அலைஞனின் அலைகள்: புலம்

Tuesday, December 04, 2007

என் எல்லைக்குளிருந்து...."என்ன எண்ணிக்கொண்டு சொன்னீர்கள்?"

கடந்த ஒரு கிழமைக்குள்ளே இலங்கை தொடர்பாக வாசித்தவற்றிலே, சிலரின் சில கருத்துகள் தமது கருத்துகளை நியாயப்படுத்த, வாசிக்கின்றவரின் பகுத்தறிவினைப் பகிடி செய்ததாகத் தோன்றின.

தொடர்ந்து உற்சாகமாகச் சண்டைபோட்டுக்கொண்டிருக்க உளநிலை இல்லாததாலே, இப்பதிவிலே நக்கலையும் குத்தலையும் தவிர்த்துவிடலாம். குறிப்பான சில விடயங்களை மட்டும் பேச எடுத்துக் கொண்டு, கருத்தாளர்களின் மற்றக்கருத்துகளை, பதிவுநீட்சி, நேரப்பற்றாக்குறை, முக்கியமின்மை, ஒத்துப்போதல் காரணங்களாக விட்டுவிடலாம்.

*****
தவிகூட்டணியின் தனித்தவில் ஆனந்தசங்கரி,
"வன்னியிலே கொல்லப்பட்ட பாடசாலை மாணவிகளை ஸ்ரீலங்கா அரசு கொன்றிருக்க நியாயமேயில்லை; இது ஸ்ரீலங்கா அரசின்மீது பழியைப் போட விடுதலைப்புலிகளே கிளப்பிவிட்ட பொய்ப்பிரசாரமேதான்"
என்று பகிரங்கக்கடிதம் விட்டது இதிலே ஒன்று. அவரின் கருத்து என்னவென்றால், ஸ்ரீலங்கா இராணுவம் அவ்வளவு தூரம் ஊடுருவிப் போய்ச் செய்திருக்க முடியாதாம். ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஊடுருவித்தாக்கும் அணி இதே வன்னிக்குள்ளே ஒட்டிசுட்டான்வரை சென்று விடுதலைப்புலிகளின் கேர்ணல். சங்கரை 2001 இலே கொன்றதும் அப்படியாகச் செயற்படும் தேவைகளுக்கான திட்டமிட கொழும்புவட்டாரத்திலே அமர்த்தியிருந்த மறைவிடம் பற்றியும் ஸ்ரீலங்கா செய்திகளிலே வெளிவந்தன. அந்நேரம் ஸ்ரீலங்கா அதிபராகவும் முப்படையின் ஆணையிடுநாயகியாகவுமிருந்த சந்திரிகா குமாரணதுங்கவே தனக்குத் தெரியாமல் இப்படியான மறைவிடமிருந்ததையிட்டு ஆத்திரம் கொண்டதும் செய்திகளிலே வந்திருந்தது. அண்மையிலே கொல்லப்பட்ட மன்னார் கத்தோலிக்கத்துறவியின் கொலைக்கும் இத்தகைய ஊடுருவித்தாக்குதலே காரணமாக வைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஆனந்தசங்கரி பொய்யான செய்தி என்று மறுதலிக்கலாம்; ஆனல், தங்களுடைய மாவீரர் வாரத்திலே வன்னியின் இதயப்பகுதியிலே பாடசாலைமாணவிகளைக் கொல்லும் தேவை -எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்றுதான் கொண்டாலுங்கூட - எதற்கு விடுதலைப்புலிகளுக்கு இருக்கமுடியும்? இதனை ஆனந்தசங்கரி யோசித்துப் பார்த்திருக்கவேண்டாமா? எத்துணை அவருக்கு விடுதலைப்புலிகளுடன் வெறுப்பிருந்தாலுங்கூட, ஸ்ரீலங்கா அரசை நியாயப்படுத்த தமிழ்மக்களிலே ஸ்ரீலங்கா அரசு இரக்கம் நிறைந்திருக்கின்றது என்பதாக நிறுவ இப்படியாகவா ஓட்டைப்பாத்திரத்திலே தண்ணீர் வார்ப்பது?

