அலைஞனின் அலைகள்: புலம்

Wednesday, August 31, 2005

தண்டநாயகர்களும் தலைதொங்கக் கம்பிகளும்

தங்கர்பச்சான் தலை உருள்கிறது; திரைப்பட உலகினை ஆவென்று பார்க்குமொரு சமூகத்தின் முன்னே அதன் ஒளிவெள்ளத்திலே உலாவுகின்றவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது விவாதப்பொருளாகிவிடுகின்றது; ஹொலிவுட்டின் (உ)ரொம் க்ரூஸ் அண்மையிலே சயின்றோலஜி குறித்து என்பிசி இன் மற் (உ)லோவரின் காலைநிகழ்ச்சியிலே தான் நடித்த War of Worlds இனை விளம்பரப்படுத்த வந்து War of Words நிகழ்த்தி, வேண்டாமல் ப்ரூக் ஸ்ல்ட்ஸுக்கும் தாய்மையின் நெறி எப்படியாக இருக்கவேண்டுமென்பது குறித்து அறிவுரைகூறி ஒரு சலசலப்பினையும் ஊடகங்களுக்கு மெல்ல அவலையும் கொடுத்திருந்தார். ('Blue Lagoon' Brook Shields இற்கு என்றபடியாலே விட்டுவிட்டேன்; 'Paradise' Phobe Cates இற்குச் சொல்லியிருந்தால், அண்ணருக்கு பொஸ்ரன் பக்கம் அடுத்த முறை வரும்போது நடந்திருக்கக்கூடியதே வேறு). போலிவுட்டிலே, ஸக்தி கபூர், ஸல்மான் கான்-மான் என்று தொடர்ந்து ஏதாவது அவல் பொரிகின்றது. கோலிவுட் மட்டும் குறைந்ததா என்ன? நிறைய நடக்கின்றது.

ஆனால், அடிக்கடி திறக்கத் தெரியாமல் வாயைத் திறக்கின்றவர்களுக்குமட்டும் சிக்கல் பெரிதாகிவிடுகின்றது; அதுவும் குறிப்பாக, பெரும்பான்மையிலிருந்து விலகி நின்றுகொண்டு, கண்ணாடி வீட்டுக்குள்ளே கல்லெறிகின்றவர்களுக்கு மிகவும் சிக்கல். அதுதான் தங்கர்பச்சானுக்கு நிகழ்ந்திருக்கின்றது. தங்கர்பச்சான் குறித்து தங்கமணி மிகவும் சுருக்கமாகவும் அருமையாகவும் எம். கே. குமாரின் பதிவிலே சொல்லியிருக்கின்றார்; வார்த்தைக்கு வார்த்தை ஏற்றுக்கொள்ளமுடிகின்றது ('இவைகள்' என்று எழுதுவதைத் தவிர ;-)).

தயாரிப்பாளர் தங்கர்பச்சானின் பக்கம் கூலி- வேலை நேரம் தொடர்பாக நியாயமிருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். அது குறித்து, தொடர்ச்சியாக நான் வாசித்திருக்கவில்லை. அதனாலே ஏதும் சொல்லமுடியாது; ஆனால், அவர் பக்கம் நியாயமிருக்கிறதோ இல்லையோ, தங்கர்பச்சான் "நடிகைகள் விபசாரிகள்" என்ற அர்த்தம் தொனிக்கும் விதத்திலே சொன்னால், அவரின் அக்கருத்தினை எந்தக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தமுடியாது; நியாயப்படுத்தத்தேவையில்லை. மன்னிப்பு பிரச்சனையை ஆற்றுமோ, அல்லது அவர் குறித்த மற்றவர்களின் பார்வையை மாற்றுமோ தெரியாது; ஆனால், அதற்கு அவர் மன்னிப்புக் கேட்பதுதான் நியாயமே - அஃது அவரினை ஒரு பகிடிக்குரிய பண்டமாக, வித்தையாட்டப்படும் குரங்கின்நிலையிலே மற்றவர்கள் பார்க்க வைத்தபோதுங்கூட.

