைப் போன்றவர்களிலே சுமத்தியிருக்கின்றதென்று நினைக்கிறேன்.

இந்த வகையிலேயே பொதுவான கருத்தமைவிலே, ஈழம் குறித்த எனது கருத்துநிலைப்பாடும் செயல்நிலைப்பாடுமுள்ளது.

இக்குறிப்போடு, கணேசலிங்கம் குறித்து, Rape by Kanesalingam என்று தலைப்பிட்டு வெளிவந்த அதே கட்டுரை, இலக்கிலும் ஜனநாயகத்திலும் Rape by LTTE Kanesalingam என்ற தலைப்போடு வந்தது குறித்தும், சார்ள்ஸ் விஜயவர்த்தனா குறித்து, ஊடறுவிலே வெளிவந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரை, "இதுவா தமிழ்க்கலாச்சாரம்?" விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு என்பதே முழுக்க முழுக்க நிலைப்பாடாகக் கொண்ட இலக்கிலே "இதுவா தமிழ்க் கலாசாரம்?" எனவும் த இந்து பத்திரிகையின் ஈழம் குறித்த நிலைப்பாட்டினை பெரும்பாலும் நியாயப்படுத்தி வெளிக்காட்டிய, இந்து ஆசிரியரின் அண்ணன் மகளினைத் திருமணம் செய்துகொண்டவருக்குரிய சன் டிவியிலே தொழிலாற்றும் மாலன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட திசைகளிலேயும், கருணானந்தம் பரமுவேலன் பதிவின் பின்னூட்டத்திலே வெளிவந்தது குறித்தும் இன்னோர் உள்ளிடுகையிலே சுட்டிப் பேச விழைகிறேன்

'06 செப்ரெ.,04 ஞாயிறு. 09:38 கிநிநே.

0 Comments:

Post a Comment

<< Home