*******
அடுத்ததாக, பிரான்சிலே வாழும் எம். ஆர். ஸ்டாலின் என்ற ஞானம் என்ற சின்னமாஸ்ரர் என்ற இராஜேந்திரன் தேசம் இணையத்தளத்திலே கொடுத்த செவ்வி. ஈழத்தின் கிழக்குமாகாணத்தின் நலனைப் பேணுகின்றவராக, வடக்கின் ஆக்கிரமிப்பினை எதிர்ப்பவராகவும் கருணா அம்மானின் தீவிர நியாயப்படுத்துனராகவும் தனது செவ்வியிலே பேசியிருக்கின்றார். பிரான்சிலே வந்திறங்கிய கருணா அம்மானை ஸ்ராலின்தான் ஸ்ரீலங்கா தூதராலய அதிகாரியோடு வரவேற்றார் என்று டிபிஎஸ் ஜெயராஜ் எழுதியதிலிருந்து அண்மைய பாரிசின் தலித் மகாநாட்டின் அமைப்பாளரிலே ஒருவரான அவர்மீது அங்கேயே கிழக்கின் கழுதாவளையிலே இருக்கும் சாதியத்துவத்தினைப் பற்றி கிழக்கின் யோகன் கண்ணமுத்து (அசோக்) பேசி முரண்பட்டதுவரை இணையத்திலே தேட அகப்படுகின்றன. இணையத்திலே வாசித்த இவற்றிலே எவை உண்மை, எவை பொய் எனக்குத் தெரியாது; எவரும் எதையும் வரலாறு என்று எழுதிவிட்டுப்போகலாம் - இங்கே திருகோணமலை பற்றி எம். ஆர். ஸ்டாலின் சொல்லியிருப்பதுபோலவே. அதனால் உறுதிப்படுத்தப்படாத இக்கருத்துகளையும் இங்கே பேச்சுக்கான விடயங்கள் அவையல்ல என்பதாலும் அவற்றினையெல்லாம் இப்பதிவிலே விட்டுவிடுவோம். ஆனால், தான் கிழக்கின்காவலர் என்பதை நிரூபிக்கும் முயற்சியிலே, "அவரது" திருகோணமலையினைப் பற்றி ஓர் அட்டகாசமான தகவலைத் தருகின்றார். அதைப் பார்ப்போம்

"ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது"