அவமதிப்புக்குரிய பாத்திரப்படைப்புகளையும் காட்சிகளையும் நகைச்சுவை, பண்பாடு என்ற விதத்திலே உள்ளிடும் படங்களிலும் நடிகர்களும் நடிகைகளும் வாய்ப்புக்கிடைத்தாலே சரியென்ற விதத்திலே நடிக்கவும் செய்கின்றார்கள். பாடலாசிரியர்களும் கதாசிரியர்களும் 'பெண் என்றால் இப்படியாகத்தான்' என்று வரையறுக்க, அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கும் கேடான நிலையையும் காணலாம். ஆனால், இவை மறைமுகமான ஆமோதிப்பென்று விட்டுவிடலாம். தயாரிப்பாளர்.எதிர்.நடிகர் என்ற நோக்கு என் கரிசனைக்கு அப்பாற்பட்டதாலும் அந்தக்கோணத்திலே நிகழ்ந்தது முழுக்க எனக்குத் தெரியாததாலும் ஏதும் சொல்லமுடியாது.

ஆனால், இந்த விடயம் தொடர்பாக வேறு சில பக்கங்கள் பார்க்கப்படவேண்டியவை; குறிப்பிடத்தக்க இரண்டு.

  1. அவதூறு பேசுதல் என்பது, அரசியலும் திரையுலகும் கலந்த கோடம்பாக்கத்திலே இன்றைக்கு நேற்றைக்கு நிகழ்ந்ததல்ல; திரைப்படக்காரர்களைக் கூத்தாடிகளென்று முதலமைச்சர்களாகவிருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்லியிருந்தார்கள்; அஃது இழிவுபடுத்தும் நோக்குத்தான். எஸ். எஸ். சந்திரன் போன்ற அரசியல்நடிகர்கள் (முன்னாள்) பெண்நடிகைகள் பற்றி, முன்னாள் சொன்னதெல்லாம் இழிவு நோக்குத்தான். கூட நடிகைகளை, சக ஜரிதாபீடா நடிகர்கள் பறக்கும் விமானத்திலே, அவமானப்படுத்துவது தொடக்கம், தொட்டு அழுத்துவது தொடக்கம், வெளிப்புறப்படப்பிடிப்புகளிலே அத்துமீறி நடிகைகள் அறைக்குள்ளே நுழைவதுவரைக்கும் கிசுகிசுக்கள் வராத சஞ்சிகைகள் இல்லை; அப்படியான "நடிகைகளின் கதைகளை" விற்றுப்பிழைக்காத கௌரவமான பத்திரிகாசிரியர்களுமில்லை. அந்த நேரங்களிலே எதுவுமே நடிகர்கள் சகநடிகைகளுக்காகக் குரல் கொடுத்துவரவில்லை. (ஹொலிவுட்டிலே இவ்வாறு நடிகைகளுக்கு நிகழ்பவை குறித்து அண்மையிலே ஒரு குறை_சுயசரிதை வந்திருக்கின்றது). நடிகைகள் நடிகர்களை அவமதிப்பதும் (ரஜனிகாந்த்~மனோரமா) நடந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கர்பச்சானை நடிகர்சங்கக்கூட்டத்திற்கு வரச்செய்து, இறுதியாக, "இப்படியாக நடந்தால், தொழில்புரிய மறுப்புத்தான்" என்று சொன்ன விஜயகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே, தொலைக்காட்சி நடிகையான புவனேஸ்வரி தொடர்பாகச் சொன்னது, "தொலைக்காட்சி நடிகைகள் மட்டுமே விபசாரத்தில் ஈடுபடுகின்றார்கள்; சினிமா நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதில்லை." குஷ்பு, ராதிகா, தேவயானி, மனோரமா, சரிதா, காந்திமதி தொடக்கம் எத்தனையோ திரைப்பட நடிகைகள் தொலைக்காட்சியிலே பெரும்புகழடைந்திருக்கும் இந்நேரத்திலே, இவர் சொன்னது குறித்து எந்த நடிகரும் நடிகையும் எதையும் கேட்டதாகத் தெரியவில்லை; கண்டித்ததாகவும் தெரியவில்லை.