இதை, புரிந்துகொண்டே சொன்ன புளுகுமூட்டை என்பதா புரியாமலே அவிழ்த்துவிட்ட கோழிக்குஞ்சு என்பதா என்று எனக்குத் தெரியவில்லை. மூவினங்களும் சேர்ந்துவாழும் அந்த அற்புதமான அவரது திருகோணமலை எங்கேயிருந்தது என்று எனக்குத் தெரியாது; ஆனால், நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த திருகோணமலையிலே செல்வநாயகத்தின் சாம்பல் கொண்டுவரப்பட்டபோது எனக்கு நடப்பது ஓரளவுக்குப் புரியும் வயதுதான். அதற்கு முன்னரும் என்ன என்ன திருகோணமலையிலே இனத்தினை முன்வைத்து நடந்தன என்பதைக்கூட இணையத்திலே தேடிப் பார்க்கின்றவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். கிழக்கிலே சேருவில, கல்லோயா குடியேற்றத்திட்டங்கள் குறித்தும் திட்டமிட்டவகையிலே இனவிகிதாசாரம் அன்றிலிருந்து இன்றுவரைக்குங்கூட மாற்றப்படும் நிலையினைப் பற்றிய ஆதாரத்துடனான கட்டுரைகள் இணையத்திலே நிறையவுண்டு. இவை எல்லாம் நிகழ்ந்திராவிட்டால், தமிழ்த்தேசியம் எதற்காக எழுந்திருக்கப்போகின்றதென்று, மிதக்கும்வெளி சுகுணா திவாகருக்குத் தெரிந்திராவிட்டாலுங்கூட, எம். ஆர். ஸ்டாலினுக்குத் தெரிந்திராமலிருக்க வாய்ப்பில்லை. வாகரை, மூதூர், சம்பூர் என்று தமிழ்மக்கள் துரத்தப்பட்டபின்னால், இன்றைக்கும் அப்படியான குடியேற்றம் கிழக்கிலே இவ்வாண்டிலே, இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும்போது நடந்துகொண்டிருக்கின்றது. ஸ்ராலின் என்பவருக்கு இது தெரிந்திருக்காதா? இப்படியான குடியேற்றமேதான் எங்கள் திருகோணமலையிலேயும் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னாலே நிகழ்ந்துகொண்டிருந்தது. திருகோணமலையின் இந்துக்கல்லூரிவிடுதிக்கான காணியிலேதான் அந்நேரத்திலேயே கோகர்ண விகாரைக்கு வருகின்றவர்கள் தங்குவதற்கான சங்கபோதி பௌத்தயாத்திரீகர்மடம் அமைக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் பன்குளம் மொரவெவ என்றும் குமரன்கடவை கோமரன்கடவல என்றும் மாற்றப்பட்டதும் மகாவலித்திட்டத்துடனான குடியேற்றங்கள் அல்லைக்கந்தளாயிலே நிகழ்ந்ததும் செல்வநாயகத்தின் அஸ்தி வந்து அனுராதபுரச்சந்தி என்றழைக்கப்படும் கலைமகள் வித்தியாலயம் அல்லது கஞ்சிமடம் பள்ளிக்கூடம் என்ற இடத்திற்குக் கிட்டே கொண்டு வந்தவர்கள் சிறிமாபுர/மகிந்தபுர என்றழைக்கப்படும் குடியேற்றத்திட்டப்பகுதியிலே காரணமேதுமின்றிச் சிங்களக்காடையர்களாலே தாக்கப்படுவதற்குமுன்னாலேதான். ஸ்டாலினுக்குத் திருகோணமலையின் நிகழ்வுகள் பற்றித் தெரியாதென்றால், பேசாமலிருந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, அவரது கிழக்கின் காவலர்பிரதேசத்துக்குள்ளே திருகோணமலையையும் சேர்க்கும் அநாவசியமான தேவையில்லை. யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கத்தாலேயே கிழக்குக்கு இந்நிலை என்று வரையும் ஸ்டாலினின் வாதத்தின்படி பார்த்தால், கல்லோயாத்திட்டத்தினைக் கொண்டு இனவிகிதாசாரத்தினை மாற்ற பாரம்பரியப்பிரதேசங்களிலிருந்து தமிழ், முஸ்லீம்களை விரட்டியதும் தமிழ் என்ற மொழி ரீதியிலான இரண்டாம்பட்சக்குடிமகனாகச் செய்ததும் யாழ்ப்பாணமேலாதிக்கமா? வடக்குமேலாதிக்கத்தின்படிதான் கிழக்கு அமுக்கப்பட்டதென்றால், மட்டக்கிளப்பிலிருந்து வந்து திருகோணமலையைத் தனதென்று உரிமை கொள்ள ஸ்டாலினின் மேலாதிக்கம் எவ்வகைப்பட்டது? கிழக்கிலே யாழ்மேலாதிக்கத்தினைச் சுட்டிக்காட்டுகின்றவர்களும் அதற்குமுன்னாலே யாழ்ப்பாணத்திலேயிருந்து போய்க் குடியேறியவர்கள்தான் என்பதைக் கிண்டி யாராவது பதிவு போடுவார்களாக.

*******
புரிதலின்றி எழுதப்பட்டதோ என்று தோன்றுவகையிலே சில வரிகளைச் சொல்லும் மூன்றாவது ஆள், மிதக்கும் வெளி சுகுணா திவாகர்; ஈழம் தொடர்பான அவருடைய கருத்து & நிலைப்பாடு(ம் அ. மார்க்ஸின் நிலைப்பாடும்) பிரான்ஸின் ஷோபா சக்தியினதும் அவரது நண்பர்களினதும் வழியான புரிதலே என்பது அவதானித்த வரையிலே என் புரிதல்; நான் தவறாகவுமிருக்கலாம். முன்னர் அவருடைய இடுகையொன்றிலே, ஒரு கவிதையின் பின்னாலே, ஈழம் தொடர்பான சில பின்னூட்டங்கள் நானும் அவரும் குழலியும் எழுதிக்கொண்டது ஞாபகமுண்டு. அவரின் அண்மைய தமிழகத்திலே ஈழத்தின் ஆதரவாளர்கள் குறித்த பதிவிலே சில கருத்துகளோடு முற்றாக உடன்படுகிறேன் (தமிழகத்தின் சில திராவிட அரசியல்வாதிகளின் இரட்டைநிலை); சிலவற்றிலே பேசுவதற்கு எனக்கு விபரம் பத்தாதென்பதும் ஈடுபாடில்லையென்பதும் உண்மை (நெடுமாறனின் சாதி + பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருது); சில விடயங்களிலே பேச அவருக்குப் பிடிப்பதில்லையென்பதையும் கண்டிருக்கின்றேன் (நெடுமாறன், அருணாசலம் இவர்களைப் பற்றிச் சாதியச்சார்பாளர்கள் என்ற கருத்தினைத் தெரிவித்த சுகுணாவுக்கு வளர்மதி சிவக்குமாரின் சாதியைச் சொன்னவுடன் மழையிலே அழுதுகொண்டு நடக்கத்தோன்றிவிடுகின்றது - அவர் வெகுகாலமாகப் பக்கத்திலே பார்த்திருந்து அறிந்த ஈழத்தின் இலண்டன் பத்மநாப ஐயர் எதற்கு ஐயர் இன்னும் கொழுவிக்கொண்டிருக்கின்றார் என்ற கேள்வி வரும்வரை). அதனால், இங்கே அவரின் இடுகையிலிருந்து இரண்டு கருத்துகளின் அபத்தம் பற்றிக் கேட்க விரும்புகிறேன்


"தமிழ்த்தேசியம்....ஆனால் (ஏன், ஈழத்திலும் கூட) சாதியக் கறைபடிந்த இந்துத்துவச் சார்போடேயே உள்ளது."