    2. தங்கர்பச்சான் குறிப்பாகத் தாக்கப்படுவதற்கான காரணம், 'நடிகர்-எதிர்-தயாரிப்பாளர்' என்ற கூட்டமைப்புகளுக்கிடையேயான பலப்போட்டியிலே, இவர், முழுமையாக பொதுத்தயாரிப்பாளர்பண்புகள் கொண்டிராததால், தயாரிப்பாளர்கள் முழுமையாக ஆதரிக்கமுடியாத ஆளென்பதும் ஆனால், அதே நேரத்திலே தயாரிப்பாளர் என்ற குறியீடாக இவர் பயன்படக்கூடுமென்பதும் இருக்கலாம். மேலும், குறிப்பாக அவருடைய மழைக்காலத்தவளை வாயின் வினை குறித்தும் காணவேண்டும்; இவர் இரஜனி குறித்துச் சொன்ன கருத்துகளின் பின்னால், சில ஆண்டுகளின் முன்னால், ஒரு தமிழ்_யாஹூ குழுமத்திலே இவர் ரஜனியைத் தாக்கிப்பேசினாரென்ற காரணத்தினாலே மட்டும் "(இ)ரஜனி என் வீட்டிலே ஒண்ணுக்கடித்தார்" என்று அணுக்கத்தார் பதிவுகள் போடக்கூடியவர்களாலே தாக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன்; இவரும் சேரனும் ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளுக்கும் பொலீஸுக்கும் கொடுத்த பெண்ணினாலே இழுத்தடிக்கப்பட்டார்கள்; பின்னால்,அந்தப்பெண் சொன்னவை பொய்யெனத் தகவல்கள் வந்தன. அந்த விசாரணையும் அதன் முடிவுகளும் என்ன ஆயின என்பது குறித்தோ, அல்லது சுடச்சுட மெல்லும் வாய்க்குப் பொய்யவல் கொடுத்ததுகுறித்தோ எந்த அச்சூடகமும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால், இப்படியான நிலை, 'சேரன், தங்கர்பச்சான் போன்றவர்கள் காட்டமாகக் குறிவைத்து திரைப்படவுலகத்திலும் பத்திரிகையுலகத்திலும் இணையத்திலும் சிலரினாலே தாக்கப்படுவதற்கு தங்கர்ப்பச்சானின் ஓவெனத் திறந்த வாய்மட்டுமே முழுக்கக் காரணமெனச் சொல்லிவிடமுடியாது' என்ற கருத்துந்தலையே தருகின்றது; அவருடைய அரசியல்நிலைப்பாடும் அதிலே பெரும்பங்கு நடத்துகின்றதென்றே சொல்லலாம். தங்கமணி சுட்டிக்காட்டியதுபோல, தங்கர்பச்சானின் இக்கருத்தினை எதிர்த்துப்பேசுகின்ற திரைப்படம்சாராதவர்களிலே சிலர், சங்கராச்சாரியாரின்மீது அனுராதா ரமணன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியோ அது ஏன் ஒரு ஜனரஞ்சக சஞ்சிகையிலே வெளிவர அதன் அன்றைய ஆசிரியர்கள் விடவில்லையென்பது குறித்தோ ஒரு கருத்தும் சொல்லவில்லையென்பதைக் காணவேண்டும்.

தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்துவெளிப்பாடு எதுவிதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது; அதேபோல, நடிகைகள் குறித்து இன்னும் "எம்பிபிஎஸ் படித்து பெரிய வக்கீலாகியிருப்பேன்" 'ஜோக்' போடுகின்றவர்கள் குறித்தும் நடிகைகள் குறித்து சொல்வன்முறை, உடல்வன்முறை செய்யும் சகநடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்தும் தங்கர்பச்சானை அவரின் திரைப்படம்சாரா அரசியல்குறித்து இலக்குவைத்துத் தாக்குகின்றவர்கள் குறித்தும் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும்.

'05 ஓகஸ்ற் 31, புத. 16:54 கிநிநே.

0 Comments:

Post a Comment

<< Home