இதற்கு ஆதாரம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பாரிஸின் தலித் மகாநாட்டிலே எம். ஆர் ஸ்டாலினின் பேச்சு மும்பாய் புதியமாதவி சங்கரனுக்குத் தந்த மெய்ஞானம் போலவோ, சத்தியக்கடதாசி என்று நண்பரின் வலைப்பதிவியோ காட்டினாலும் சரிதான். தமிழகத்தின் வர்ணாச்சிரமத்தின் பிரமிட்டுவாழ்நிலைத்தட்டினை அப்படியே ஈழத்துக்கும் நகர்த்தி அதனூடாகப் பார்க்கும் பலரிடமிருந்து வாசிப்பு நிறைந்தவராகத் தோன்றிய சுகுணா திவாகர் கொஞ்சம் விலகி நிலைமைக்கு அண்மித்த கண்ணோட்டத்தோடு பார்த்திருப்பார் என்று எதிர்பார்த்தது தவறோ தெரியவில்லை. தமிழ்த்தேசியம் ஈழத்திலே இந்துக்களை (வேளாள= பிள்ளைமார் சைவர்களை??) மட்டுமேதான் பற்றிப்பிடித்திருக்கின்றதா? ரொக்கிராஜுகளுக்கும் அந்தோனிசாமிகளுக்கும் ஸ்ரனிஸ்லாசுகளுக்கும் சார்ள்ஸ் அன்ரனிகளுக்கும் தமிழ்ச்செல்வன்களுக்கும் சாதியக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடுதான் அடித்திருக்கிறதா? மேலே ஸ்டாலினின் கருத்தின்பின்னாலே குறிப்பிட்ட மாதிரி, குடியேற்றத்திட்டங்களும் சிங்களமொழிச்சட்டமும் யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க நோக்கு என்று சத்தியக்கடதாசி பட்டியல் போட்டுக் கட்டுரையிட்ட பல்கலைக்கழகக்கல்வியும் சாதி இந்துக்களைமட்டுமேதான் தாக்கியதா? ஸ்ரீலங்கா இராணுவமும் அப்படியாகத்தான் சாதியம் கேட்டுத் தாக்கியதா? தமிழ்த்தேசியம் இலங்கையிலும் சாதியக்கரை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளதாக, தமிழச்சிக்கு எடுத்துச் சொல்லும் சுகுணா எங்களுக்கும் அதற்கான "இராணுவம் துரத்தியபோது, கோவிலுக்குள்ளே சாதி குறைந்தவர்களை இன்ன இடத்திலே இவர்கள் விடவில்லை; ஆகவே, தமிழ்த்தேசியம் சாதிக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளது" என்றது மாதிரியான ஆதாரங்களைத் தந்தால், நாங்களும் தெளிவு பெறலாமே? "தமிழ்த்தேசியம் = இந்துத்தமிழர்", "சிங்களத்தேசியம்=சிங்கள பௌத்தர்" என்பதுபோன்ற சிவசேனா சிந்தனை / HINDRAF Philosophy எப்போது சுகுணாவுக்கும் வந்ததென்று அறிந்தால், நமக்கும் புரிதல் கிடைக்குமென்று நம்பலாம். [தமிழ்த்தேசியவாதிகளிலே சாதியக்கறை படைத்தவர்கள் இருப்பது மறுப்பதற்கில்லை; இல்லாதவர்களும் எத்தனை வீதமென்று இலங்கையிலுஞ்சரி இந்தியாவிலுஞ்சரி எண்ணிப்பார்க்கவேண்டாமா? மற்றப்பக்கம், தமிழ்த்தேசியவாதிகள் அல்லாதவரிடமுமேதான் அதே சாதியக்கறை கிடக்கிறது - இலங்கையிலும் இந்தியாவிலும். ]


அவருடைய அடுத்த கருத்து:

"தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை."


விடுதலைப்புலிகள் என்றால், ஈழத்தமிழர்களை வெறுக்கும் தமிழ்நாட்டின் தேசியவாதிகளும் அல்லாத இரட்டைப்படகு பெரியாரிய-தலித்போராளிகளான உங்களைப் போன்றவர்களுங்கூட, திட்டித்தள்ளுகின்றீர்கள். சென்னையிலே தகுந்த ஆவண & அனுமதி அடையாளங்களையும் கையிலே காசையையும் வைத்துக்கொண்டும் வீடெடுக்க, தமிழ்நதி ஈழத்தமிழர் என்ற முகவரியோடு பட்ட க(வி)தையைக் கேட்டு, "வெட்கப்படுகின்றேன்; வேதனைப்படுகின்றேன்" என்று இத்தனை கவிதைகள் வந்த பின்னால், புலம்பெயர் தமிழர்கள் தமிழகத்திலே வசிக்கும் அகதித்தமிழர்கள் பற்றிக் கவலைப்பட்டாலுங்கூட, என்ன செய்ய முடியுமென்கிறார், சுகுணா திவாகர்? ஆழியூரானோ வரவனையானோ போய்ப் பார்த்து எழுதிய கட்டுரைகள், இரவிக்குமார் கட்டுரை வாசித்துத்தான் இப்படியான அகதிகள் நிலையே தமிழகத்திலேயிருக்கும் மக்களுக்கே அப்போது இப்போது தெரிகின்றது? இந்நிலையிலே, புலம்பெயர்தமிழர்கள் என்ன செய்யமுடியுமென்று எண்ணுகின்றார்? அகதி முகாமிலே இருப்பவர்களுக்கான கெடுபிடிகளின்பின்னால், உதவ விரும்புகின்றவர்கள்தான் உதவமுடியுமா? உதவி பெற விரும்புகின்ற அகதிதான் பெற்றுவிடவோ பெற்றுவிட்டால் "வால் அடையாளம்" சேராமல் இருக்கமுடியுமா? அகதிகளோடு தொடர்புள்ள தன்னார்வ இயக்கமாகக் காட்டிக் கொள்வதை நடத்து செல்வநாயத்தின் மகன் சந்திரஹாசன், சுப்பிரமணியசுவாமியினதும் இந்திய அரசினதும் சட்டைப்பை பொமரேனியன் என்றுதான் ரீடிப்பிலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே வாசித்த கட்டுரையிலிருந்து உணர்ந்துகொள்ளமுடிகின்றது. எவ்விதத்திலே, ஈழத்தமிழர்கள் உதவ வந்தாலுங்கூட, உதவமுடியும்?

சாதாரணமான இயக்கம் சாராத ஈழத்தமிழர்களுக்கே உதவமுடியாமல் நிலமை இப்படியிருக்க, "தமிழக ஈழ அகதித்தமிழர்கள் குறித்து, விடுதலைப்புலிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்று எழுதும் சுகுணா திவாகரின் அவசரத்தினை எண்ணித்தான் கவலைப்பட முடிகின்றது. இதுவரைக்கும், விடுதலைப்புலிகள் தமிழக அகதிகள் குறித்துக் கவலைப்படுவது குறித்து வாசனும் ஜெஜெயும் மட்டுமேதான் அதிகம் கவலைப்பட முடியுமென்று எண்ணியிருந்தேன்.

நிற்க; இந்த அகதிகளைப் பற்றி சுகுணா திவாகரின் புலம்பெயர்ந்த நண்பர்கள் எத்துணை கவலைப்படுகின்றார்கள்? தமிழகம் வரும்போதெல்லாம், அகதிகளைக் காணச் சென்று என்ன செய்கிறார்கள்? அவற்றினைப் பற்றியும் அறிய ஆவல். இவர்களை மையமாக வைத்து நந்தாவும் இராமேஸ்வரமும் எடுக்கும் படத்துறையினர்தான் கவலைப்படுகின்றார்களா? புன்னகைமன்னனிலே பாலச்சந்தரும் கமல்ஹாசனும் கெட்டவர்களாகக் காட்டிவிட்டுப்போனார்கள். இப்போது, இராமேஸ்வரம் வந்தும் இந்தப்படத்துறையினர் உதவி செய்கிறார்களா?

தனிப்பட்ட நிலையிலே, என்னைப் பொறுத்தமட்டிலே, குறைந்தபட்சம் இந்த அகதிகளேனும் உயிருக்கு அதிகம் அஞ்சாமல், அன்றைய நாளுக்கு நிம்மதியாக இருக்கின்றார்கள்; சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து உயிருக்கும் உணவுக்கும் அஞ்சுகின்றவர்களுக்கு முதன்மையிடம் உதவுவதிலே கொடுப்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக்கூடிய ஒரு தேவையாகவிருக்கும்.

*******

நான்காவது கருத்து, புதியமாதவி சங்கரன் பாரிஸின் தலித் மகாநாட்டிலே கலந்து கொண்டபின்னால், கண்ணை வெளிச்சம் திறந்தது (கூசியது??) என்பதுபோல, கீற்றிலே ஒரு கருத்தரங்கு(ப்பயணக்)கட்டுரை வரைந்திருக்கின்றார். தமிழச்சி, அ. மார்க்ஸின் முன்னுரையோடு வந்த ஈழத்துத்தலித் சிறுகதைகளைப் படித்ததோடு ஈழத்திலே தலித்திய நிலை இதுதான் என்பதுபோல முகவுரை எடுத்து எழுதியதற்கு ஒப்பான கட்டுரை புதியமாதவியனது. ஒரு விமானப்பயணக்கட்டுரைகள் எல்லாம் இப்படியாகத்தான் ஒரு புறப்பார்வையினைத் தரும் ஒரு கருத்தரங்கோடு வருமோ என்று தோன்றுகிறது - புலி ஆதரவுக்கூட்டங்களும் இப்படித்தான்; புலியெதிர்ப்புக்கூட்டங்களும் இப்படித்தான். (இயக்குநர் சீமான் அண்மையிலே கனடாவிலே ஈழத்தமிழர்கள் மத்தியிலே பேசும்போது, "ஈழத்திலே தமிழ்மக்கள் படும் துயரங்கள் உங்களுக்குத் தெரியாது; தெரிந்தவன் நான் சொல்கிறேன் கேளுங்கள்" என்ற விதத்திலே (சரியான வரிகள் ஞாபகமில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்) பேசினார் என்பதை ஒரு நண்பர் சொன்னார்; அதுவல்ல அங்கே முக்கியம், கேட்டுக்கொண்டிருந்த ஈழத்திலேயிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அவ்வரிகளுக்கு ஓங்கிக் கைதட்டினார்களாம்.)

புதியமாதவியை பாரதிதாசனின் தமிழ்த்தேசியத்தோடு உலகத்தமிழ்-யாஹூ குழுமத்திலே ஐந்தாறு ஆண்டுகளின் பின்னாலே பார்த்திருக்கிறேன்; பதிவுகள்.கொம்மிற்காக மும்பாயிலே ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவுக்கவிஞர் அறிவுமதியை, அவரின் கருத்தோடோடிச் செவ்வி கண்டு போட்டிருப்பதையும் பார்த்திருக்கின்றேன். இப்போது, மேலே சொன்ன, கருணாவின் காசுகளைப் பாரிசிலே முதலீடு செய்திருக்கின்றார் என்று கருணைதாசன் என்ற ஒருவர் அறிக்கைவிட, அதை மறுத்து, ஆனால், கருணாவின் கிழக்குத்தலைமையை வரவேற்கும் தோழர் எம். ஆர். ஸ்ராலின் ஈழத்திலே சாதியமே இன்றைய பிரச்சனையென்று கரகோஷத்திடையே சுட்டிக்காட்டியதை, ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவாள தமிழக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாளவளவன் அறிந்து கொள்ளவேண்டுமென்று புதியமாதவி கண் திறந்து சொல்கிறார்.

அதாவது, தமிழத்தேசியமேதான் ஈழச்சாதியத்துக்கான அடிப்படைக்காரணம்... அல்லது சுகுணா திவாகர் சொன்னது மாதிரியாக, தமிழ்த்தேசியமே சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமேதான்.... சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமென்றால், கிழக்கிலே கழுதாவளையிலேயில்லாத, வடக்கின் மேலாதிக்கத்திலே வந்ததாக எம். ஆர். ஸ்ராலின் சொல்லும் தமிழ்த்தேசியமேதான்.... அந்தத்தமிழ்த்தேசியம் வருவதற்குமுன்னால், அல்லது அது அழிந்துபோனால், சாதியமே அறியாத முன்னைய சமாஜவாதி, பருத்தித்துறையின் பெரும்பிறப்பும் கிளிநொச்சியின் குடியிருப்புமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி சொல்லும் அல்லது எம். ஆர். ஸ்ராலின் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னால் கண்ட சமரசம் உலாவும் ஸ்ரீலங்காவின் சாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயம் நிலவும்.

நம்புவோம்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home